நம்பியாண்டார் நம்பி அருளியது
பதினோராம் திருமுறை
1. திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை
வெண்பா
1020
என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான் - புன்னை
விரசுமகிழ் சோலை வியன்நாரை யூர்முக்கண்
அரசுமகிழ் அத்திமுகத் தான்.
1
கட்டளைக் கலித்துறை
1021
முகத்தாற் கரியன்என் றாலும் தனையே முயன்றவர்க்கு
மிகத்தான் வெளியன்என் றேமெய்ம்மை உன்னும் விரும்படியார்
அகத்தான் திகழ்திரு நாரையூர் அம்மான் பயந்தஎம்மான்
உகத்தா னவன்தன் உடலம் பிளந்த ஒருகொம்பனே.
2
வெண்பா
1022
கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே
வம்பனைய மாங்கனியை நாரையூர் - நம்பனையே
தன்னவலம் செய்துகொளும் தாழ்தடக்கை யாய்என்நோய்
பின்னவலம் செய்வதெனோ பேசு.
3
கட்டளைக் கலித்துறை
1023
பேசத் தகாதெனப் பேயெரு தும்பெருச் சாளியும்என்
றேசத் தகும்படி ஏறுவ தேயிமை யாதமுக்கட்
கூசத் தகுந்தொழில் நுங்கையும் நுந்தையும் நீயும்இந்தத்
தேசத் தவர்தொழு நாரைப் பதியுள் சிவக்களிறே.
4
வெண்பா
1024
களிறு முகத்தவனாய்க் காயம்செந் தீயின்
ஒளிறும் உருக்கொண்ட தென்னே - அளறுதொறும்
பின்நாரை யூர்ஆரல் ஆரும் பெரும்படுகர்
மன்நாரை யூரான் மகன்.
5
கட்டளைக் கலித்துறை
1025
மகத்தினில் வானவர் பல்கண் சிரம்தோள் நெரித்தருளும்
சுகத்தினில் நீள்பொழில் நாரைப் பதியுட் சுரன்மகற்கு
முகத்தது கைஅந்தக் கையது மூக்கந்த மூக்கதனின்
அகத்தது வாய்அந்த வாயது போலும் அடுமருப்பே.
6
வெண்பா
1026
மருப்பைஒரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பைஅடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்தஎண்ணு கின்றஎறும் பன்றே அவரை
வருந்தஎண்ணு கின்ற மலம்.
7
கட்டளைக் கலித்துறை
1027
மலஞ்செய்த வல்வினை நோக்கி உலகை வலம்வருமப்
புலஞ்செய்த காட்சிக் குமரற்கு முன்னே புரிசடைமேற்
சலஞ்செய்த நாரைப் பதியரன் தன்னைக் கனிதரவே
வலஞ்செய்து கொண்ட மதக்களி றேஉன்னை வாழ்த்துவனே.
8
வெண்பா
1028
வனஞ்சாய வல்வினைநோய் நீக்கி வனசத்
தனஞ்சாய லைத்தருவான் அன்றோ - இனஞ்சாயத்
தேரையூர் நம்பர்மகன் திண்தோள் நெரித்தருளும்
நாரையூர் நம்பர்மக னாம்.
9
கட்டளைக் கலித்துறை
1029
நாரணன் முன்பணிந் தேத்தநின் றெல்லை நடாவியவத்
தேரண வும்திரு நாரையூர் மன்னு சிவன்மகனே
காரண னேஎம் கணபதி யேநற் கரிவதனா
ஆரண நுண்பொரு ளேயென் பவர்க்கில்லை அல்லல்களே.
10
வெண்பா
1030
அல்லல் களைந்தான்தன் அம்பொன் உலகத்தின்
எல்லை புகுவிப்பான் ஈண்டுழவர் - நெல்லல்களை
செங்கழுநீர் கட்கும் திருநாரை யூர்ச்சிவன்சேய்
கொங்கெழுதார் ஐங்கரத்த கோ.
11
கட்டளைக் கலித்துறை
1031
கோவிற் கொடிய நமன்தமர் கூடா வகைவிடுவன்
காவிற் திகழ்தரு நாரைப் பதியிற் கரும்பனைக்கை
மேவற் கரிய இருமதத் தொற்றை மருப்பின்முக்கண்
ஏவிற் புருவத் திமையவள் தான்பெற்ற யானையையே.
12
வெண்பா
1032
யானேத் தியவெண்பா என்னை நினைந்தடிமை
தானே சனார்த்தனற்கு நல்கினான் - தேனே
தொடுத்தபொழில் நாரையூர்ச் சூலம் வலன்ஏந்தி
எடுத்த மதமுகத்த ஏறு.
13
கட்டளைக் கலித்துறை
1033
ஏறிய சீர்வீ ரணக்குடி ஏந்திழைக் கும்இருந்தேன்
நாறிய பூந்தார்க் குமரற்கும் முன்னினை நண்ணலரைச்
சீறிய வெம்பணைச் சிங்கத்தி னுக்கிளை யானைவிண்ணோர்
வேறியல் பால்தொழு நாரைப் பதியுள் விநாயகனே.
14
வெண்பா
1034
கனமதில்சூழ் நாரையூர் மேவிக் கசிந்தார்
மனமருவி னான்பயந்த வாய்ந்த - சினமருவு
கூசாரம் பூண்டமுகக் குஞ்சரக்கன் றென்றார்க்கு
மாசார மோசொல்லு வான்.
15
கட்டளைக் கலித்துறை
1035
வானிற் பிறந்த மதிதவ ழும்பொழில் மாட்டளிசூழ்
தேனிற் பிறந்த மலர்த்திரு நாரைப் பதிதிகழும்
கோனிற் பிறந்த கணபதி தன்னைக் குலமலையின்
மானிற் பிறந்த களிறென் றுரைப்பர்இவ் வையகத்தே.
16
வெண்பா
1036
வையகத்தார் ஏத்த மதில்நாரை யூர்மகிழ்ந்து
பொய்யகத்தார் உள்ளம் புகலொழிந்து - கையகத்தோர்
மாங்கனிதன் கொம்பண்டம் பாசமழு மல்குவித்தான்
ஆங்கனிநஞ் சிந்தைஅமர் வான்.
17
கட்டளைக் கலித்துறை
1037
அமரா அமரர் தொழுஞ்சரண் நாரைப் பதிஅமர்ந்த
குமரா குமரர்க்கு முன்னவ னேகொடித் தேர்அவுணர்
தமரா சறுத்தவன் தன்னுழைத் தோன்றின னேஎனநின்
றமரா மனத்தவர் ஆழ்நர கத்தில் அழுந்துவரே.
18
வெண்பா
1038
அவமதியா துள்ளமே அல்லலற நல்ல
தவமதியால் ஏத்திச் சதுர்த்தோம் - நவமதியாம்
கொம்பன் விநாயகன்கொங் கார்பொழில்சூழ் நாரையூர்
நம்பன் சிறுவன்சீர் நாம்.
19
கட்டளைக் கலித்துறை
1039
நாந்தன மாமனம் ஏத்துகண் டாய்என்றும் நாண்மலரால்
தாந்தன மாக இருந்தனன் நாரைப் பதிதன்னுளே
சேர்ந்தன னேஐந்து செங்கைய னேநின் திரள்மருப்பை
ஏந்தின னேஎன்னை ஆண்டவ னேஎனக் கென்னையனே.
20
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

நம்பியாண்டார் நம்பி அருளியது
பதினோராம் திருமுறை
2. கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
கட்டளைக் கலித்துறை
1040
நெஞ்சந் திருவடிக் கீழ்வைத்து நீள்மலர்க் கண்பனிப்ப
வஞ்சம் கடிந்துன்னை வந்தித்தி லேன்அன்று வானர்உய்ய
நஞ்சங் கருந்து பெருந்தகை யேநல்ல தில்லைநின்ற
அஞ்செம் பவளவண் ணாஅருட்கு யான்இனி யாரென்பரே.
1
1041
என்பும் தழுவிய ஊனும் நெகஅக மேஎழுந்த
அன்பின் வழிவந்த ஆரமிர் தேஅடி யேன்உரைத்த
வன்புன் மொழிகள் பொறுத்திகொ லாம்வளர் தில்லைதன்னுள்
மின்புன் மிளிர்சடை வீசிநின் றாடிய விண்ணவனே.
2
1042
அவநெறிக் கேவிழப் புக்கஇந் நான்அழுந் தாமைவாங்கித்
தவநெறிக் கேஇட்ட தத்துவ னேஅத் தவப்பயனாம்
சிவநெறிக் கேஎன்னை உய்ப்பவ னேசென னந்தொறுஞ்செய்
பவமறுத் தாள்வதற் கோதில்லை நட்டம் பயில்கின்றதே.
3
1043
பயில்கின் றிலேன்நின் திறத்திரு நாமம் பனிமலர்த்தார்
முயல்கின் றிலேன் நின் திருவடிக் கேஅப்ப முன்னுதில்லை
இயல்கின்ற நாடகச் சிற்றம் பலத்துள்எந் தாய்இங்ஙனே
அயர்கின்ற நான்எங்ங னேபெறு மாறுநின் னாரருளே.
4
1044
அருதிக்கு விம்மி நிவந்ததோ வெள்ளிக் குவடதஞ்சு
பருதிக் குழவி உமிழ்கின்ற தேஒக்கும் பற்றுவிட்டோர்
கருதித் தொழுகழற் பாதமும் கைத்தலம் நான்கும்மெய்த்த
சுருதிப் பதம்முழங் குந்தில்லை மேய சுடரினுக்கே.
5
1045
சுடலைப் பொடியும் படுதலை மாலையும் சூழ்ந்தஎன்பும்
மடலைப் பொலிமலர் மாலைமென் தோள்மேல் மயிர்க்கயிறும்
அடலைப் பொலிஅயில் மூவிலை வேலும் அணிகொள்தில்லை
விடலைக்கென் ஆனைக் கழகிது வேத வினோதத்தையே.
6
1046
வேத முதல்வன் தலையும் தலையாய வேள்விதன்னுள்
நாதன் அவன்எச்சன் நற்றலை யும்தக்க னார்தலையும்
காதிய தில்லைச்சிற் றம்பலத் தான்கழல் சூழந்துநின்று
மாதவர் என்னோ மறைமொழி யாலே வழுத்துவதே.
7
1047
வழுத்திய சீர்த்திரு மால்உல குண்டவன் பாம்புதன்னின்
கழுத்தரு கேதுயின் றானுக்கப் பாந்தளைக் கங்கணமாச்
செழுத்திரள் நீர்த்திருச் சிற்றம் பலத்தான் திருக்கடையிட
அழுத்திய கல்லொத் தனன்ஆயன் ஆகிய மாயவனே.
8
1048
மாயவன் முந்நீர்த் துயின்றவன் அன்று மருதிடையே
போயவன் காணாத பூங்கழல் நல்ல புலத்தினர்நெஞ்
சேயவன் சிற்றம் பலத்துள்நின் றாடுங் கழல்எவர்க்கும்
தாயவன் தன்பொற் கழல்என் தலைமறை நன்னிழலே.
9
1049
நிழல்படு பூண்நெடு மால்அயன் காணாமை நீண்டவரே
தழல்படு பொன்னகல் ஏந்தித் தமருகந் தாடித்தமைத்
தெழில்பட வீசிக் கரமெறி நீர்த்தில்லை அம்பலத்தே
குழல்படு சொல்வழி ஆடுவர் யாவர்க்கும் கூத்தினையே.
10
1050
கூத்தனென் றுந்தில்லை வாணன்என் றும்குழு மிட்டிமையோர்
ஏத்தனென் றுஞ்செவி மாட்டிசை யாதே இடுசுணங்கை
மூத்தவன் பெண்டீர் குணலையிட் டாலும் முகில்நிறத்த
சாத்தனென் றாலும் வருமோ இவளுக்குத் தண்ணெனவே.
11
1051
தண்ணார் புனல்தில்லைச் சிற்றம்பலந்தன்னில் மன்னிநின்ற
விண்ணாள னைக்கண்ட நாள்விருப் பாயென் உடல்முழுதும்
கண்ணாங் கிலோதொழக் கையாங் கிலோதிரு நாமங்கள்கற்
றெண்ணாம் பரிசெங்கும் வாயாங்கி லோஎனக் கிப்பிறப்பே.
12
1052
பிறவியிற் பெற்ற பயனொன்று கண்டிலம் பேரொலிநீர்
நறவியல் பூம்பொழில் தில்லையுள் நாடகம் ஆடுகின்ற
துறவியல் சோதியைச் சுந்தரக் கூத்தனைத் தொண்டர்தொண்டர்
உறவியல் வாற்கண்கள் கண்டுகண் டின்பத்தை உண்டிடவே.
13
1053
உண்டேன் அவரருள் ஆரமிர் தத்தினை உண்டலுமே
கண்டேன் எடுத்த கழலும் கனலும் கவித்தகையும்
ஒண்டேன் மொழியினை நோக்கிய நோக்கும் ஒளிநகையும்
வண்டேன் மலர்த்தில்லை அம்பலத் தாடும் மணியினையே.
14
1054
மணியொப் பனதிரு மால்மகு டத்து மலர்க்கமலத்
தணியொப் பனஅவன் தன்முடி மேல்அடி யேன்இடர்க்குத்
துணியச் சமைந்தநல் லீர்வாள் அனையன சூழ்பொழில்கள்
திணியத் திகழ்தில்லை அம்பலத் தான்தன் திருந்தடியே.
15
1055
அடியிட்ட கண்ணினுக் கோஅவன் அன்பினுக் கோஅவுணர்
செடியிட்ட வான்துயர் சேர்வதற் கோதில்லை அம்பலத்து
முடியிட்ட கொன்றைநன் முக்கட் பிரான்அன்று மூவுலகும்
அடியிட்ட கண்ணனுக் கீந்தது வாய்ந்த அரும்படையே.
16
1056
படைபடு கண்ணிதன் பங்கதென் தில்லைப் பரம்பரவல்
விடைபடு கேதுக விண்ணப்பம் கேள்என் விதிவசத்தால்
கடைபடு சாதி பிறக்கினும் நீவைத் தருளுகண்டாய்
புடைபடு கிங்கிணித் தாட்செய்ய பாதம்என் னுள்புகவே.
17
1057
புகவுகிர் வாளெயிற் றால்நிலம் கீண்டு பொறிகலங்கி
மிகவுகு மாற்கரும் பாதத்த னேல்வியன் தில்லைதன்னுள்
நகவு குலாமதிக் கண்ணியற் கங்கணன் என்றனன்றும்
தகவு கொலாந்தக வன்று கொலாமென்று சங்கிப்பனே.
18
1058
சங்கோர் கரத்தன் மகன்தக்கன் தானவர் நான்முகத்தோன்
செங்கோல இந்திரன் தோள்தலை ஊர்வேள்வி சீர்உடலம்
அங்கோல வெவ்வழ லாயிட் டழிந்தெரிந் தற்றனவால்
எங்கோன் எழில்தில்லைக் கூத்தன் கடைக்கண் சிவந்திடவே.
19
1059
ஏவுசெய் மேருத் தடக்கை எழில்தில்லை அம்பலத்து
மேவுசெய் மேனிப் பிரான்அன்றி அங்கணர் மிக்குளரே
காவுசெய் காளத்திக் கண்ணுதல் வேண்டும் வரங்கொடுத்துத்
தேவுசெய் வான்வாய்ப் புனலாட் டியதிறல் வேடுவனே.
20
1060
வேடனென் றாள்வில் விசயற்கு வெங்கணை அன்றளித்த
கோடனென் றாள்குழைக் காதனென் றாள்இடக் காதில்இட்ட
தோடனென் றாள்தொகு சீர்த்தில்லை அம்பலத் தாடுகின்ற
சேடனென் றாள்மங்கை அங்கைச் சரிவளை சிந்தினவே.
21
1061
சிந்திக் கவும்உரை யாடவும் செம்மல ராற்கழல்கள்
வந்திக் கவும்மனம் வாய்கரம் என்னும் வழிகள்பெற்றும்
சந்திக் கிலர்சிலர் தெண்ணர்தண் ணார்தில்லை அம்பலத்துள்
அந்திக் கமர்திரு மேனிஎம் மான்தன் அருள்பெறவே.
22
1062
அருள்தரு சீர்த்தில்லை அம்பலத் தான்தன் அருளி னன்றிப்
பொருள்தரு வானத் தரசாத லிற்புழு வாதல்நன்றாம்
சுருள்தரு செஞ்சடை யோன்அரு ளேல்துற விக்குநன்றாம்
இருள்தரு கீழேழ் நரகத்து வீழும் இருஞ்சிறையே.
23
1063
சிறைப்புள வாம்புனல் சூழ்வயல் தில்லைச் சிற்றம்பலத்துப்
பிறைப்பிள வார்சடை யோன்திரு நாமங்க ளேபிதற்ற
மிறைப்புள வாகிவெண் ணீறணிந் தோடேந்தும் வித்தகர்தம்
உறைப்புள வோஅயன் மாலினொ டும்பர்தம் நாயகற்கே.
24
1064
அகழ்சூழ் மதில்தில்லை அம்பலக் கூத்த அடியம்இட்ட
முகிழ்சூழ் இலையும் முகைகளும் ஏயுங்கொல் கற்பகத்தின்
திகழ்சூழ் மலர்மழை தூவித் திறம்பயில் சிந்தையராய்ப்
புகழ்சூழ் இமையவர் போற்றித் தொழும்நின் பூங்கழற்கே.
25
1065
பூந்தண் பொழில்சூழ் புலியூர்ப் பொலிசொம்பொன் அம்பலத்து
வேந்தன் தனக்கன்றி ஆட்செய்வ தென்னே விரிதுணிமேல்
ஆந்தண் பழைய அவிழைஅன் பாகிய பண்டைப்பறைச்
சேந்தன் கொடுக்க அதுவும் திருவமிர் தாகியதே.
26
1066
ஆகங் கனகனைக் கீறிய கோளரிக் கஞ்சிவிண்ணோர்
பாகங் கனங்குழை யாய்அரு ளாயெனத் தில்லைப்பிரான்
வேகந் தருஞ்சிம்புள் விட்டரி வெங்கதஞ் செற்றிலனேல்
மோகங் கலந்தன் றுலந்ததன் றோஇந்த மூவுலகே.
27
1067
மூவுல கத்தவர் ஏத்தித் தொழுதில்லை முக்கட்பிராற்
கேவு தொழில்செய்யப் பெற்றவர் யாரெனில் ஏர்விடையாய்த்
தாவு தொழிற்பட் டெடுத்தனன் மால்அயன் சாரதியா
மேவிர தத்தொடு பூண்டதொன் மாமிக்க வேதங்களே.
28
1068
வேதகச் சிந்தை விரும்பிய வன்தில்லை அம்பலத்து
மேதகக் கோயில்கொண் டோன்சேய வன்வீ ரணக்குடிவாய்ப்
போதகப் போர்வைப் பொறிவாள் அரவரைப் பொங்குசினச்
சாதகப் பெண்பிளை தன்னையன் தந்த தலைமகனே.
29
1069
தலையவன் பின்னவன் தாய்தந்தை இந்தத் தராதலத்து
நிலையவம் நீக்கு தொழில்புரிந் தோன்நடு வாகிநின்ற
கொலையவன் சூலப் படையவன் ஆலத்தெழு கொழுந்தின்
இலையவன் காண்டற் கருந்தில்லை அம்பலத் துள்இறையே.
30
1070
இறையும் தெளிகிலர் கண்டும் எழில்தில்லை அம்பலத்துள்
அறையும் புனற்சென்னி யோன்அரு ளால்அன் றடுகரிமேல்
நிறையும் புகழ்த்திரு வாரூ ரனும்நிறை தார்பரிமேல்
நறையுங் கமழ்தொங்கல் வில்லவ னும்புக்க நல்வழியே.
31
1071
நல்வழி நின்றார் பகைநன்று நொய்யர் உறவிலென்னும்
சொல்வழி கண்டனம் யாம்தொகு சீர்த்தில்லை அம்பலத்து
வில்வழி தானவர் ஊர்எரித் தோன்வியன் சாக்கியனார்
கல்வழி நேர்நின் றளித்தனன் காண்க சிவகதியே.
32
1072
கதியே அடியவர் எய்ப்பினில் வைப்பாக் கருதிவைத்த
நிதியே நிமிர்புன் சடைஅமிர் தேநின்னை என்னுள்வைத்த
மதியே வளர்தில்லை அம்பலத் தாய்மகிழ் மாமலையாள்
பதியே பொறுத்தரு ளாய்கொடி யேன்செய்த பல்பிழையே.
33
1073
பிழையா யினவே பெருக்கிநின் பெய்கழற் கன்புதன்னில்
நுழையாத சிந்தையி னேனையும் மந்தா கினித்துவலை
முழையார் தருதலை மாலை முடித்த முழுமுதலே
புழையார் கரியுரித் தோய்தில்லை நாத பொறுத்தருளே.
34
1074
பொறுத்தில னேனும்பன் னஞ்சினைப் பொங்கெரி வெங்கதத்தைச்
செறுத்தில னேனும்நந் தில்லைப் பிரான்அத் திரிபுரங்கள்
கறுத்தில னேனுங் கமலத் தயன்கதிர் மாமுடியை
அறுத்தில னேனும் அமரருக் கென்கொல் அடுப்பனவே.
35
1075
அடுக்கிய சீலைய ராய்அகல் ஏந்தித் தசைஎலும்பில்
ஒடுக்கிய மேனியோ டூண்இரப் பார்ஒள் இரணியனை
நடுக்கிய மாநர சிங்கனைச் சிம்புள தாய்நரல
இடுக்கிய பாதன்தன் தில்லை தொழாவிட்ட ஏழையரே.
36
1076
ஏழையென் புன்மை கருதா திடையறா அன்பெனக்கு
வாழிநின் பாத மலர்க்கே மருவ அருளுகண்டாய்
மாழைமென் நோக்கிதன் பங்க வளர்தில்லை அம்பலத்துப்
போழிளந் திங்கள் சடைமுடி மேல்வைத்த புண்ணியனே.
37
1077
புண்ணிய னேஎன்று போற்றி செயாது புலன்வழியே
நண்ணிய னேற் கினி யாது கொலாம்புகல் என்னுள்வந்திட்
டண்ணிய னேதில்லை அம்பல வாஅலர் திங்கள் வைத்த
கண்ணிய னேசெய்ய காமன் வெளுப்பக் கறுத்தவனே.
38
1078
கறுத்தகண் டாஅண்ட வாணா வருபுனற் கங்கைசடை
செறுத்தசிந் தாமணி யேதில்லை யாய்என்னைத் தீவினைகள்
ஒறுத்தல்கண் டால்சிரி யாரோ பிறர்என் உறுதுயரை
அறுத்தல்செய் யாவிடின் ஆர்க்கோ வருஞ்சொல் அரும்பழியே.
39
1079
பழித்தக் கவும்இக ழான்தில்லை யான்பண்டு வேட்டுவனும்
பழித்திட் டிறைச்சி கலையன் அளித்த விருக்குழங்கன்
மொழித்தக்க சீர்அதி பத்தன் படுத்திட்ட மீன்முழுதும்
இழித்தக்க என்னா தமிர்துசெய் தான்என் றியம்புவரே.
40
1080
வரந்தரு மாறிதன் மேலும்உண் டோவயல் தில்லைதன்னுள்
புரந்தரன் மால்தொழ நின்ற பிரான்புலைப் பொய்ம்மையிலே
நிரந்தர மாய்நின்ற என்னையும் மெய்ம்மையின் தன்னடியார்
தரந்தரு வான்செல்வத் தாழ்த்தினன் பேசருந் தன்மைஇதே.
41
1081
தன்றாள் தரித்தார் இயாவர்க்கும் மீளா வழிதருவான்
குன்றா மதில்தில்லை மூதூர்க் கொடிமேல் விடைஉடையோன்
மன்றாட வும்பின்னும் மற்றவன் பாதம் வணங்கிஅங்கே
ஒன்றார் இரண்டில் விழுவர்அந் தோசில ஊமர்களே.
42
1082
களைகண் இலாமையும் தன்பொற் கழல்துணை யாம்தன்மையும்
துளைகள் நிலாம்முகக் கைக்கரிப் போர்வைச் சுரம்நினையான்
தளைகள் நிலாமலர்க் கொன்றையன் தண்புலி யூரன்என்றேன்
வளைகள் நிலாமை வணங்கும் அநங்கன் வரிசிலையே.
43
1083
வரித்தடந் திண்சிலை மன்மதன் ஆதலும் ஆழிவட்டம்
தரித்தவன் தன்மகன் என்பதோர் பொற்பும் தவநெறிகள்
தெரித்தவன் தில்லையுள் சிற்றம் பலவன் திருப்புருவம்
நெரித்தலுங் கண்டது வெண்பொடி யேயன்றி நின்றிலவே.
44
1084
நின்றில வேவிச யன்னொடும் சிந்தை களிப்புறநீள்
தென்தில்லை மாநடம் ஆடும் பிரான்தன் திருமலைமேல்
தன்தலை யால்நடந் தேறிச் சரங்கொண் டிழிந்ததென்பர்
கன்றினை யேவிள மேலெறிந் தார்த்த கரியவனே.
45
1085
கருப்புரு வத்திரு வார்த்தைகள் கேட்டலும் கண்பனியேன்
விருப்புரு வத்தினொ டுள்ளம் உருகேன் விதிர்விதிரேன்
இருப்புரு வச்சிந்தை என்னைவந் தாண்டதும் எவ்வணமோ
பொருப்புரு வப்புரி சைத்தில்லை ஆடல் புரிந்தவனே.
46
1086
புரிந்தஅன்பின்றியும் பொய்ம்மையி லேயும் திசைவழியே
விரிந்தகங் கைமலர் சென்னியில் கூப்பில் வியன்நமனார்
பரிந்தவன் ஊர்புகல் இல்லை பதிமூன் றெரியஅம்பு
தெரிந்த எங் கோன்தன் திரையார் புனல்வயல் சேண்தில்லையே.
47
1087
சேண்தில்லை மாநகர்த் திப்பியக் கூத்தனைக் கண்டும்அன்பு
பூண்டிலை நின்னை மறந்திலை ஆங்கவன் பூங்கழற்கே
மாண்டிலை இன்னம் புலன்வழி யேவந்து வாழ்ந்திடுவான்
மீண்டனை என்னைஎன் செய்திட வோசிந்தை நீவிளம்பே.
48
1088
விளவைத் தளர்வித்த விண்டுவும் தாமரை மேல்அயனும்
அளவிற் கறியா வகைநின்ற அன்றும் அடுக்கல் பெற்ற
தளர்விற் றிருநகை யாளும்நின் பாகங்கொல் தண்புலியூர்க்
களவிற் கனிபுரை யுங்கண்ட வார்சடைக் கங்கையனே.
49
1089
கங்கை வலம்இடம் பூவலம் குண்டலம் தோடிடப்பால்
தங்கும் கரவலம் வெம்மழு வீயிடம் பாந்தள்வலம்
சங்கம் இடம்வலம் தோலிடம் ஆடை வலம்அக்கிடம்
அங்கஞ் சரிஅம் பலவன் வலங்காண் இடம்அணங்கே.
50
1090
அணங்கா டகக்குன்ற மாதற வாட்டிய வாலமர்ந்தாட்
கிணங்கா யவன்தில்லை எல்லை மிதித்தலும் என்புருகா
வணங்கா வழுத்தா விழாஎழும் பாவைத் தவாமதர்த்த
குணங்காண் இவள்என்ன என்றுகொ லாம்வந்து கூடுவதே.
51
1091
கூடுவ தம்பலக் கூத்தன் அடியார் குழுவுதொறும்
தேடுவ தாங்கவன் ஆக்கம்அச் செவ்வழி அவ்வழியே
ஓடுவ துள்ளத் திருத்துவ தொண்சுட ரைப்பிறவி
வீடுவ தாக நினையவல் லோர்செய்யும் வித்தகமே.
52
1092
வித்தகச் செஞ்சடை வெண்மதிக் கார்நிறக் கண்டத் தெண்தோள்
மத்தகக் கைம்மலைப் போர்வை மதில்தில்லை மன்னனைத்தம்
சித்தகக் கோயில் இருத்தும் திறத்தா கமிகர்க்கல்லால்
புத்தகப் பேய்களுக் கெங்குத்த தோஅரன் பொன்னடியே.
53
1093
பொன்னம் பலத்துறை புண்ணியன் என்பர் புயல்மறந்த
கன்னம்மை தீரப் புனிற்றுக் கலிக்காமற் கன்றுபுன்கூர்
மன்னு மழைபொழிந் தீர்அறு வேலிகொண் டாங்கவற்கே
பின்னும் பிழைதவிர்ந் தீர்அறு வேலிகொள் பிஞ்ஞகனே.
54
1094
நேசன்அல் லேன்நினை யேன்வினை தீர்க்குந் திருவடிக்கீழ்
வாசநன் மாமல ரிட்டிறைஞ் சேன்என்தன் வாயதனால்
தேசன்என் னானை பொன்னார் திருச் சிற்றம் பலம்நிலவும்
ஈசன்என் னேன்பிறப் பென்னாய்க் கழியுங்கொல் என்தனக்கே.
55
1095
தனந்தலை சக்கரம் வானத் தலைமை குபேரன்தக்கன்
வனந்தலை ஏறடர்த் தோன்வா சவன்உயிர் பல்லுடல்ஊர்
சினந்தலை காலன் பகல்காமன் தானவர் தில்லைவிண்ணோர்
இனந்தலை வன்அரு ளால்முனி வால்பெற் றிகந்தவரே.
56
1096
அவமதித் தாழ்நர கத்தில் இடப்படும் ஆதர்களும்
தவமதித் தொப்பிலர் என்னவிண் ஆளும் தகைமையரும்
நவநிதித் தில்லையுட் சிற்றம் பலத்து நடம்பயிலும்
சிவநிதிக் கேநினை யாரும் நினைந்திட்ட செல்வருமே.
57
1097
வருவா சகத்தினில் முற்றுணர்ந் தோனைவண் தில்லைமன்னைத்
திருவாத வூர்ச்சிவ பாத்தியன் செய்திருச் சிற்றம்பலப்
பொருளார் தருதிருக் கோவைகண் டேயுமற்றப் பொருளைத்
தெருளாத உள்ளத் தவர்கவி பாடிச் சிரிப்பிப்பரே.
58
1098
சிரித்திட்ட செம்பவ ளத்தின் திரளும் செழுஞ்சடைமேல்
விரித்திட்ட பைங்கதிர்த் திங்களும் வெங்கதப் பாந்தளும்தீத்
தரித்திட்ட அங்கையும் சங்கச் சுருளும்என் நெஞ்சினுள்ளே
தெரித்திட்ட வாதில்லைச் சிற்றம் பலத்துத் திருநடனே.
59
1099
நடஞ்செய்சிற் றம்பலத் தான்முனி வென்செய்யும் காமன்அன்று
கொடுஞ்சினத் தீவிழித் தாற்குக் குளிர்ந்தனன் விற்கொடும்பூண்
விடுஞ்சினத் தானவர் வெந்திலர் வெய்தென வெங்கதத்தை
ஒடுங்கிய காலன்அந் நாள்நின் றுதையுணா விட்டனனே.
60
1100
விட்டங் கொளிமணிப் பூண்திகழ் வன்மதன் மெய்யுரைக்கில்
இட்டங் கரியநல் லான்அல்லன் அம்பலத் தெம்பரன்மேல்
கட்டங் கியகணை எய்தலும் தன்னைப்பொன் னார்முடிமேல்
புட்டங்கி னான்மக னாமென்று பார்க்கப் பொடிந்தனனே.
61
1101
பொடியேர் தருமே னியனாகிப் பூசல் புகவடிக்கே
கடிசேர் கணைகுளிப் பக்கண்டு கோயிற் கருவியில்லா
வடியே படஅமை யுங்கணை என்ற வரகுணன்தன்
முடியே தருகழல் அம்பலத் தாடிதன் மொய்கழலே.
62
1102
கழலும் பசுபாச ராம்இமை யோர்தங் கழல்பணிந்திட்
டழலும் இருக்கும் தருக்குடை யோர்இடப் பால்வலப்பால்
தழலும் தமருக மும்பிடித் தாடிசிற் றம்பலத்தைச்
சுழலும் ஒருகால் இருகால் வரவல்ல தோன்றல்களே.
63
1103
தோன்றலை வெண்மதி தாங்கியைத் துள்ளிய மாலயற்குத்
தான்தலை பாதங்கள் சார்எரி யோன்தன்னைச் சார்ந்தவர்க்குத்
தேன்தலை ஆன்பால் அதுகலந் தால்அன்ன சீரனைச்சீர்
வான்தலை நாதனைக் காண்பதென் றோதில்லை மன்றிடையே.
64
1104
மன்றங் கமர்திருச் சிற்றம் பலவ வடவனத்து
மின்றங் கிடைக்குந்தி நாடக மாடக்கொல் வெண்தரங்கம்
துன்றங் கிளர்கங்கை யாளைச் சுடுசினத் தீயரவக்
கன்றங் கடைசடை மேல்அடை யாவிட்ட கைதவமே.
65
1105
தவனைத் தவத்தவர்க் கன்பனைத் தன்அடி எற்குதவும்
சிவனைச் சிவக்கத் திரிபுரத் தைச்சிவந் தானைச் செய்ய
அவனைத் தவளத் திருநீ றனைப்பெரு நீர்கரந்த
பவனைப் பணியுமின் நும்பண்டை வல்வினை பற்றறவே.
66
1106
பற்றற முப்புரம் வெந்தது பைம்பொழில் தில்லைதன்னுள்
செற்றரு மாமணிக் கோயிலில் நின்றது தேவர்கணம்
சுற்றரு நின்புகழ் ஏத்தித் திரிவது சூழ்சடையோய்
புற்றர வாட்டித் திரியும் அதுவொரு புல்லனவே.
67
1107
புல்லறி வின்மற்றைத் தேவரும் பூம்புலி யூருள்நின்ற
அல்லெறி மாமதிக் கண்ணிய னைப்போல் அருளுவரே
கல்லெறிந் தானும்தன் வாய்நீர் கதிர்முடி மேலுகுத்த
நல்லறி வாளனும் மீளா வழிசென்று நண்ணினரே.
68
1108
நண்ணிய தீவினை நாசஞ் செலுத்தி நமனுலகத்
தெண்ணினை நீக்கி இமையோர் உலகத் திருக்கலுற்றீர்
பெண்ணினொர் பாகத்தன் சிற்றம் பலத்துப் பெருநடனைக்
கண்ணினை யார்தரக் கண்டுகை யாரத் தொழுமின்களே.
69
1109
கைச்செல்வம் எய்திட லாமென்று பின்சென்று கண்குழித்தல்
பொய்ச்செல்வர் செய்திடும் புன்மைகட்கே என்றும் பொன்றல்இல்லா
அச்செல்வம் எய்திட வேண்டுதி யேல்தில்லை அம்பலத்துள்
இச்செல்வன் பாதம் கருதிரந் தேன்உன்னை என்நெஞ்சமே.
70
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

நம்பியாண்டார் நம்பி அருளியது
பதினோராம் திருமுறை
3. திருத்தொண்டர் திருவந்தாதி
1110
பொன்னி வடகரை சேர்நாரை யூரில் புழைக்கைமுக
மன்னன் அறுபத்து மூவர் பதிதேம் மரபுசெயல்
பன்னஅத் தொண்டத் தொகைவகை பல்கும்அந் தாதிதனைச்
சொன்ன மறைக்குல நம்பிபொற் பாதத் துணைதுணையே.
1
தில்லைவாழ் அந்தணர்
1111
செப்பத் தகுபுகழ்த் தில்லைப் பதியிற் செழுமறையோர்
ஒப்பப் புவனங்கள் மூன்றினும் உம்பரின் ஊர்எரித்த
அப்பர்க் கமுதத் திருநடர்க் கந்திப் பிறையணிந்த
துப்பர்க் குரிமைத் தொழில்புரி வோர்தமைச் சொல்லுதுமே.
2
திருநீலகண்ட நாயனார்
1112
சொல்லச் சிவன்திரு ஆணைதன்தூமொழி தோள்நசையை
ஒல்லைத் துறந்துரு மூத்ததற் பின்உமை கோன் அருளால்
வில்லைப் புரைநுத லாளோ டிளமைபெற் றின்பமிக்கான்
தில்லைத் திருநீல கண்டக் குயவனாம் செய்தவனே.
3
இயற்பகை நாயனார்
1113
செய்தவர் வேண்டிய தியாதும் கொடுப்பச் சிவன்தவனாய்க்
கைதவம் பேசிநின் காதலி யைத்தரு கென்றலுமே
மைதிகழ் கண்ணியை ஈந்தவன் வாய்ந்த பெரும்புகழ்வந்
தெய்திய காவிரிப் பூம்பட் டினத்துள் இயற்பகையே.
4
இளையான்குடிமாற நாயனார்
1114
இயலா விடைச்சென்ற மாதவற் கின்னமு தாவிதைத்த
வயலார் முளைவித்து வாரி மனைஅலக் கால்வறுத்துச்
செயலார் பயிர்விழுத் தீங்கறி ஆக்கும் அவன்செழுநீர்க்
கயலார் இளையான் குடியுடை மாறன்எங் கற்பகமே.
5
மெய்ப்பொருள் நாயனார்
1115
கற்றநன் மெய்த்தவன் போல்ஒரு பொய்த்தவன் காய்சினத்தால்
செற்றவன் தன்னை அவனைச் செறப்புக லும்திருவாய்
மற்றவன் 'தத்தா நமரே' எனச்சொல்லி வான்உலகம்
பெற்றவன் சேதிபன் மெய்ப்பொரு ளாம்என்று பேசுவரே.
6
விறன்மிண்ட நாயனார்
1116
பேசும் பெருமையவ் வாரூரனையும் பிரானவனாம்
ஈசன் தனையும் புறகுதட் டென்றவன் ஈசனுக்கே
நேசன் எனக்கும் பிரான்மனைக் கேபுக நீடுதென்றல்
வீசும் பொழில்திருச் செங்குன்றம் மேய விறன்மிண்டேனே.
7
அமர்நீதி நாயனார்
1117
மிண்டும் பொழில்பழை யாறை அமர்நீதி வெண்பொடியின்
முண்டம் தரித்த பிராற்குநல் லூரின்முன் கோவணம்நேர்
கொண்டிங் கருளென்று தன்பெருஞ் செல்வமும் தன்னையுந்தன்
துண்ட மதிநுத லாளையும் ஈந்த தொழிலினனே.
8
சுந்தரமூர்த்தி நாயனார்
1118
தொழுதும் வணங்கியும் மாலயன் தேடரும் சோதிசென்றாங்
கெழுதும் தமிழ்ப்பழ ஆவணம் காட்டி எனக்குன்குடி
முழுதும் அடிமைவந் தாட்செய் எனப்பெற்ற வன்முரல்தேன்
ஒழுகு மலரின்நற் றார்எம்பி ரான்நம்பி யாரூரனே.
9
எறிபத்த நாயனார்
1119
ஊர்மதில் மூன்றட்ட உத்தமற் கென்றோர் உயர்தவத்தோன்
தார்மலர் கொய்யா வருபவன் தண்டின் மலர்பறித்த
ஊர்மலை மேற்கொள்ளும் பாகர் உடல்துணி யாக்குமவன்
ஏர்மலி மாமதில் சூழ்கரு வூரில் எறிபத்தனே.
10
ஏனாதிநாத நாயனார்
1120
பத்தனை ஏனாதி நாதனைப் பார்நீ டெயினைதன்னுள்
அத்தனைத் தன்னோ டமர்மலைந் தான்நெற்றி நீறுகண்டு
கைத்தனி வாள்வீ டொழிந்தவன் கண்டிப்ப நின்றருளும்
நித்தனை ஈழக் குலதீபன் என்பர்இந் நீள்நிலத்தே.
11
கண்ணப்ப நாயனார்
1121
நிலத்தில் திகழ்திருக் காளத்தி யார்திரு நெற்றியின்மேல்
நலத்தில் பொழிதரு கண்ணிற் குருதிகண் டுள்நடுங்கி
வலத்தில் கடுங்கணை யால்தன் மலர்க்கண் இடந்தப்பினான்
குலத்திற் கிராதன்நம் கண்ணப்ப னாம்என்று கூறுவரே.
12
குங்குலியக்கலய நாயனார்
1122
ஏய்ந்த கயிறுதன் கண்டத்திற் பூட்டி எழிற்பனந்தாள்
சாய்ந்த சிவன்நிலைத் தான்என்பர் காதலி தாலிகொடுத்
தாய்ந்தநற் குங்குலி யங்கொண் டனற்புகை காலனைமுன்
காய்ந்த அரற்கிட்ட தென்கட வூரில் கலையனையே.
13
மானக் கஞ்சாற நாயனார்
1123
கலச முலைக்கன்னி காதற் புதல்வி கமழ்குழலை
நலசெய் தவத்தவன் பஞ்ச வடிக்கிவை நல்கெனலும்
அலசும் எனக்கரு தாதவன் கூந்தல் அரிந்தளித்தான்
மலைசெய் மதிற்கஞ்சை மானக்கஞ் சாறன் எனும்வள்ளலே.
14
அரிவாட்டாய நாயனார்
1124
வள்ளற் பிராற்கமு தேந்தி வருவோன் உகலும்இங்கே
வெள்ளச் சடையாய் அமுதுசெய் யாவிடில் என்தலையைத்
தள்ளத் தகுமென்று வாட்பூட் டியதடங் கையினன் காண்
அள்ளற் பழனங் கணமங் கலத்தரி வாட்டாயனே.
15
ஆனாய நாயனார்
1125
தாயவன் யாவுக்கும் தாழ்சடை மேல்தனித் திங்கள்வைத்த
தூயவன் பாதம் தொடர்ந்துதொல் சீர்துளை யாற்பரவும்
வேயவன் மேல்மழ நாட்டு விரிபுனல் மங்கலக்கோன்
ஆயவன் ஆனாயன் என்னை உவந்தாண் டருளினனே.
16
சுந்தர மூர்த்தி நாயனார்
1126
‘நிதியார் துருத்திதென் வேள்விக் குடியாய் நினைமறந்த
மதியேற் கறிகுறி வைத்த புகர்பின்னை மாற்றி’டென்று
துதியா அருள்சொன்ன வாறறி வாரிடைப் பெற்றவன்காண்
நதியார் புனல்வயல் நாவலர் கோன்என்னும் நற்றவனே.
17
மூர்த்தி நாயனார்
1127
அவந்திரி குண்டமண் ஆவதின் மாள்வனென் றன்றாலவாய்ச்
சிவன்திரு மேனிக்குச் செஞ்சந் தனமாச் செழுமுழங்கை
உவந்தொளிர் பாறையில் தேய்த்துல காண்டஒண் மூர்த்திதன்னூர்
நிவந்தபொன் மாட மதுரா புரியென்னும் நீள்பதியே.
18
முருக நாயனார்
1128
பதிகம் திகழ்தரு பஞ்சாக் கரம்பயில் நாவினன்சீர்
மதியம் சடையாற் கலர்தொட் டணிபவன் யான்மகிழ்ந்து
துதியம் கழற்சண்பை நாதற்குத் தோழன்வன் றொண்டன்அம்பொன்
அதிகம் பெறும்புக லூர்முரு கன்எனும் அந்தணனே.
19
உருத்திர பசுபதி நாயனார்
1129
அந்தாழ் புனல்தன்னில் அல்லும் பகலும்நின் றாதரத்தால்
உந்தாத அன்பொ டுருத்திரஞ் சொல்லிக் கருத்தமைந்த
பைந்தார் உருத்திர பசுபதி தன்னற் பதிவயற்கே
நந்தார் திருத்தலை யூர்என் றுரைப்பர்இந் நானிலத்தே.
20
திருநாளைப்போவார் நாயனார்
1130
நாவார் புகழ்த்தில்லை அம்பலத் தான்அருள் பெற்றுநாளைப்
போவான் அவனாம் புறத்திருத் தொண்டன்தன் புன்புலைபோய்
மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதிதான்
மாவார் பொழில்திகழ் ஆதனூர் என்பர்இம் மண்டலத்தே.
21
திருக்குறிப்புத்தொண்ட நாயனார்
1131
மண்டும் புனற்சடை யான்தமர் தூசெற்றி வாட்டும்வகை
விண்டு மழைமுகில் வீடா தொழியின்யான் வீவன்என்னா
முண்டம் படர்பாறை முட்டும் எழிலார் திருக்குறிப்புத்
தொண்டன் குலங்கச்சி ஏகா லியர்தங்கள் தொல்குலமே.
22
சண்டேசுர நாயனார்
1132
குலமே றியசேய்ஞ லூரில் குரிசில் குரைகடல்சூழ்
தலமே றியவிறல் சண்டிகண் டீர்தந்தை தாள்இரண்டும்
வலமே றியமழு வால்எறிந் தீசன் மணிமுடிமேல்
நலமே றியபால் சொரிந்தலர் சூட்டிய நன்னிதியே.
23
சுந்தரமூர்த்தி நாயனார்
1133
‘நிதியார் துருத்திதென் வேள்விக் குடியாய் நினைமறந்த
மதியேற் கறிகுறி வைத்த புகர்பின்னை மாற்றி’டென்று
துதியா அருள்சொன்ன வாறறி வாரிடைப் பெற்றவன்காண்
நதியார் புனல்வயல் நாவலர் கோன்என்னும் நற்றவனே.
24
திருநாவுக்கரசு நாயனார்
1134
நற்றவன் நல்லூர்ச் சிவன்திருப் பாதம்தன் சென்னிவைக்கப்
பெற்றவன் மற்றிப் பிறப்பற வீரட்டர் பெய்கழற்றாள்
உற்றவன் உற்ற விடம்அடை யார்இட ஒள்ளமுதாத்
துற்றவன் ஆமுரில் நாவுக் கரசெனும் தூமணியே.
25
1135
மணியினை மாமறைக் காட்டு மருந்தினை வண்மொழியால்
திணியன நீள்கத வந்திறப் பித்தன தெண்கடலிற்
பிணியன கல்மிதப் பித்தன சைவப் பெருநெறிக்கே
அணியன நாவுக் கரையர் பிரான்தன் அருந்தமிழே.
26
குலச்சிறை நாயனார்
1136
அருந்தமிழ் ஆகரன் வாதில் அமணைக் கழுநுதிமேல்
இருந்தமிழ் நாட்டிடை ஏற்றுவித் தோன்எழிற் சங்கம்வைத்த
பெருந்தமிழ் மீனவன் தன்அதி காரி பிரசம்மல்கு
குருந்தவிழ் சாரல் மணமேற் குடிமன் குலச்சிறையே.
27
பெருமிழலைக் குறும்ப நாயனார்
1137
சிறைநன் புனல்திரு நாவலூ ராளி செழுங்கயிலைக்
கிறைநன் கழல்நாளை எய்தும் இவனருள் போற்றஇன்றே
பிறைநன் முடியன் அடியடை வேன்என் றுடல்பிரிந்தான்
நறைநன் மலர்த்தார் மிழலைக் குறும்பன் எனும்நம்பியே.
28
காரைக்கால் அம்மையார்
1138
‘நம்பன் திருமலை நான்மிதி யேன்’என்று தாள்இரண்டும்
உம்பர் மிசைத்தலை யால்நடந் தேற உமைநகலும்
செம்பொன் உருவன்’என் அம்மை’ எனப்பெற் றவள் செழுந்தேன்
கொம்பின் உகுகாரைக் காலினில் மேய குலதனமே.
29
அப்பூதியடிகள் நாயனார்
1139
தனமா வதுதிரு நாவுக் கரசின் சரணம்என்னா
மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத் தாங்கவன் வண்தமிழ்க்கே
இனமாத் தனது பெயரிடப் பெற்றவன் எங்கள்பிரான்
அனமார் வயல்திங்கள் ஊரினில் வேதியன் அப்பூதியே.
30
திருநீலநக்க நாயனார்
1140
பூதிப் புயத்தர் புயத்திற் சிலந்தி புகலும்அஞ்சி
ஊதித் துமிந்த மனைவியை நீப்பஉப் பாலவெல்லாம்
பேதித் தெழுந்தன காணென்று பிஞ்ஞகன் காட்டுமவன்
நீதித் திகழ்சாத்தை நீலநக் கன்எனும் வேதியனே.
31
நமிநந்தியடிகள் நாயனார்
1141
வேத மறிக்கரத் தாரூர் அரற்கு விளக்குநெய்யைத்
தீது செறிஅமண் கையர்அட் டாவிடத் தெண்புனலால்
ஏத முறுக அருகரென் றன்று விளக்கெரித்தான்
நாதன் எழில்ஏமப் பேறூர் அதிபன் நமிநந்தியே.
32
சுந்தரமூர்த்தி நாயனார்
1142
நந்திக்கும் நம்பெரு மாற்குநல் ஆருரில் நாயகற்குப்
பந்திப் பரியன செந்தமிழ் பாடிப் படர்புனலிற்
சிந்திப் பரியன சேவடி பெற்றவன் சேவடியே
வந்திப் பவன்பெயர் வன்தொண்டன் என்பர்இவ் வையகத்தே.
33
திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்
1143
வையம் மகிழயாம் வாழ அமணர் வலிதொலைய
ஐயன் பிரம புரத்தரற் கம்மென் குதலைச் செவ்வாய்
பைய மிழற்றும் பருவத்துப் பாடப் பருப்பதத்தின்
தையல் அருள்பெற் றனன்என்பர் ஞானசம் பந்தனையே.
34
1144
பந்தார் விரலியர் வேள்செங்கட் சோழன் முருகன்நல்ல
சந்தார் அகலத்து நீலநக் கன்பெயர் தான்மொழிந்து
கொந்தார் சடையர் பதிகத்தில் இட்டடி யேன்கொடுத்த
அந்தாதி கொண்ட பிரான்அருட் காழியர் கொற்றவனே.
35
ஏயர்கோன் கலிக்காம நாயனார்
1145
கொற்றத் திறல்எந்தை தந்தைதன் தந்தைஎங் கூட்ட மெல்லாம்
தெற்றச் சடையாய் நினதடி யேந்திகழ் வன்தொண்டனே
மற்றிப் பிணிதவிர்ப் பான்என் றுடைவாள் உருவிஅந்நோய்
செற்றுத் தவிர்கலிக் காமன் குடிஏயர் சீர்க்குடியே.
36
திருமூல நாயனார்
1146
குடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம் மேய்ப்போன் குரம்பைபுக்கு
முடிமன்னு கூனற் பிறையாளன் தன்னை முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படி யேபர விட்டென்உச்சி
அடிமன்ன வைத்த பிரான்மூலன் ஆகின்ற அங்கணனே.
37
தண்டியடிகள் நாயனார்
1147
கண்ணார் மணிஒன்றும் இன்றிக் கயிறு பிடித்தரற்குத்
தண்ணார் புனல்தடம் தொட்டலும் தன்னை நகும்அமணர்
கண்ணாங் கிழப்ப அமணர் கலக்கங்கண் டம்மலர்க்கண்
விண்ணா யகனிடைப் பெற்றவன் ஆரூர் விறல்தண்டியே.
38
மூர்க்க நாயனார்
1148
தண்டலை சூழ்திரு வேற்காட்டூர் மன்னன் தருகவற்றால்
கொண்டவல் லாயம்வன் சூதரை வென்றுமுன் கொண்டபொருள்
முண்டநன் னீற்றன் அடியவர்க் கீபவன் மூர்க்கனென்பர்
நண்டலை நீரொண் குடந்தையில் மேவுநற் சூதனையே.
39
சோமாசிமாற நாயனார்
1149
சூதப் பொழில் அம்பர் அந்தணன் சோமாசி மாறன்என்பான்
வேதப் பொருள்அஞ் செழுத்தும் விளம்பியல் லால்மொழியான்
நீதிப் பரன்மன்னு நித்த நியமன் பரவையென்னும்
மாதுக்குக் காந்தன்வன் தொண்டன் தனக்கு மகிழ்துணையே.
40
சுந்தரமூர்த்தி நாயனார்
1150
துணையும் அளவும் இல்லாதவன் தன்னரு ளேதுணையாக்
கணையும் கதிர்நெடு வேலும் கறுத்த கயலிணையும்
பிணையும் நிகர்த்தகண் சங்கிலி பேரமைத் தோள்இரண்டும்
அணையும் அவன்திரு வாரூரன் ஆகின்ற அற்புதனே.
41
சாக்கிய நாயனார்
1151
தகடன ஆடையன் சாக்கியன் மாக்கற் றடவரையன்
மகள்தனந் தாக்கக் குழைந்ததிண் தோளர்வண் கம்பர்செம்பொன்
திகழ்தரு மேனியிற் செங்கல் எறிந்து சிவபுரத்துப்
புகழ்தரப் புக்கவன் ஊர்சங்க மங்கை புவனியிலே.
42
சிறப்புலி நாயனார்
1152
புவனியிற் பூதியும் சாதன மும்பொலி வார்ந்துவந்த
தவநிய மற்குச் சிறப்புச்செய் தத்துவ காரணனாம்
அவனியில் கீர்த்தித் தென் ஆக்கூர் அதிபன் அருமறையோன்
சிவன்நிய மந்தலை நின்றதொல் சீர்நஞ் சிறப்புலியே.
43
சிறுத்தொண்ட நாயனார்
1153
புலியின் அதளுடைப் புண்ணியற் கின்னமு தாத்தனதோர்
ஒலியின் சதங்கைக் குதலைப் புதல்வன் உடல்துணித்துக்
கலியின் வலிகெடுத் தோங்கும் புகழ்ச்சிறுத் தொண்டன்கண்டீர்
மலியும் பொழில்ஒண்செங் காட்டம் குடியவர் மன்னவனே.
44
சேரமான்பெருமாள் நாயனார்
1154
மன்னர் பிரான்எதிர் வண்ணான் உடல்உவர் ஊறிநீறார்
தன்னர் பிரான்தமர் போல வருதலும் தான்வணங்க
என்னர் பிரான்அடி வண்ணான் எனஅடிச் சேரன்என்னும்
தென்னர் பிரான்கழ றிற்றறி வான்எனும் சேரலனே.
45
1155
சேரற்குத் தென்னா வலர்பெரு மாற்குச் சிவன்அளித்த
வீரக் கடகரி முன்புதன் பந்தி இவுளிவைத்த
வீரற்கு வென்றிக் கருப்புவில் வீரனை வெற்றிகொண்ட
சூரற் கெனதுள்ளம் நன்றுசெய் தாய்இன்று தொண்டுபட்டே.
46
கணநாத நாயனார்
1156
தொண்டரை யாக்கி அவரவர்க் கேற்ற தொழில்கள் செய்வித்
தண்டர்தங் கோனக் கணத்துக்கு நாயகம் பெற்றவன்காண்
கொண்டல்கொண் டேறிய மின்னுக்குக் கோல மடல்கள் தொறும்
கண்டல்வெண் சோறளிக் குங்கடல் காழிக் கணநாதனே.
47
கூற்றுவ நாயனார்
1157
நாதன் திருவடி யேமுடி யாகக் கவித்துநல்ல
போதங் கருத்திற் பொறித்தமை யால்அது கைகொடுப்ப
ஓதந் தழுவிய ஞாலம்எல் லாமொரு கோலின்வைத்தான்
கோதை நெடுவேற் களப்பாளன் ஆகிய கூற்றுவனே.
48
சுந்தரமூர்த்தி நாயனார்
1158
கூற்றுக் கெவனோ புகல்திரு வாரூரன் பொன்முடிமேல்
ஏற்றுத் தொடையலும் இன்அடைக் காயும் இடுதருமக்
கோற்றொத்துக் கூனனும் கூன்போய்க் குருடனும் கண்பெற்றமை
சாற்றித் திரியும் பழமொழி யாம்இத் தரணியிலே.
49
பொய்யடிமை இல்லாத புலவர்
1159
தரணியிற் பொய்ம்மை இலாத்தமிழ்ச் சங்கம் அதிற்கபிலர்
பரணர்நக் கீரர் முதல்நாற்பத் தொன்பது பல்புலவோர்
அருள்நமக் கீயும் திருவால வாய்அரன் சேவடிக்கே
பொருளமைத் தின்பக் கவிபல பாடும் புலவர்களே.
50
புகழ்ச்சோழ நாயனார்
1160
புலமன் னியமன்னைச் சிங்கள நாடு பொடிபடுத்த
குலமன் னியபுகழ்க் கோகன நாதன் குலமுதலோன்
நலமன் னியபுகழ்ச் சோழன தென்பர் நகுசுடர்வாள்
வலமன் னியஎறி பத்தனுக் கீந்ததோர் வண்புகழே.
51
நரசிங்க முனையரைய நாயனார்
1161
புகழும் படிஎம் பரமே தவர்க்குநற் பொன்னிடுவோன்
இகழும் படியோர் தவன்மட வார்புனை கோலம்எங்கும்
நிகழும் படிகண் டவனுக் கிரட்டிபொன்இட்டவன்நீள்
திகழு முடிநர சிங்க முனையர சன்திறமே.
52
அதிபத்த நாயனார்
1162
திறம்அமர் மீன்படுக் கும்பொழு தாங்கொரு மீன்சிவற்கென்
றுறஅமர் மாகடற் கேவிடு வோன்ஒரு நாட்கனக
நிறம்அமர் மீன்பட நின்மலற் கென்றுவிட் டோன்கமலம்
புறம்அமர் நாகை அதிபத்த னாகிய பொய்யிலியே.
53
கலிக்கம்ப நாயனார்
1163
பொய்யைக் கடிந்துநம் புண்ணியர்க் காட்பட்டுத் தன்அடியான்
சைவத் திருவுரு வாய்வரத் தான்அவன் தாள்கழுவ
வையத் தவர்முன்பு வெள்கிநீர் வாரா விடமனைவி
கையைத் தடிந்தவன் பெண்ணா கடத்துக் கலிக்கம்பனே.
54
கலிய நாயனார்
1164
கம்பக் கரிக்கும் சிலந்திக்கும் நல்கிய கண்ணுதலோன்
உம்பர்க்கு நாதற் கொளிவிளக் கேற்றற் குடல்இலனாய்க்
கும்பத் தயிலம்விற் றுஞ்செக் குழன்றும்கொள் கூலியினால்
நம்பற் கெரித்த கலிஒற்றி மாநகர்ச் சக்கிரியே.
55
சத்தி நாயனார்
1165
கிரிவில் லவர்தம் அடியரைத் தன்முன்பு கீழ்மைசொன்ன
திருவில் லவரைஅந் நாவரி வோன்திருந் தாரைவெல்லும்
வரிவில் லவன்வயற் செங்கழு நீரின் மருவுதென்றல்
தெருவில் விரைகம ழுந்தென் வரிஞ்சைத் திகழ்சத்தியே.
56
ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
1166
சத்தித் தடக்கைக் குமரன்நல் தாதைதன் தானம்எல்லாம்
முத்திப் பதமொரொர் வெண்பா மொழிந்து முடியரசா
மத்திற்கு மும்மைநன் தாள்அரற் காய்ஐயம் ஏற்றலென்னும்
பத்திக் கடல்ஐ யடிகளா கின்றநம் பல்லவனே.
57
சுந்தரமூர்த்தி நாயனார்
1167
பல்லவை செங்கதி ரோனைப் பறித்தவன் பாதம்புகழ்
சொல்லவன் தென்புக லூர்அரன் பால்துய்ய செம்பொன்கொள்ள
வல்லவன் நாட்டியத் தான்குடி மாணிக்க வண்ணனுக்கு
நல்லவன் தன்பதி நாவலூர் ஆகின்ற நன்னகரே.
58
கணம்புல்ல நாயனார்
1168
நன்னக ராய இருக்குவே ளூர்தனில் நல்குவராய்ப்
பொன்னக ராயநற் றில்லை புகுந்து புலீச்சரத்து
மன்னவ ராய அரர்க்குநற் புல்லால் விளக்கெரித்தான்
கன்னவில் தோள்எந்தை தந்தை பிரான்எம் கணம்புல்லனே.
59
காரி நாயனார்
1169
புல்லன வாகா வகைஉல கத்துப் புணர்ந்தனவும்
சொல்லின வும்நய மாக்கிச் சுடர்பொற் குவடுதனி
வில்லனை வாழ்த்தி விளங்கும் கயிலைபுக் கான்என்பரால்
கல்லன மாமதில் சூழ்கட வூரினிற் காரியையே.
60
நெடுமாற நாயனார்
1170
கார்த்தண் முகில்கைக் கடற்காழி யர்பெரு மாற்கெதிராய்
ஆர்த்த அமணர் அழிந்தது கண்டுமற் றாங்கவரைக்
கூர்த்த கழுவின் நுதிவைத்த பஞ்சவன் என்றுரைக்கும்
வார்த்தை யதுபண்டு நெல்வேலி யில்வென்ற மாறனுக்கே.
61
வாயிலார் நாயனார்
1171
மாறா அருளரன் தன்னை மனஆ லயத்திருத்தி
ஆறா அறிவாம் ஒளிவிளக் கேற்றி அகமலர்வாம்
வீறா மலரளித் தன்பெனும் மெய்யமிர் தம்கொடுத்தான்
வீறார் மயிலையுள் வாயிலான் என்று விளம்புவரே.
62
முனையடுவார் நாயனார்
1172
என்று விளம்புவர் நீடூர் அதிபன் முனையடுவோன்
என்றும் அமருள் அழிந்தவர்க் காக்கூலி ஏற்றெறிந்து
வென்று பெருஞ்செல்வம் எல்லாம் கனகநன் மேருவென்னும்
குன்று வளைத்த சிலையான் தமர்க்குக் கொடுத்தனனே.
63
சுந்தரமூர்த்தி நாயனார்
1173
கொடுத்தான் முதலைகொள் பிள்ளைக் குயிர்அன்று புக்கொளியூர்த்
தொடுத்தான் மதுர கவிஅவி நாசியை வேடர்சுற்றம்
படுத்தான் திருமுரு கன்பூண் டியினில் பராபரத்தேன்
மடுத்தான் அவனென்பர் வன்தொண்ட னாகின்ற மாதவனே.
64
கழற்சிங்க நாயனார்
1174
மாதவத் தோர்தங்கள் வைப்பினுக் காரூர் மணிக்குவைத்த
போதினைத் தான்மோந்த தேவிதன் மூக்கை அரியப் பொற்கை
காதிவைத் தன்றோ அரிவதென் றாங்கவள் கைதடிந்தான்
நாதமொய்த் தார்வண்டு கிண்டுபங் கோதைக் கழற்சிங்கனே.
65
இடங்கழி நாயனார்
1175
சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு
கொங்கிற் கனகம் அணிந்தஆ தித்தன் குலமுதலோன்
திங்கட் சடையர் தமரதென் செல்வம் எனப்பறைபோக்
கெங்கட் கிறைவன் இருக்குவே ளூர்மன் இடங்கழியே.
66
செருத்துணை நாயனார்
1176
கழிநீள் கடல்நஞ் சயின்றார்க் கிருந்த கடிமலரை
மொழிநீள் புகழ்க்கழற் சிங்கன்தன் தேவிமுன் மோத்தலுமே
எழில்நீள் குமிழ்மலர் மூக்கரிந் தானென் றியம்புவரால்
செழுநீர் மருகல்நன் னாட்டமர் தஞ்சைச் செருத்துணையே.
67
புகழ்த்துணை நாயனார்
1177
செருவிலி புத்தூர்ப் புகழ்த்துணை வையம் சிறுவிலைத்தா
உருவலி கெட்டுண வின்றி உமைகோனை மஞ்சனம்செய்
தருவதோர் போதுகை சோர்ந்து கலசம் விழத்தரியா
தருவரை வில்லி அருளும் நிதியது பெற்றனனே.
68
கோட்புலி நாயனார்
1178
பெற்றம் உயர்த்தோன் விரையாக் கலிபிழைத் தோர்தமது
சுற்றம் அறுக்கும் தொழில்திரு நாட்டியத் தான்குடிக்கோன்
குற்றம் அறுக்கும்நங் கோட்புலி நாவற் குரிசில் அருள்
பெற்ற அருட்கடல் என்றுல கேத்தும் பெருந்தகையே.
69
சுந்தரமூர்த்தி நாயனார்
1179
தகுமகட் பேசினோன் வீயவே நூல்போன சங்கிலிபால்
புகுமணக் காதலி னால் ஒற்றி யூர்உறை புண்ணியன்தன்
மிகுமலர்ப் பாதம் பணிந்தரு ளால்இவ் வியனுலகம்
நகுவழக் கேநன்மை யாப்புணர்ந் தான்நாவ லூர்அரசே.
70
பத்தராய்ப் பணிவார்கள்
1180
அரசினை ஆருர் அமரர் பிரானை அடிபணிந்திட்
டுரைசெய்த வாய்தடு மாறி உரோம புளகம்வந்து
கரசர ணாதி அவயவம் கம்பித்துக் கண்ணருவி
சொரிதரும் அங்கத்தி னோர்பத்தர் என்று தொகுத்தவரே.
71
பரமனையே பாடுவார்
1181
தொகுத்த வடமொழி தென்மொழி யாதொன்று தோன்றியதே
மிகுத்த இயலிசை வல்ல வகையில்விண் தோயுநெற்றி
வகுத்த மதில்தில்லை அம்பலத் தான்மலர்ப் பாதங்கள்மேல்
உகுத்த மனத்தொடும் பாடவல் லோர்என்ப உத்தமரே.
72
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்
1182
உத்தமத் தானத் தறம்பொருள் இன்ப மொடியெறிந்து
வித்தகத் தானத் தொருவழிக் கொண்டு விளங்கச்சென்னி
மத்தம்வைத் தான்திருப் பாத கமல மலரிணைக் கீழ்ச்
சித்தம்வைத் தார்என்பர் வீடுபே றெய்திய செல்வர்களே.
73
திருவாரூர்ப் பிறந்தார்கள்
1183
செல்வம் திகழ்திரு வாரூர் மதில்வட்டத் துட்பிறந்தார்
செல்வன் திருக்கணத் துள்ளவ ரேஅத னால் திகழச்
செல்வம் பெருகுதென் ஆரூர்ப் பிறந்தவர் சேவடியே
செல்வ நெறியுறு வார்க் கணித் தாய செழுநெறியே.
74
முப்பொழுதுந் திருமேனி தீண்டுவார்
1184
நெறிவார் சடையரைத் தீண்டிமுப் போதும்நீ டாகமத்தின்
அறிவால் வணங்கி அர்ச் சிப்பவர் நம்மையும் ஆண்டமரர்க்
கிறையாய்முக் கண்ணும்எண் தோளும் தரித்தீறில் செல்வத்தொடும்
உறைவார் சிவபெரு மாற்குறை வாய உலகினிலே.
75
முழுநீறு பூசிய முனிவர்
1185
உலகு கலங்கினும் ஊழி திரியினும் உள்ளொருகால்
விலகுதல் இல்லா விதியது பெற்றநல் வித்தகர்காண்
அலகில் பெருங்குணத் தாரூர் அமர்ந்த அரனடிக்கீழ்
இலகுவெண் ணீறுதம் மேனிக் கணியும் இறைவர்களே.
76
அப்பாலும் அடிச்சார்ந்தார்
1186
வருக்கம் அடைத்துநன் னாவலூர் மன்னவன் வண்தமிழால்
பெருக்கு மதுரத் தொகையில் பிறைசூடிப் பெய்கழற்கே
ஒருக்கு மனத் தொடப் பாலடிச் சார்ந்தவர் என்றுலகில்
தெரிக்கு மவர்சிவன் பல்கணத் தோர்நம் செழுந்தவரே.
77
சுந்தரமூர்த்தி நாயனார்
1187
செழுநீர் வயல்முது குன்றினில் செந்தமிழ் பாடிவெய்ய
மழுநீள் தடக்கையன் ஈந்தபொன் ஆங்குக்கொள் ளாதுவந்தப்
பொழில்நீ டருதிரு வாரூரில் வாசியும் பொன்னுங்கொண்டோன்
கெழுநீள் புகழ்த்திரு வாரூரன் என்றுநாம் கேட்பதுவே.
78
பூசலார் நாயனார்
1188
பதுமநற் போதன்ன பாதத் தரற்கொரு கோயிலையாம்
கதுமெனச் செய்குவ தென்றுகொ லாமென்று கண்துயிலா
ததுமனத் தேஎல்லி தோறும் நினைந்தருள் பெற்றதென்பர்
புதுமணத் தென்றல் உலாநின்ற வூர்தனில் பூசலையே.
79
மங்கையர்க்கு அரசியார்
1189
பூசல் அயில்தென்ன னார்க்கன லாகப் பொறாமையினால்
வாச மலர்க்குழல் பாண்டிமா தேவியாம் மானிகண்டீர்
தேசம் விளங்கத் தமிழா கரர்க் கறி வித்தவரால்
நாசம் விளைத்தாள் அருகந் தருக்குத் தென் னாட்டகத்தே.
80
நேச நாயனார்
1190
நாட்டமிட் டன்றரி வந்திப்ப வெல்படைநல்கினர்தந்
தாட்டரிக் கப்பெற்ற வன்என்பர் சைவத் தவர் அரையில்
கூட்டுமக் கப்படங் கோவணம் நெய்து கொடுத்துநன்மை
ஈட்டுமக் காம்பீலிச் சாலிய நேசனை இம்மையிலே.
81
கோச் செங்கட் சோழ நாயனார்
1191
மைவைத்த கண்டன் நெறியன்றி மற்றோர் நெறிகருதாத்
தெய்வக் குடிச் சோழன் முன்பு சிலந்தியாய்ப் பந்தர்செய்து
சைவத் துருவெய்தி வந்து தரணிநீ டாலயங்கள்
செய்வித்த வன்திருக் கோச்செங்க ணான்என்னும் செம்பியனே.
82
1192
செம்பொன் அணிந்துசிற் றம்பலத் தைச்சிவ லோகம்எய்தி
நம்பன் கழற்கீழ் இருந்தோன் குலமுதல் என்பர்நல்ல
வம்பு மலர்த்தில்லை ஈசனைச் சூழ மறைவளர்த்தான்
நிம்ப நறுந்தொங்கல் கோச்செங்க ணான்என்னும் நித்தனையே.
83
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
1193
தனையொப் பரும்எருக் கத்தம் புலியூர்த் தகும்புகழோன்
நினையொப் பருந்திரு நீலகண் டப்பெரும் பாணனைநீள்
சினையொப் பலர்பொழிற் சண்பையர் கோன்செந் தமிழொடிசை
புனையப் பரன்அருள் பெற்றவன் என்பர்இப் பூதலத்தே.
84
சடைய நாயனார்
1194
தலம்விளங் குந்திரு நாவலூர் தன்னில் சடையன்என்னும்
குலம்விளங் கும்புக ழோனை உரைப்பர் குவலயத்தில்
நலம்விளங் கும்படி நாம்விளங் கும்படி நற்றவத்தின்
பலம்விளங் கும்படி ஆரூரனைமுன் பயந்தமையே.
85
இசைஞானியார்
1195
பயந்தாள் கறுவுடைச் செங்கண்வெள் ளைப்பொள்ளல் நீள்பனைக்கைக்
கயந்தான் உகைத்தநற் காளையை என்றும் கபாலங்கைக்கொண்
டயந்தான் புகும்அரன் ஆரூர்ப் புனித அரன்திருத்தாள்
நயந்தாள் தனதுள்ளத் தென்றும் உரைப்பது ஞானியையே.
86
சுந்தரமூர்த்தி நாயனார்
1196
ஞானஆ ரூரரைச் சேரரை அல்லது நாம்அறியோம்
மானவ ஆக்கை யொடும்புக் கவரை வளரொளிப்பூண்
வானவ ராலும் மருவற் கரிய வடகயிலைக்
கோனவன் கோயிற் பெருந்தவத் தோர்தங்கள் கூட்டத்திலே.
87
திருத்தொண்டத்தொகையில் உள்ள தொகை அடியார்கள் தனியடியார்கள்
1197
கூட்டம்ஒன் பானொ டறுபத்து மூன்று தனிப்பெயரா
ஈட்டும் பெருந்தவத் தோர்எழு பத்திரண் டாம்வினையை
வாட்டும் தவத்திருத் தொண்டத் தொகைபதி னொன்றின்வகைப்
பாட்டும் திகந்திரு நாவலூராளி பணித்தனனே.
88
திருத்தொண்டத் தொகைப் பதிகக் கவிகளின் முதற்குறிப்பு
1198
பணித்தநல் தொண்டத் தொகைமுதல் தில்லை இலைமலிந்த
அணித்திகழ் மும்மை திருநின்ற வம்பறா வார்கொண்டசீர்
இணைத்தநற் பொய்யடி மைகறைக் கண்டன் கடல்சூழ்ந்தபின்
மணித்திகழ் சொற்பத்தர் மன்னிய சீர்மறை நாவனொடே.
89
நூற் பயன்
1199
ஓடிடும் பஞ்சேந் திரியம் ஒடுக்கிஎன் ஊழ்வினைகள்
வாடிடும் வண்ணம்நின் றெத்தவம் செய்தனன் வானினுள்ளோர்
சூடிடும் சீர்த்திருப் பாதத்தர் தொண்டத் தொகையின்உள்ள
சேடர்தம் செல்வப் பெரும்புகழ் அந்தாதி செப்பிடவே.
90
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

நம்பியாண்டார் நம்பி அருளியது
பதினோராம் திருமுறை
4. ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி
கட்டளைக் கலித்துறை
1200
பார்மண் டலத்தினில் பன்னிரு பேரொடு மன்னிநின்ற
நீர்மண் டலப்படப் பைப்பிர மாபுரம் நீறணிந்த
கார்மண் டலக்கண்டத் தெண்தடந் தோளன் கருணைபெற்ற
தார்மண் டலமணி சம்பந்தன் மேவிய தண்பதியே.
1
1201
பதிகப் பெருவழி காட்டப் பருப்பதக் கோன்பயந்த
மதியத் திருநுதல் பங்கன் அருள்பெற வைத்தஎங்கள்
நிதியைப் பிரமா புரநகர் மன்னனை என்னுடைய
கதியைக் கருதவல் லோர்அம ராவதி காப்பவரே.
2
1202
காப்பயில் காழிக் கவுணியர் தீபற்கென் காரணமா
மாப்பழி வாரா வகைஇருப் பேன்என்ன மாரன்என்னே
பூப்பயில் வாளிகள் அஞ்சும்என் நெஞ்சரங் கப்புகுந்த
ஏப்பயில் வார்சிலை கால்வளை யாநிற்கும் ஈண்டிரவே.
3
1203
இரவும் பகலும்நின் பாதத் தலர்என் வழிமுழுதும்
பரவும் பரிசே அருளுகண் டாய்இந்தப் பாரகத்தே
விரவும் பரமத கோளரி யேகுட வெள்வளைகள்
தரளம் சொரியும் கடல்புடை சூழ்ந்த தராய்மன்னனே.
4
1204
மன்னிய மோகச் சுவைஒளி ஊறோசை நாற்றமென்றிப்
பன்னிய ஐந்தின் பதங்கடந் தோர்க்குந் தொடர்வரிய
பொன்னியல் பாடகக் கிங்கிணிப் பாதநிழல் புகுவோர்
துன்னிய காவமர் சண்பையர் நாதற்குத் தொண்டர்களே.
5
1205
தொண்டினஞ் சூழச் சுரிகுழ லார்தம் மனந்தொடர
வண்டினம் சூழ வருமிவன் போலும் மயில்உகுத்த
கண்டினம் சூழ்ந்த வளைபிரம் போர்கழு வாஉடலம்
விண்டினம் சூழக் கழுவின ஆக்கிய வித்தகனே.
6
1206
வித்தகம் பேசிநம் வேணுத் தலைவனை வாள்நிகர்த்து
முத்தகங் காட்டு முறுவல்நல் லார்தம் மனம்அணைய
உய்த்தகம் போந்திருந் துள்ளவும் இல்லா தனவுமுறு
புத்தகம் போலும் முதுபுலைப் பாணன் புணர்க்கின்றதே.
7
1207
புணர்ந்தநன் மேகச் சிறுநுண் துளியிற் சிறகொதுக்கி
உணர்ந்தனர் போல இருந்தனை யால்உல கம்பரசும்
குணந்திகழ் ஞானசம் பந்தன் கொடிமதிற் கொச்சையின்வாய்
மணந்தவர் போயின ரோசொல்லு வாழி| மடக்குருகே.
8
1208
குருந்தலர் முல்லையங் கோவலர் ஏற்றின் கொலைமருப்பால்
அருந்திறல் ஆகத் துழுதசெஞ் சேற்றரு காசனிதன்
பெருந்திற மாமதிற் சண்பை நகரன்ன பேரமைத்தோள்
திருந்திழை ஆர்வம் ............ .............. முரசே.
9
1209
முரசங் கரையமுன் தோரணம் நீட முழுநிதியின்
பரிசங் கொணர்வான் அமைகின் றனர்பலர் பார்த்தினிநீ
அரிசங் கணைதலென் னாமுன் கருதரு காசனிதன்
சுரிசங் கணைவயல் தந்த நகரன்ன தூமொழிக்கே.
10
1210
மொழிவது சைவ சிகாமணி மூரித் தடவரைத்தோள்
தொழுவது மற்றவன் தூமலர்ப் பாதங்கள் தாமங்கமழ்ந்
தெழுவது கூந்தலம் பூந்தா மரைஇனி யாதுகொலோ
மொழிவது சேரி முரிப்புதை மாதர் முறுவலித்தே.
11
1211
வலிகெழு குண்டர்க்கு வைகைக் கரைஅன்று வான்கொடுத்த
கலிகெழு திண்தோள் கவுணியர் தீபன் கடல்உடுத்த
ஒலிதரு நீர்வைய கத்தை உறையிட்ட தொத்துதிரு
மலிதரு வார்பனி யாம்மட மாதினை வாட்டுவதே.
12
1212
வாட்டுவர் தத்தம் துயரைவன் கேழலின் பின்புசென்ற
வேட்டுவர் கோலத்து வேதத் தலைவனை மெல்விரலால்
தோட்டியல் காதன் இவனென்று தாதைக்குச் சூழ்விசும்பிற்
காட்டிய கன்றின் கழற்றிற மானவை கற்றவரே.
13
1213
அவர்சென் றணுகுவர் மீள்வதிங் கன்னை அருகர்தம்மைத்
தவர்கின்ற தண்டமிழ்ச் சைவ சிகாமணி சண்பைஎன்னப்
பவர்கின்ற நீள்கொடிக் கோபுரம் பல்கதி ரோன்பரியைக்
கவர்கின்ற சூலத் தொடுநின்று தோன்றும் கடிநகரே.
14
1214
நகரம் கெடப்பண்டு திண்தேர் மிசைநின்று நான்மறைகள்
பகர்அம் கழலவ னைப்பதி னாறா யிரம்பதிகம்
மகரம் கிளர்கடல் வையந் துயர்கெட வாய்மொழிந்த
நிகரங் கிலிகலிக் காழிப் பிரான்என்பர் நீள்நிலத்தே.
15
1215
நிலமே றியமருப் பின்திரு மாலும் நிலம்படைத்த
குலமே றியமலர்க் கோகன தத்தய னுங்கொழிக்கும்
சலமே றியமுடி தாள்கண் டிலர்தந்தை காணஅன்று
நலமே றியபுகழ்ச் சம்பந்தன் காட்டிய நாதனையே.
16
1216
நாதன் நனிபள்ளி சூழ்நகர் கானக மாக்கியஃதே
போதின் மலிவய லாக்கிய கோன்அமர் பொற்புகலி
ஓத நெடுங்கடல் வாருங் கயலோ விலைக்குளது
காதின் அளவும் மிளிர்கய லோசொல்லு காரிகையே.
17
1217
கைம்மையி னால்நின் கழல்பர வாதுகண் டார்க்கிவனோர்
வன்மைய னேஎன்னும் வண்ணம் நடித்து விழுப்பொருளோ
டிம்மையில் யான்எய்தும் இன்பம் கருதித் திரிதருமத்
தன்மையி னேற்கும் அருளுதி யோசொல்லு சம்பந்தனே.
18
1218
பந்தார் அணிவிரல் பங்கயக் கொங்கைப் பவளச்செவ்வாய்க்
கொந்தார் நறுங்குழல் கோமள வல்லியைக் கூறருஞ்சீர்
நந்தா விளக்கினைக் கண்டது நானெப் பொழுதும்முன்னும்
சந்தா ரகலத் தருகா சனிதன் தடவரையே.
19
1219
வரைகொண்ட மாமதில் சண்பைத் தலைவனை வாழ்த்தலர்போல்
நிரைகொண்டு வானோர் கடைந்ததில் நஞ்ச நிகழக்கொலாம்
நுரைகொண்டு மெய்ப்பரத் துள்ளம் சுழலநொந்தோர் இரவும்
திரைகொண் டலமரும் இவ்வகன் ஞாலம் செறிகடலே.
20
1220
கடலன்ன பொய்ம்மைகள் செய்யினும் வெய்ய கடுநரகத்
திடநமன் ஏவுதற் கெவ்விடத் தான்இருஞ் செந்தமிழால்
திடமன்னு மாமதில் சண்பைத் தலைவன் செந் தாமரையின்
வடமன்னு நீண்முடி யான்அடிப் போதவை வாழ்த்தினமே.
21
1221
வாழ்த்துவ தெம்பர மேயாகும் அந்தத்து வையமுந்நீர்
ஆழ்த்திய காலத்தும் ஆழா ததுஅரன் சேவடியே
ஏத்திய ஞானசம் பந்தற் கிடம்இசைத் தும்பிகொம்பர்க்
காத்திகழ் கேதகம் போதகம் ஈனும் கழுமலமே.
22
1222
மலர்பயில் வாட்கண்ணி கேள்கண்ணி நீண்முடி வண்கமலப்
பலர்பயில் கீர்த்திக் கவுணியர் தீபன் பகைவர்என்னத்
தலைபயில் பூம்புனங் கொய்திடு மேகணி யார்புலம்ப
அலர்பயி லாமுன் பறித்தன மாகில் அரும்பினையே.
23
1223
அரும்பின அன்பில்லை அர்ச்சனை இல்லை அரன்நெறியே
விரும்பின மாந்தர்க்கு மெய்ப்பணி செய்கிலம் பொய்க்கமைந்த
இரும்பன உள்ளத்தி னேற்கெங்ங னேவந்து நேர்பட்டதால்
கரும்பன நீள்வயல் சூழ்காழி நாதன் கழலடியே.
24
1224
அடியால் அலர்மிதித் தாலரத் தம்பிற் கமிர்தமின்றிக்
கொடியா னொடும்பின் நடந்ததெவ்வா றலர்கோகனதக்
கடியார் நறுங்கண்ணி ஞானசம் பந்தன் கருதலர்சேர்
வெடியா விடுவெம் பரற்சுறு நாறு வியன்சுரத்தே.
25
1225
சுரபுரத் தார்தந் துயருக் கிரங்கிச் சுரர்கள்தங்கள்
பரபுரத் தார்தந் துயர்கண் டருளும் பரமன்மன்னும்
அரபுரத் தான்அடி எய்துவன் என்ப தவனடிசேர்
சிரபுரத் தான்அடி யார்அடி யேன்என்னும் திண்ணனவே.
26
1226
திண்ணன வார்சென்ற நாட்டிடை இல்லைகொல் தீந்தமிழோர்
கண்ணென ஓங்கும் கவுணியர் தீபன்கை போல்பொழிந்து
விண்ணின வாய்முல்லை மெல்லரும் பீனமற் றியாம்மெலிய
எண்ணின நாள்வழு வாதிறைத் தோடி எழுமுகிலே.
27
1227
எழுவாள் மதியால் வெதுப்புண் டலமந் தெழுந்துவிம்மித்
தொழுவாள் தனக்கின் றருளுங் கொலாந்தொழு நீரவைகைக்
குழுவாய் எதிர்ந்த உறிக்கைப் பறிதலைக் குண்டர்தங்கள்
கழுவா உடலம் கழுவின ஆக்கிய கற்பகமே.
28
1228
கற்பா நறவ மணிகொழுத் துந்து மலைச்சிலம்பா
நற்பா மொழிஎழில் ஞானசம் பந்தன் புறவமன்ன
விற்பா நுதலிதன் மென்முலை யின்னிளம் செவ்விகண்டிட்
டிற்பா விடும்வண்ணம் எண்ணுகின் றாள்அம்ம எம்அனையே.
29
1229
எம்அனை யாய்எந்தை யாய்என்னை ஆண்டென் துயர்தவிர்த்த
செம்மலர் நீள்முடி ஞானசம் பந்தன் புறவமன்னீர்
வெம்முனை வேல்என்ன என்ன மிளிர்ந்து வெளுத்தரிபோன்
றும்மன வோஅல்ல வோவந்தென் உள்ளத்தொளிர்வனவே.
30
1230
ஒளிறு மணிப்பணி நாட்டும் உலகத்தும் உம்பருள்ளும்
வெளிறு படச்சில நிற்பதுண் டேமிண்டி மீன்உகளும்
அளறு வயற்சண்பை நாதன் அமுதப் பதிகமென்னும்
களிறு விடப்புகு மேல்தொண்டர் பாடும் கவிதைகளே.
31
1231
கவிக்குத் தகுவன கண்ணுக் கினியன கேட்கில்இன்பம்
செவிக்குத் தகுவன சிந்தைக் குரியன பைந்தரளம்
நவிக்கண் சிறுமியர் முற்றில் முகந்துதம் சிற்றில்தொறும்
குவிக்கத் திரைபரக் குங்கொச்சை நாதன் குரைகழலே.
32
1232
கழல்கின்ற ஐங்கணை அந்தியும் அன்றிலும் கால்பரப்பிட்
டழல்கின்ற தென்றலும் வந்திங் கடர்ப்பஅன் றாயிழைக்காச்
சுழல்கின்ற நஞ்சந் தணித்தவன் தன்னைத் தொடர்ந்துபின்போய்
உழல்கின்ற நெஞ்சமிங் கென்னோ இனியின் றுறுகின்றதே.
33
1233
உறுகின்ற அன்பினோ டொத்திய தாளமும் உள்ளுருகிப்
பெறுகின்ற இன்பும் பிறைநுதல் முண்டமும் கண்டவரைத்
தெறுகின்ற வாறென்ன செய்தவ மோவந்தென் சிந்தையுள்ளே
துறுகின்ற பாதன் கழுமலம் போலும் துடியிடைக்கே.
34
1234
இடையும் எழுதா தொழியலு மாம்இன வண்டுகளின்
புடையும் எழுதிலும் பூங்குழல் ஒக்கும்அப் பொன்னனையாள்
நடையும் நகையும் தமிழா கரன்தன் புகலிநற்றேன்
அடையும் மொழியும் எழுதிடில் சால அதிசயமே.
35
1235
மேனாட் டமரர் தொழஇருப் பாரும் வினைப்பயன்கள்
தானாட் டருநர கிற்றளர் வாரும் தமிழர்தங்கள்
கோனாட் டருகர் குழாம்வென்ற கொச்சையர் கோன்கமலப்
பூநாட் டடிபணிந் தாரும்அல் லாத புலையருமே.
36
1236
புலையடித் தொண்டனைப் பூசுர னாக்கிப் பொருகயற்கண்
மலைமடப் பாவைக்கு மாநட மாடு மணியைஎன்றன்
தலையிடைப் பாதனைக் கற்றாங் குரைத்தசம் பந்தனென்னா
முலையிடைப் பொன்கொண்டு சங்கிழந் தாள்என்றன் மொய்குழலே.
37
1237
குழலியல் இன்கவி ஞானசம் பந்தன் குரைகழல்போல்
கழலியல் பாதம் பணிந்தேன் உனையும் கதிரவனே
தழலியல் வெம்மை தணித்தருள் நீதணி யாதவெம்மை
அழலியல் கான்நடந் தாள்வினை யேன்பெற்ற ஆரணங்கே.
38
1238
அணங்கமர் யாழ்முரித் தாண்பனை பெண்பனை ஆக்கிஅமண்
கணங்கழு வேற்றிக் கடுவிடந் தீர்த்துக் கதவடைத்துப்
பிணங்கலை நீர்எதிர் ஓடஞ் செலுத்தின வெண்பிறையோ
டிணங்கிய மாடச் சிரபுரத் தான்தன் இருந்தமிழே.
39
1239
இருந்தண் புகலிகோ லக்கா எழில்ஆ வடுதுறைசீர்
பொருந்தும் அரத்துறை போனகம் தாளம்நன்பொன்சிவிகை
அருந்திட வொத்தமுத் தீச்செய ஏறஅரன் அளித்த
பெருந்தகை சீரினை எம்பர மோநின்று பேசுவதே.
40
1240
பேசுந் தகையதன் றேஇன்றும் அன்றும் தமிழ்விரகன்
தேசம் முழுதும் மழைமறந் தூண்கெடச் செந்தழற்கை
ஈசன் திருவரு ளால்எழில் வீழி மிழலையின்வாய்க்
காசின் மழைபொழிந் தானென்றிஞ் ஞாலம் கவின்பெறவே.
41
1241
பெறுவது நிச்சயம் அஞ்சல்நெஞ் சேபிர மாபுரத்து
மறுவறு பொற்கழல் ஞானசம் பந்தனை வாழ்த்துதலால்
வெறியுறு கொன்றை மறியுறு செங்கை விடைஎடுத்த
பொறியுறு பொற்கொடி எம்பெரு மான்அமர் பொன்னுலகே.
42
1242
பொன்னார் மதில்சூழ் புகலிக் கரசை அருகர்தங்கள்
தென்னாட் டரண்அட்ட சிங்கத் தினைஎஞ் சிவன்இவனென்
றந்நாள் சூதலைத் திருவாய் மொழிகள் அருளிச் செய்த
என்னானை யைப்பணி வார்க்கில்லை காண்க யமாலயமே.
43
1243
மாலையொப் பாகும் பிறைமுன்பு நின்று மணிகுறுக்கி
வேலையைப் பாடணைந் தாங்கெழில் மன்மதன் வில்குனித்த
கோலைஎப் போதும் பிடிப்பன் வடுப்படு கொக்கினஞ்சூழ்
சோலையைக் காழித் தலைவன் மலர்இன்று சூடிடினே.
44
1244
சூடுநற் றார்த்தமி ழாகரன் தன்பொற் சுடர்வரைத்தோள்
கூடுதற் கேசற்ற கொம்பினை நீயும் கொடும்பகைநின்
றாடுதற் கேஅத்த னைக்குனை யேநின்னை ஆடரவம்
வாடிடக் காரும் மறுவும் படுகின்ற வாண்மதியே.
45
1245
மதிக்கக் தகுநுதல் மாதொடும் எங்கள் மலையில்வைகித்
துதிக்கத் தகுசண்பை நாதன் சுருதி கடந்துழவோர்
மிதிக்கக் கமலம் முகிழ்த்ததண் தேனுண்டு மிண்டிவரால்
குதிக்கக் குருகிரி யுங்கொச்சை நாடு குறுகுமினே.
46
1246
குறுமனம் முள்கல வாத்தமி ழாகரன் கொச்சையன்ன
நறுமலர் மென்குழ லாய்அஞ்சல் எம்மூர் நகுமதிசென்
றுறுமனை ஒண்சுவர் ஓவியக் கிள்ளைக்கு நும்பதியிற்
சிறுமிகள் சென்றிருந் தங்கையை நீட்டுவர் சேயிழையே.
47
1247
இழைவளர் ஆகத்து ஞானசம் பந்தன் இருஞ்சுருதிக்
கழைவளர் குன்று கடத்தலும் காண்பீர் கடைசியர்நீள்
முழைவளர் நண்டு படத்தடஞ் சாலிமுத் துக்கிளைக்கும்
மழைவளர் நீள்குடு மிப்பொழில் சூழ்ந்த வளவயலே.
48
1248
வயலார் மருகல் பதிதன்னில் வாளர வாற்கடியுண்
டயலா விழுந்த அவனுக் கிரங்கி அறிவழிந்த
கயலார் கருங்கண்ணி தன்துயர் தீர்த்த கருணைவெள்ளப்
புயலார் தருகையி னான் என்னத் தோன்றிடும் புண்ணியமே.
49
1249
புண்ணிய நாடு புகுவதற் காகப் புலன்அடக்கி
எண்ணிய செய்தொழில் நிற்பதெல் லாருமின் றியானெனக்கு
நண்ணிய செய்தொழில் ஞானசம் பந்தனை நந்தமர்நீர்க்
கண்ணியன் மாடக் கழுமலத் தானைக் கருதுவதே.
50
1250
கருதத் தவஅருள் ஈந்தருள் ஞானசம் பந்தன்சண்பை
இரதக் கிளிமொழி மாதே கலங்கல் இவர்உடலம்
பொருதக் கழுநிரை யாக்குவன் நுந்தமர் போர்ப்படையேல்
மருதச் சினையில் பொதும்பருள் ஏறி மறைகுவனே.
51
1251
மறைமுழங் குங்குழ லார்கலி காட்ட வயற்கடைஞர்
பறைமுழங் கும்புக லித்தமி ழாகரன் பற்றலர்போல்
துறைமுழங் குங்கரி சீறி மடங்கல் சுடர்ப்பளிங்கின்
அறைமுழங் கும்வழி நீவரிற் சால வரும்பழியே.
52
1252
பழிக்கே தகுகின்ற தின்றிப் பிறைபல் கதிர்விழுந்த
வழிக்கே திகழ்தரு செக்கரைக் கொச்சை வயவரென்னும்
மொழிக்கே விரும்பி முளரிக் கலமரும் ஓவியர்தம்
கிழிக்கே தரும்உரு வத்திவள் வாடிடக் கீள்கின்றதே.
53
1253
கீளரிக் குன்றத் தரவம் உமிழ்ந்த கிளர்மணியின்
வாளரிக் கும்வைகை மாண்டனர் என்பர் வயற்புகலித்
தாளரிக் கும்மரி யான்அருள் பெற்ற பரசமய
கோளரிக் குந்நிக ராத்தமிழ் நாட்டுள்ள குண்டர்களே.
54
1254
குண்டகழ் சூழ்தரு கொச்சைத் தலைவன்தன் குன்றகஞ்சேர்
வண்டக மென்மலர் வில்லியன் னீர்வரி விற்புருவக்
கண்டக வாளி படப்புடை வீழ்செங் கலங்கலொடும்
புண்டகக் கேழல் புகுந்ததுண் டோநுங்கள் பூம்புனத்தே.
55
1255
புனத்தெழு கைமதக் குன்றம தாயங்கொர் புன்கலையாய்
வனத்தெழு சந்தனப் பைந்தழை யாய்வந்து வந்தடியேன்
மனத்தெழு பொற்கழல் ஞானசம் பந்தன்வண் கொச்சையன்னாள்
கனத்தெழு கொங்கைக ளாய்அல்கு லாய்த்திவர் கட்டுரையே.
56
1256
கட்டது வேகொண்டு கள்ளுண்டு நுங்கைக ளாற்சுணங்கை
இட்டது வேயன்றி எட்டனைத் தான்இவள் உள்ளுறுநோய்
விட்டது வேயன்றி வெங்குரு நாதன்தன் பங்கயத்தின்
மட்டவிழ் தார்கொண்டு சூட்டுமின் பேதை மகிழ்வுறவே.
57
1257
உறவும் பொருளும்ஒண் போகமும் கல்வியும் கல்வியுற்ற
துறவும் துறவிப் பயனும் எனக்குச் சுழிந்தபுனல்
புறவும் பொழிலும் பொழில்சூழ் பொதும்பும் ததும்பும்வண்டின்
நறவும் பொழில்எழிற் காழியர் கோன்திரு நாமங்களே.
58
1258
நாம்உகந் தேத்திய ஞானசம் பந்தனை நண்ணலர்போல்
ஏமுக வெஞ்சரஞ் சிந்திவல் இஞ்சி இடிபடுக்கத்
தீமுகந் தோன்றிகள் தோன்றத் தளவ முகைஅரும்பக்
காமுகம் பூமுகம் காட்டிநின் றார்த்தன காரினமே.
59
1259
காரங் கணைபொழிற் காழிக் கவுணியர் தீபன்நல்லூர்ச்
சீரங் கணைநற் பெருமணந் தன்னிற்சிவபுரத்து
வாரங் கணைகொங்கை மாதொடும் புக்குறும் போதுவந்தார்
ஆரங் கொழிந்தனர் பெற்றதல் லால்அவ் வரும்பதமே.
60
1260
அரும்பதம் ஆக்கும் அடியரொ டஞ்சலித் தார்க்கரிய
பெரும்பதம் எய்தலுற் றீர்வந் திறைஞ்சுமின் பேரரவம்
வரும்பத நான்மறைக் காழித் தலைவன் மலர்க்கமலத்
தரும்பத ஞானசம் பந்தன்என் னானைதன் தாளிணையே.
61
1261
தாளின் சரணம் தருஞ்சண்பை நாதன் தரியலர்போல்
கீளின் மலங்க விலங்கே புகுந்திடுங் கெண்டைகளும்
வாளுந் தொலைய மதர்த்திரு காதின் அளவும்வந்து
மீளுங் கருங்கண்ணி மின்புரி யாவைத்த மென்னகையே.
62
1262
நகுகின்ற முல்லைநண் ணார்எரி கண்டத் தவர்கவர்ந்த
மிகுகின்ற நன்னிதி காட்டின கொன்றை விரவலர்ஊர்
புகுகின்ற தீயெனப் பூத்தன தோன்றிப் புறமவன்கைத்
தகுகின்ற கோடல்கள் அன்பரின் றெய்துவர் கார்மயிலே.
63
1263
மயிலேந் தியவள்ளல் தன்னை அளிப்ப மதிபுணர்ந்த
எயிலேந் தியசண்பை நாதன் உலகத் தெதிர்பவர்யார்
குயிலேந் தியபொழிற் கொங்கேந் தியகொம்பின் அம்புதழீஇ
அயிலேந் தியமலர் கண்டுள னாய்வந்த அண்ணலுக்கே.
64
1264
அண்ணல் மணிவளைத் தோள்அரு காசனி சண்பையன்ன
பெண்ணின் அமிர்தநல் லாள்குழல் நாற்றம் பெடையொடும்பூஞ்
சுண்ணம் துதைந்தவண் டேகண்ட துண்டுகொல் தூங்கொலிநீர்த்
தண்ணம் பொழில்எழிற் காசினி பூத்தமென் தாதுகளே.
65
1265
தாதுகல் தோய்த்தநஞ் சன்னாசி யார்சட லம்படுத்துத்
தூதையிற் சிக்கங் கரஞ்சேர்த்து வாளா துலுக்குகின்றீர்
போதியிற் புத்தர்கள் வம்மின் புகலியர் கோனன்னநாட்
காதியிட் டேற்றுங் கழுத்திறம் பாடிக் களித்திடவே.
66
1266
களியுறு தேன்தார்க் கவுணியர் தீபன் கருதலர்போல்
வெளியுறு ஞாலம் பகல்இழந் தால்விரை யார்கமலத்
தளியுறு மென்மலர்த் தாதளைந் தாழி அமைப்பவரும்
துளியுறு வாடையி தாம்மட மானைத் துவள்விப்பதே.
67
1267
தேறும் புனல்தில்லைச் சிற்றம்பலத்துச் சிறந்துவந்துள்
ஊறும் அமிர்தைப் பருகிட் டெழுவதோர் உட்களிப்புக்
கூறும் வழிமொழி தந்தெனை வாழ்வித்தவன் கொழுந்தேன்
நாறும் அலங்கல் தமிழா கரனென்னும் நன்னிதியே.
68
1268
நிதியுறு வார்அறன் இன்பம்வீ டெய்துவர் என்னவேதம்
துதியுறு நீள்வயற் காழியர் கோனைத் தொழாரின்நைய
நதியுறு நீர்தெளித் தஞ்சல் எனஅண்ணல் அன்றோஎனா
மதியுறு வாணுதல் பாதம் பணிந்தனள் மன்னனையே.
69
1269
மன்னங் கனைசெந் தமிழா கரன்வெற்பில் வந்தொருவர்
அன்னங்கள் அஞ்சன்மின் என்றடர் வேழத் திடைவிலங்கிப்
பொன்னங் கலைசா வகைஎடுத் தாற்கிவள் பூண்அழுந்தி
இன்னந் தழும்புள வாம்பெரும் பாலும்அவ் ஏந்தலுக்கே.
70
1270
ஏந்தும் உலகுறு வீர்எழில் நீலநக் கற்கும்இன்பப்
பூந்தண் புகலூர் முருகற்கும் தோழனைப் போகமார்ப்பைக்
காந்துங் கனலிற் குளிர்படுத் துக்கடற் கூடலின்வாய்
வேந்தின் துயர்தவிர்த் தானைஎப் போதும் விரும்புமினே.
71
1271
விரும்பும் புதல்வனை மெய்யரிந் தாக்கிய இன்னமிர்தம்
அரும்பும் புனற்சடை யாய்உண் டருள் என் றடிபணிந்த
இரும்பின் சுடர்க்களிற் றான்சிறுத் தொண்டனை ஏத்துதிரேல்
சுரும்பின் மலர்த்தமி ழாகரன் பாதத் தொடர்வெளிதே.
72
1272
எளிவந்த வாஎழிற் பூவரை ஞாண்மணித் தார்தழங்கத்
துளிவந்த கண்பிசைந் தேங்கலும் எங்கள் அரன்துணையாம்
கிளிவந்த சொல்லிபொற் கிண்ணத்தின் ஞான அமிர்தளித்த
அளிவந்த பூங்குஞ்சி யின்சொற் சிறுக்கன்தன் ஆரருளே.
73
1273
அருளும் தமிழா கரன்நின் அலங்கல்தந் தென்பெயரச்
சுருளுங் குழலியற் கீந்திலை யேமுன்பு தூங்குகரத்
துருளும் களிற்றினொ டோட்டரு வானை அருளியன்றே
மருளின் மொழிமட வாள்பெயர் என்கண் வருவிப்பதே.
74
1274
வருவார் உருவின் வழிவழி வைத்த வனமருந்தும்
திருவார் இருந்த செழுநகர்ச் செவ்வித் திருவடிக்காள்
தருவான் தமிழா கரன்கரம் போற்சலம் வீசக்கண்டு
வெருவா வணங்கொண்டல் கள்மிண்டி வானத்து மின்னியவே.
75
1275
மின்னார் குடுமி நெடுவெற் பகங்கொங்கில் வீழ்பனிநோய்
தன்னார் வழிகெட் டழிந்தமை சொல்லுவர் காண்இறையே
மன்னார் பரிசனத் தார்மேற் புகலும் எவர்க்கும்மிக்க
நன்னா வலர்பெரு மான்அரு காசனி நல்கிடவே.
76
1276
நல்கென் றடியின் இணைபணி யார்சண்பை நம்பெருமான்
பல்கும் பெரும்புகழ் பாடகில் லார்சிலர் பாழ்க்கிறைத்திட்
டொல்கும் உடம்பின ராய்வழி தேடிட் டிடறிமுட்டிப்
பில்கும் இடம்அறி யார்கெடு வார்உறு பேய்த்தனமே.
77
1277
தனமே தருபுகழ்ச் சைவ சிகாமணி தன்அருள்போல்
மனமே புகுந்த மடக்கொடி யேமலர் மேல்இருந்த
அனமே அமிர்தக் குமுதச் செவ்வாய்உங்கள் ஆயமென்னும்
இனமே பொலியவண் டாடெழிற் சோலையுள் எய்துகவே.
78
1278
உகட்டித்து மோட்டு வராலினம் மேதி முலைஉரிஞ்ச
அகட்டிற் சொரிபால் தடம்நிறை கொச்சை வயத்தரசைத்
தகட்டில் திகழ்மணிப் பூண்தமி ழாகரன் தன்னையல்லால்
பகட்டில் பொலியினும் வேண்டேன் ஒருவரைப் பாடுதலே.
79
1279
பாடிய செந்தமி ழாற்பழங் காசு பரிசில்பெற்ற
நீடிய சீர்த்திரு ஞானசம் பந்தன் நிறைபுகழான்
நேடிய பூந்திரு நாவுக் கரசோ டெழில்மிழலைக்
கூடிய கூட்டத்தி னால்உள தாய்த்திக் குவலயமே.
80
1280
வலையத் திணிதோள் மிசைமழ வேற்றி மனைப்புறத்து
நிலைஎத் தனைபொழு தோகண்ட தூரனை நீதிகெட்டார்
குலையக் கழுவின் குழுக்கண்ட வன்திகழ் கொச்சையன்ன
சிலையொத்த வாள்நுதல் முன்போல் மலர்க திருக்கண்களே.
81
1281
கண்ணார் திருநுத லோன்கோலக் காவில் கரநொடியால்
பண்ணார் தரப்பாடு சண்பையர் கோண்பாணி நொந்திடுமென்
றெண்ணா எழுத்தஞ்சும் இட்டபொன் தாளங்கள் ஈயக்கண்டும்
மண்ணார் சிலர்சண்பை நாதனை ஏத்தார் வருந்துவதே.
82
1282
வருந்துங் கொலாங்கழல் மண்மிசை ஏகிடின் என்றுமென்றார்த்
திருந்தும் புகழ்ச்ண்பை ஞானசம் பந்தற்குச் சீர்மணிகள்
பொருந்துஞ் சிவிகை கொடுத்தனன் காண்புண ரித்திகழ்நஞ்
சருந்தும் பிரான்நம் அரத்துறை மேய அரும்பொருளே.
83
1283
பொருளென என்னைத்தன் பொற்கழல் காட்டிப் புகுந்தெனக்கிங்
கருளிய சீர்த்திரு ஞானசம் பந்தன் அருளிலர்போல்
வெருளின மானின்மென் நோக்கியை விட்டு விழுநிதியின்
திரளினை ஆதரித் தானன்று சாலஎன் சிந்தனைக்கே.
84
1284
சிந்தையைத் தேனைத் திருவா வடுதுறை யுள்திகழும்
எந்தையைப் பாடல் இசைத்துத் தொலையா நிதியம்எய்தித்
தந்தையைத் தீத்தொழில் மூட்டிய கோன்சரண் சார்விலரேல்
நிந்தையைப் பெற்றொழி யாதிரந் தேகரம் நீட்டுவரே.
85
1285
நீட்டுவ ரோதத்தொ டேறிய சங்கம் நெகுமுளரித்
தோட்டுவெண் முத்தம் சொரிசண்பை நாதன் தொழாதவரில்
வேட்டுவர் வேட்டதண் ணீரினுக் குண்ணீர் உணக்குழித்த
காட்டுவர் ஊறல் பருகுங் கொலாம்எம் கணங்குழையே.
86
1286
குழைக்கின்ற கொன்றைபொன் போல மலரநுங் கூட்டமெல்லாம்
அழைக்கின்ற கொண்டல் இயம்புன் னிலையகன் றார்வரவு
பிழைக்கின் றதுகொலென் றஞ்சியொண் சண்பைப் பிரான்புறவத்
திழைக்கின்ற கூடல் முடியஎண் ணாத இளங்கொடிக்கே.
87
1287
கொடித்தேர் அவுணர் குழாம்அனல் ஊட்டிய குன்றவில்லி
அடித்தேர்கருத்தின் அருகா சனியை அணியிழையார்
முடித்தேர் கமலம் கவர்வான் முரிபுரு வச்சிலையால்
வடித்தேர் நயனக் கணையிணை கோத்து வளைத்தனரே.
88
1288
வளைபடு தண்கடல் கொச்சை வயவன் மலர்க்கழற்கே
வளைபடு நீண்முடி வார்புன லூரன்தன் நீரிலங்கு
வளைபடு கண்ணியர் தம்பொதுத் தம்பலம் நாறும்இந்த
வளைபடு கிங்கிணிக் கால்மைந்தன் வாயின் மணிமுத்தமே.
89
1289
முத்தன வெண்ணகை யார்மயல் மாற்றி முறைவழுவா
தெத்தனை காலம்நின் றேத்தும் அவரினும் என்பணிந்த
பித்தனை எங்கள் பிரானை அணைவ தெளிதுகண்டீர்
அத்தனை ஞானசம பந்தனைப் பாதம் அடைந்தவர்க்கே.
90
1290
அடைத்தது மாமறைக் காடர்தம் கோயிற் கதவினையன்
றுடைத்தது பாணன்தன் யாழின் ஒலியை உரகவிடம்
துடைத்தது தோணி புரத்துக் கிறைவன் சுடரொளிவாய்
படைத்தது தண்மையை நள்ளாற் றரசு பணித்திடவே.
91
1291
பணிபடு நுண்ணிடை பாதம் பொறாபல காதம்என்று
தணிபடும் இன்சொற்க ளால்தவிர்த் தேற்குத் தழல்உமிழ்கான்
மணிபடு பொற்கழல் ஞானசம் பந்தன் மருவலர்போல்
துணிபடு வேலன்ன கண்ணியென் னோவந்து தோன்றியதே.
92
1292
தோன்றல்தன் னோடுடன் ஏகிய சுந்தரப் பூண்முலையை
ஈன்றவ ரேஇந்த ஏந்திழை யாரவர் இவ்வளவில்
வான்றவர் சூழுந் தமிழா கரன்தன் வடவரையே
போன்றபொன் மாடக் கழுமல நாடு பொருந்துவரே.
93
1293
பொருந்திடு ஞானத் தமிழா கரன்பதி பொற்புரிசை
திருந்திய தோணி புரத்துக் கிறைவன் திருவருளால்
கருந்தடம் நீரெழு காலையில் காகூ கழுமலமென்
றிருந்திட வாம்என்று வானவ ராகி இயங்கியதே.
94
1294
இயலா தனபல சிந்தைய ராய்இய லுங்கொல்என்று
முயலா தனவே முயன்றுவன் மோகச் சுழிஅழுந்திச்
செயலார் வரைமதில் காழியர் கோன்திரு நாமங்களுக்
கயலார் எனப்பல காலங்கள் போக்குவர் ஆதர்களே.
95
1295
ஆதர வும்பயப் பும்இவள் எய்தினள் என்றயலார்
மாதர் அவஞ்சொல்லி என்னை நகுவது மாமறையின்
ஓதர வம்பொலி காழித் தமிழா கரனொடன்றே
தீதர வம்பட அன்னைஎன் னோபல செப்புவதே.
96
1296
செப்பிய என்ன தவம்முயன் றேன்நல்ல செந்தமிழால்
ஒப்புடை மாலைத் தமிழா கரனை உணர்வுடையோர்
கற்புடை வாய்மொழி ஏத்தும் படிகத றிட்டிவர
மற்படு தொல்லைக் கடல்புடை சூழ்தரு மண்ணிடையே.
97
1297
மண்ணில் திகழ்சண்பை நாதனை வாதினில் வல்அமணைப்
பண்ணைக் கழுவின் நுதிவைத்தெம் பந்த வினைஅறுக்கும்
கண்ணைக் கதியைத் தமிழா கரனைஎங் கற்பகத்தைத்
திண்ணற் றொடையல் கவுணியர் தீபனைச் சேர்ந்தனமே.
98
1298
சேரும் புகழ்த்திரு ஞானசம் பந்தனை யான்உரைத்த
பேருந் தமிழ்ப்பா இவைவல் லவர்பெற்ற இன்புலகம்
காருந் திருமிடற் றாய்அரு ளாய்என்று கைதொழுவர்
நீரும் மலரும் கொளாநெடு மாலும் பிரமனுமே.
99
1299
பிரமா புரம்வெங் குருசண்பை தோணி புகலிகொச்சை
சிரமார் புரம்நற் புறவந் தராய்காழி வேணுபுரம்
வரமார் பொழில்திரு ஞானசம் பந்தன் பதிக்குமிக்க
பரமார் கழுமலம் பன்னிரு நாமம்இப் பாரகத்தே.
100
1300
பாரகலத் துன்பம் கடந்தமர ராற்பணியும்
ஏரகலம் பெற்றாலும் இன்னாதால் - காரகிலின்
தூமம் கமழ்மாடத் தோணி புரத்தலைவன்
நாமஞ் செவிக்கிசையா நாள்.
101
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

நம்பியாண்டார் நம்பி அருளியது
பதினோராம் திருமுறை
5. ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
1301
பாலித் தெழில்தங்கு பார்முகம் உய்யப் பறிதலையோர்
மாலுற் றழுந்த அவதரித் தோன்மணி நீர்க்கமலத்
தாலித் தலர்மிசை அன்னம் நடப்ப அணங்கிதென்னாச்
சாலித் தலைபணி சண்பையர் காவலன் சம்பந்தனே.
1
1302
கொங்குதங் குங்குஞ்சி கூடாப் பருவத்துக் குன்றவில்லி
பங்குதங்கும் மங்கை தன்னருள் பெற்றவன் பைம்புணரிப்
பொங்குவங் கப்புனல் சேர்த்த புதுமணப் புன்னையின்கீழ்ச்
சங்குதங் கும்வயற் சண்பையர் காவலன் சம்பந்தனே.
2
1303
குவளைக் கருங்கண் கொடியிடை துன்பம் தவிரஅன்று
துவளத் தொடுவிடம் தீர்த்த தமிழின் தொகைசெய்தவன்
திவளக் கொடிக்குன்ற மாளிகைச் சூளிகைச் சென்னியின்வாய்த்
தவளப் பிறைதங்கு சண்பையர் காவலன் சம்பந்தனே.
3
1304
கள்ளம் பொழில்நனி பள்ளித் தடங்கடம் ஆக்கிஅஃதே
வெள்ளம் பணிநெய்தல் ஆக்கிய வித்தகன் வெண்குருகு
புள்ளொண் தவளப் புரிசங்கொ டாலக் கயல்உகளத்
தள்ளந் தடம்புனல் சண்பையர் காவலன் சம்பந்தனே.
4
1305
ஆறதே றுஞ்சடை யான்அருள் மேவ அவனியர்க்கு
வீறதே றுந்தமி ழால்வழி கண்டவன் மென்கிளிமாந்
தேறல்கோ தித்தூறு சண்பகம் தாவிச் செழுங்கமுகின்
தாறதே றும்பொழிற் சண்பையர் காவலன் சம்பந்தனே.
5
1306
அந்தமுந் தும்பிற வித்துயர் தீர அரனடிக்கே
பந்தமுந் தும்தமிழ் செய்த பராபரன் பைந்தடத்தேன்
வந்துமுந் தும்நந்தம் முத்தங் கொடுப்ப வயற்கயலே
சந்தமுந் தும்பொழிற் சண்பையர் காவலன் சம்பந்தனே.
6
1307
புண்டலைக் குஞ்சரப் போர்வையர் கோயிற் புகஅடைக்கும்
ஒண்டலைத் தண்டமிழ்க் குண்டா சனிஉம்பர் பம்பிமின்னும்
கொண்டலைக் கண்டுவண் டாடப் பெடையொடும் கொக்குறங்கும்
தண்டலைக் குண்டகழ்ச் சண்பையர் காவலன் சம்பந்தனே.
7
1308
எண்டலைக் குந்தலை வன்கழல் சூடிஎன் உள்ளம்வெள்ளம்
கண்டலைப் பத்தன் கழல்தந்த வன்கதிர் முத்தநத்தம்
விண்டலைப் பத்தியில் ஓடும் விரவி மிளர்பவளம்
தண்டலைக் கும்கடற் சண்பையர் காவலன் சம்பந்தனே.
8
1309
ஆறுமண் டப்பண்டு செஞ்சொல் நடாத்தி அமண்முழுதும்
பாறுமண் டக்கண்ட சைவ சிகாமணி பைந்தடத்த
சேறுமண் டச்சங்கு செங்கயல் தேமாங் கனிசிதறிச்
சாறுமண் டும்வயல் சண்பையர் காவலன் சம்பந்தனே.
9
1310
விடந்திளைக் கும்அர வல்குல்மென் கூந்தல் பெருமணத்தின்
வடந்திளைக் குங்கொங்கை புல்கிய மன்மதன் வண்கதலிக்
கடந்திளைத் துக்கழு நீர்புல்கி ஒல்கிக் கரும்புரிஞ்சித்
தடந்திளைக் கும்புனல் சண்பையர் காவலன் சம்பந்தனே.
10
1311
பாலித்த கொங்கு குவளைகள் ளம்பொழில் கீழ்ப்பரந்து
ஆலிப்ப ஆறதே றுங்கழ னிச் சண்பை அந்தமுந்து
மேலிட்ட புண்டலைக் குஞ்சரத் தெண்டலைக் குந்தலைவன்
கோலிட்ட வாறு விடந்திளைக் கும்அர வல்குலையே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

நம்பியாண்டார் நம்பி அருளியது
பதினோராம் திருமுறை
6. ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை
அகவற்பா
1312
திங்கட் கொழுந்தொடு பொங்கரவு திளைக்கும்
கங்கைப் பேரியாற்றுக் கடுவரற் கலுழியின்
இதழியின் செம்பொன் இருகரை சிதறிப்
புதலெருக்கு மலர்த்தும் புரிபுன் சடையோன்
திருவருள் பெற்ற இருபிறப் பாளன் ...(5)

முத்தீ வேள்வி நான்மறை வளர
ஐவேள் வுயர்த்த அறுதொழி லாளன்
ஏழிசை யாழை எண்டிசை அறியத்
துண்டப் படுத்த தண்டமிழ் விரகன்
காழி நாடன் கவுணியர் தலைவன் ...(10)

மாழை நோக்கி மலைமகள் புதல்வன்
திருந்திய பாடல் விரும்பினர்க் கல்லது
கடுந்துயர் உட்புகக் கைவிளிக் கும்இந்
நெடும்பிற விக்கடல் நீந்துவ தரிதே.
1
வெண்பா
1313
அரியோடு நான்முகத்தோன் ஆதிசுரர்க் கெல்லாம்
தெரியாமை செந்தழலாய் நின்ற - ஒருவன்சீர்
தன்தலையின் மேல்தரித்த சம்பந்தன் தாளிணைகள்
என்தலையின் மேலிருக்க என்று.
2
கட்டளைக் கலித்துறை
1314
என்றும் அடியவர் உள்ளத் திருப்பன இவ்வுலகோர்
நன்று மலர்கொடு தூவித் துதிப்பன நல்லசங்கத்
தொன்றும் புலவர்கள் யாப்புக் குரியன ஒண்கலியைப்
பொன்றும் கவுணியன் சைவ சிகாமணி பொன்னடியே.
3
அகவற்பா
1315
அடுசினக் கடகரி அதுபட உரித்த
படர்சடைக் கடவுள்தன் திருவருள் அதனால் பிறந்தது
கழுமலம் என்னும் கடிநக ரதுவே வளர்ந்தது
தேங்கமழ் வாவிச் சிலம்பரை யன்பெறு
பூங்குழல் மாதிடு போனகம் உண்டே பெற்றது ...(5)

குழகனைப் பாடிக் கோலக் காப்புக்
கழகுடைச் செம்பொற் றாளம் அவையே தீர்த்தது
தாதமர் மருகற் சடையனைப் பாடிப்
பேதுறு பெண்ணின் கணவனை விடமே அடைத்தது
அரைசோ டிசையா அணிமறைக் காட்டுக் ...(10)

குரைசேர் குடுமிக் கொழுமணிக் கதவே ஏறிற்று
அத்தியும் மாவும் தவிர அரத்துறை
முத்தின் சிவிகை முன்னாள் பெற்றே பாடிற்று
அருமறை ஓத்தூர் ஆண்பனை அதனைப்
பெருநிறம் எய்தும் பெண்பனை யாவே கொண்டது ...(15)

பூவிடு மதுவில் பொறிவண் டுழலும்
ஆவடு துறையில் பொன்னா யிரமே கண்டது
உறியொடு பீலி ஒருகையிற் கொள்ளும்
பறிதலைச் சமணைப் பல்கழு மிசையே நீத்தது
அவிழ்ச்சுவை யேஅறிந் தரனடி பரவும் ...(20)

தமிழ்ச்சுவை அறியாத் தம்பங் களையே நினைந்தது
அள்ளற் பழனக் கொள்ளம் பூதூர்
இக்கரை ஓடம் அக்கரைச் செலவே மிக்கவர்
ஊனசம் பந்தம் அறுத்துயக் கொளவல
ஞானசம் பந்தன்இஞ் ஞாலத் திடையே. ...(25)
4
வெண்பா
1316
நிலத்துக்கு மேல்ஆறு நீடுலகத் துச்சித்
தலத்துக்கு மேலேதான் என்பர் - சொலத்தக்க
சுத்தர்கள்சேர் காழிச் சுரன்ஞான சம்பந்தன்
பத்தர்கள்போய் வாழும் பதி.
5
கட்டளைக் கலித்துறை
1317
பதிகம் பலபாடி நீடிய பிள்ளை பரசுதரற்
கதிகம் அணுக்கன் அமணர்க்குக் காலன் அவதரித்த
மதியம் தவழ்மாட மாளிகைக் காழிஎன் றால்வணங்கார்
ஒதியம் பணைபோல் விழுவர்அந் தோசில ஊமர்களே.
6
அகவற்பா
1318
கவள மாளிகைத் திவளும் யானையின்
கவுள்தலைக் கும்பத்து
உம்பர்ப் பதணத் தம்புதம் திளைக்கும்
பெருவளம் தழீஇத் திருவளர் புகலி
விளங்கப் பிறந்த வளங்கொள்சம் பந்தன் ....(5)

கருதியஞ் செவ்விச் சுருதியஞ் சிலம்பில்
தேமரு தினைவளர் காமரு புனத்து
மும்மதஞ் சொரியும் வெம்முகக் கைம்மா
மூரி மருப்பின் சீரிய முத்துக்
கொடுஞ்சிலை வளைத்தே கொடுஞ்சரந் துரந்து ...(10)

முற்பட வந்து முயன்றங் குதவிசெய்
வெற்பனுக் கலது
சுணங்கணி மென்முலைச் சுரிகுழல் மாதினை
மணஞ்செய மதிப்பது நமக்குவன் பழியே.
7
வெண்பா
1319
பழிஒன்றும் ஓராதே பாய்இடுக்கி வாளா
கழியுஞ் சமண்கையர் தம்மை - அழியத்
துரந்தரங்கச் செற்றான் சுரும்பரற்றும் பாதம்
நிரந்தரம்போய் நெஞ்சே நினை.
8
கட்டளைக் கலித்துறை
1320
நினைஆ தரவெய்தி மேகலை நெக்கு வளைசரிவாள்
தனைஆவ என்றின் றருளுதி யேதடஞ் சாலிவயற்
கனையா வருமேதி கன்றுக் கிரங்கித்தன் கால்வழிபால்
நனையா வருங்காழி மேவிய சீர்ஞான சம்பந்தனே.
9
அகவற்பா
1321
தனமலி கமலத் திருவெனும் செல்வி
விருப்பொடு திளைக்கும் வீயா இன்பத்து
ஆடக மாடம் நீடுதென் புகலிக்
காமரு கவினார் கவுணியர் தலைவ
பொற்பமர் தோள நற்றமிழ் விரக ...(5)

மலைமகள் புதல்வ கலைபயில் நாவ நினாது
பொங்கொளி மார்பில் தங்கிய திருநீறு
ஆதரித் திறைஞ்சிய பேதையர் கையில்
வெள்வளை வாங்கிச் செம்பொன் கொடுத்தலின்
பிள்ளை யாவது தெரிந்தது பிறர்க்கே. ...(10)
10
வெண்பா
1322
பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
துறவியெனும் தோற்றோணி கண்டீர் -நிறைஉலகிற்
பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன்
தன்மாலை ஞானத் தமிழ்.
11
கட்டளைக் கலித்துறை
1323
ஞானந் திரளையி லேஉண் டனையென்று நாடறியச்
சோனந் தருகுழ லார்சொல் லிடாமுன் சுரும்புகட்குப்
பானந் தருபங்க யத்தார் கொடுபடைச் சால்வழியே
கூனந் துருள்வயல் சூழ்காழி மேவிய கொற்றவனே.
12
அகவற்பா
1324
அவனிதலம் நெரிய எதிர்எதிர் மலைஇச்
சொரிமதக் களிற்று மத்தகம் போழ்ந்து
செஞ்சே றாடிச் செல்வன அரியே எஞ்சாப்
படவர வுச்சிப் பருமணி பிதுங்கப்
பிடரிடைப் பாய்வன பேழ்வாய்ப் புலியே இடையிடைச் ...(5)

செறியிருள் உருவச் சேண்விசும் பதனிற்
பொறியென விழுவன பொங்கொளி மின்னே
உறுசின வரையால் உந்திய கலுழிக்
கரையால் உழல்வன கரடியின் கணனே நிரையார்
பொருகடல் உதைந்த சுரிமுகச் சங்கு ....(10)

செங்கயல் கிழித்த பங்கய மலரின்
செம்மடல் நிறைய வெண்முத் துதிர்க்கும்
பழனக் கழனிக் கழுமல நாடன்
வைகையில் அமணரை வாதுசெய் தறுத்த
சைவ சிகாமணி சம்பந்தன் வெற்பிற் ...(15)

சிறுகிடை யவள்தன் பெருமுலை புணர்வான்
நெறியினில் வரலொழி நீமலை யோனே.
13
வெண்பா
1325
மலைத்தலங்கள் மீதேறி மாதவங்கள் செய்து
முலைத்டங்கள் நீத்தாலும் மூப்பர் - கலைத்தலைவன்
சம்பந்தற் காளாய்த் தடங்காழி கைகூப்பித்
தம்பந்தம் தீராதார் தாம்.
14
கட்டளைக் கலித்துறை
1326
தாமரை மாதவி சேறிய நான்முகன் தன்பதிபோல்
காமரு சீர்வளர் காழிநன் னாடன் கவித்திறத்து
நாமரு மாதவர் போல்அழ கீந்துநல் வில்லிபின்னே
நீர்மரு வாத சுரத்தெங்ஙன் ஏகும்என் நேரிழையே.
15
அகவற்பா
1327
இழைகெழு மென்முலை இதழிமென் மலர்கொயத்
தழைவர ஒசித்த தடம்பொழில் இதுவே காமர்
சுனைகுடைந் தேறித் துகிலது புனையநின்று
எனையுங் கண்டு வெள்கிடம் இதுவே தினைதொறும்
பாய்கிளி இரியப் பைவந் தேறி ...(5)

ஆயவென் றிருக்கும் அணிப்பரண் இதுவே ஈதே
இன்புறு சிறுசொல் அவைபல இயற்றி
அன்புசெய் தென்னை ஆட்கொளும் இடமே பொன்புரை
தடமலர்க் கமலக் குடுமியி லிருந்து
நற்றொழில் புரியும் நான்முகன் நாட்டைப் ...(10)

புற்கடை கழீஇப் பொங்கு சராவத்து
நெய்த்துடுப் பெடுத்த முத்தீப் புகையால்
நாள்தொறும் மறைக்குஞ் சேடுறு காழி
எண்டிசை நிறைந்த தண்டமிழ் விரகன்
நலங்கலந் தோங்கும் விலங்கலின் மாட்டுப் ...(15)

பூம்புனம் அதனிற் காம்பன தோளி
பஞ்சில் திருந்தபடி நோவப் போய்எனை
வஞ்சித் திருந்த மணியறை இதுவே.
16
வெண்பா
1328
வேழங்கள் எய்பவர்க்கு வில்லாவ திக்காலம்
ஆழங் கடல்முத்தம் வந்தலைக்கும் - நீள்வயல்சூழ்
வாய்ந்ததிவண் மாட மதிற்காழிக் கோன்சிலம்பிற்
சாய்ந்தது வண்தழையோ தான்.
17
கட்டளைக் கலித்துறை
1329
தழைக்கின்ற சீர்மிகு ஞானசம் பந்தன் தடமலைவாய்
அழைக்கின்ற மஞ்ஞைக் கலர்ந்தன கோடல்அம் பெய்திடுவான்
இழைக்கின்ற தந்தரத் திந்திர சாபம்நின் எண்ணமொன்றும்
பிழைக்கின்ற தில்லைநற் றேர்வந்து தோன்றிற்றுப் பெய்வளையே.
18
அகவற்பா
1330
வளைகால் மந்தி மாமரப் பொந்தில்
விளைதேன் உண்டு வேணுவின் துணியாற்
பாறை யில்துயில் பனைக்கை வேழத்தை
உந்தி எழுப்பும் அந்தண் சிலம்ப அஃதிங்கு
என்னையர் இங்கு வருவர் பலரே ...(5)

அன்னை காணில் அலர்தூற் றும்மே பொன்னார்
சிறுபரற் கரந்த விளிகுரற் கிங்கிணி
சேவடி புல்லிச் சில்குரல் இயற்றி
அமுதுண் செவ்வாய் அருவி தூங்கத்
தாளம் பிரியாத் தடக்கை அசைத்துச் ....(10)

சிறுகூத் தியற்றிச் சிவன்அருள் பெற்ற
நற்றமிழ் விரகன் பற்றலர் போல
இடுங்கிய மனத்தொடும் ஒடுங்கிய சென்று
பருதியுங் குடகடல் பாய்ந்தனன்
கருதிநிற் பதுபிழை கங்குலிப் புனத்தே. ..(15)
19
வெண்பா
1331
தேம்புனமே உன்னைத் திரிந்து தொழுகின்றேன்
வாம்புகழ்சேர் சம்பந்தன் மாற்றலர்போல் - தேம்பி
அழுதகன்றாள் என்னா தணிமலையர் வந்தால்
தொழதகன்றாள் என்றுநீ சொல்லு.
20
கட்டளைக் கலித்துறை
1332
சொற்செறி நீள்கவி செய்தன்று வைகையில் தொல்அமணர்
பற்செறி யாவண்ணம் காத்தசம் பந்தன் பயில்சிலம்பில்
கற்செறி வார்சுனை நீர்குடைந் தாடும் கனங்குழையை
இற்செறி யாவண்ணம் காத்திலை வாழி இரும்புனமே.
21
அகவற்பா
1333
புனலற வறந்த புன்முளி சுரத்துச்
சினமலி வேடர் செஞ்சரம் உரீஇப்
படுகலைக் குளம்பின் முடுகு நாற்றத்
தாடும் அரவின் அகடு தீயப்
பாடு தகையின் பஞ்சுரங் கேட்டுக் ...(5)

கள்ளியங் கவட்டிடைப் பள்ளி கொள்ளும்
பொறிவரிப் புறவே உறவலை காண்நீ நறைகமழ்
தேம்புனல் வாவித் திருக்கழு மலத்துப்
பையர வசைத்த தெய்வ நாயகன்
தன்அருள் பெற்ற பொன்னணிக் குன்றம் ....(10)

மானசம் பந்தம் மண்மிசைத் துறந்த
ஞானசம் பந்தனை நயவார் கிளைபோல்
வினையேன் இருக்கும் மனைபிரி யாத
வஞ்சி மருங்குல் அஞ்சொற் கிள்ளை
ஏதிலன் பின்செல விலக்கா தொழிந்தனை ...(15)

ஆதலின் புறவே உறவலை நீயே.
22
வெண்பா
1334
அலைகடலின் மீதோடி அந்நுளையர் வீசும்
வலைகடலில் வந்தேறு சங்கம் - அலர்கடலை
வெண்முத் தவிழ்வயல்சூழ் வீங்குபுனற் காழியே
ஒண்முத் தமிழ்பயந்தான் ஊர்.
23
கட்டளைக் கலித்துறை
1335
ஊரும் பசும்புர வித்தேர் ஒளித்த தொளிவிசும்பில்
கூரும் இருளொடு கோழிகண் துஞ்சா கொடுவினையேற்
காரும் உணர்ந்திலர் ஞானசம் பந்தன்அந் தாமரையின்
தாரும் தருகிலன் எங்ஙனம் யான்சங்கு தாங்குவதே.
24
அகவற்பா
1336
தேமலி கமலப் பூமலி படப்பைத்
தலைமுக டேறி இளவெயிற் காயும்
கவடிச் சிறுகாற் கர்க்கட கத்தைச்
சுவடிச் சியங்கும் சூல்நரி முதுகைத்
துன்னி எழுந்து செந்நெல் மோதும் ...(5)

காழி நாட்டுக் கவுணியர் குலத்தை
வாழத் தோன்றிய வண்டமிழ் விரகன்
தெண்டிரைக் கடல்வாய்க்
காண்டகு செவ்விக் களிறுகள் உகுத்த
முட்டைமுன் கவரும் பெட்டையங் குருகே ....(10)

வாடை அடிப்ப வைகறைப் போதிற்
தனிநீ போந்து பனிநீர் ஒழுகக்
கூசிக் குளிர்ந்து பேசா திருந்து
மேனி வெளுத்த காரணம் உரையாய்
இங்குத் தணந்தெய்தி நுமரும் ...(15)

இன்னம்வந் திலரோ சொல்லிளங் குருகே.
25
வெண்பா
1337
குருகும் பணிலமும் கூன்நந்தும் சேலும்
பெருகும் வயற்காழிப் பிள்ளை - அருகந்தர்
முன்கலங்க நட்ட முடைகெழுமு மால்இன்னம்
புன்கலங்கல் வைகைப் புனல்.
26
கட்டளைக் கலித்துறை
1338
புனமா மயில்சாயல் கண்டுமுன் போகா கிளிபிரியா
இனமான் விழிஒக்கும் என்றுவிட் டேகா இருநிலத்துக்
கனமா மதிற்காழி ஞானசம் பந்தன் கடமலைவாய்த்
தினைமா திவள்காக்க எங்கே விளையும் செழுங்கதிரே.
27
அகவற்பா
1339
கதிர்மதி நுழையும் படர்சடை மகுடத்
தொருத்தியைக் கரந்த விருத்தனைப் பாடி
முத்தின் சிவிகை முன்னாட் பெற்ற
அத்தன் காழி நாட்டுறை அணங்கோ மொய்த்தெழு
தாமரை அல்லித் தவிசிடை வளர்ந்த ...(5)

காமரு செல்வக் கனங்குழை அவளோ மீமருத்
தருவளர் விசும்பில் தவநெறி கலக்கும்
உருவளர் கொங்கை உருப்பசி தானோ
வாருணக் கொம்போ மதனன் கொடியோ
ஆரணி யத்துள் அருந்தெய்வ மதுவோ ....(10)

வண்டமர் குழலும் கெண்டையங் கண்ணும்
வஞ்சி மருங்கும் கிஞ்சுக வாயும்
ஏந்திள முலையும் காந்தளங் கையும்
ஓவியர் தங்கள் ஒண்மதி காட்டும்
வட்டிகைப் பலகை வான்துகி லிகையால் ...(15)

இயக்குதற் கரியதோர் உருவுகண் டென்னை
மயக்கவந் துதித்ததோர் வடிவிது தானே.
28
வெண்பா
1340
வடிக்கண்ணி யாளைஇவ் வான்சுரத்தி னூடே
கடிக்கண்ணி யானோடும் கண்டோம் - வடிக்கண்ணி
மாம்பொழில்சேர் வைகை அமண்மலைந்தான் வண்காழிப்
பூம்பொழிலே சேர்ந்திருப்பார் புக்கு.
29
கட்டளைக் கலித்துறை
1341
குருந்தும் தரளமும் போல்வண்ண வெண்ணகைக் கொய்மலராள்
பொருந்தும் திரள்புயத் தண்ணல்சம் பந்தன்பொற் றாமரைக்கா
வருந்தும் திரள்கொங்கை மங்கையை வாட்டினை வானகத்தே
திருந்தும் திரள்முகில் முந்திவந் தேறுதிங் கட்கொழுந்தே.
30
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

நம்பியாண்டார் நம்பி அருளியது
பதினோராம் திருமுறை
7. ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை
கலி வெண்பா
1342
திருந்தியசீர்ச் செந்தா மரைத்தடத்துச் சென்றோர்
இருந்தண் இளமேதி பாயப் - பொருந்திய
புள்ளிரியப் பொங்கு கயல்வெருவப் பூங்குவளைக்
கள்ளிரியச் செங்கழுநீர் கால்சிதையத் - துள்ளிக்
குருகிரியக் கூன்இறவம் பாயக் களிறு
முருகுவிரி பொய்கையின்கண் மூழ்க - வெருவுற்ற
கோட்டகத்துப் பாய்வாளைக் கண்டலவன் கூசிப்போய்த்
தோட்டகத்த செந்நெல் துறையடையச் - சேட்டகத்த
காவி முகமலரக் கார்நீலம் கண்படுப்ப
வாவிக்கண் நெய்தல் அலமர - மேவிய (5)

அன்னம் துயில்இழப்ப அஞ்சிறைசேர் வண்டினங்கள்
துன்னும் துணைஇழப்பச் சூழ்கிடங்கில் - மன்னிய
வள்ளை நகைகாட்ட வண்குமுதம் வாய்காட்டத்
தெள்ளுபுனற் பங்கயங்கள் தேன்காட்ட - மெள்ள
நிலவு மலரணையின் நின்றிழிந்த சங்கம்
இலகுகதிர் நித்திலங்கள் ஈன - உலவிய
மல்லைப் பழனத்து வார்பிரசம் மீதழிய
ஒல்லை வரம்பிடறி ஓடிப்போய்ப் - புல்லிய
பாசடைய செந்நெல் படரொளியால் பல்கதிரோன்
தேசடைய ஓங்கு செறுவுகளும் - மாசில்நீர் (10)

நித்திலத்தின் சாயும் நிகழ்மரக தத்தோலும்
தொத்தொளி செம்பொன் தொழிற்பரிய - மொய்த்த
பவளத்தின் செவ்வியும் பாங்கணைய ஓங்கித்
திவளக் கொடிமருங்கில் சேர்த்தித் - துவளாமைப்
பட்டாடை கொண்டுடுத்துப் பைந்தோ டிலங்குகுழை
இட்டமைந்த கண்ணார் இளங்கமுகும் - விட்டொளிசேர்
கண்கள் அழல்சிதறிக் காய்சினத்த வாய்மதத்துத்
தண்டலையின் நீழல் தறியணைந்து - கொண்ட
கொலைபுரியா நீர்மையவாய்க் கொம்புவளைத் தேந்தி
மலையு மரவடிவங் கொண்டாங் - கிலைநெருங்கு (15)

சூதத் திரளும் தொகுகனிக ளால்நிவந்த
மேதகுசீர்த் தெங்கின் வியன்பொழிலும் - போதுற்
றினமொருங்கு செவ்வியவாய் இன்தேன் ததும்பு
கனிநெருங்கு திண்கதலிக் காடும் - நனிவிளங்கு
நாற்றத்தால் எண்டிசையும் வந்து நலஞ்சிறப்ப
ஊற்று மடுத்த உயர்பலவும் -மாற்றமரும்
மஞ்சள் எழில்வளமும் மாதுளையின் வார்பொழிலும்
இஞ்சி இளங்காவின் ஈட்டமும் - எஞ்சாத
கூந்தற் கமுகும் குளிர்பாட லத்தெழிலும்
வாய்ந்தசீர் சண்பகத்தின் வண்காடும் - ஏந்தெழிலார் (20)

மாதவியும் புன்னையும் மண்ணும் மலர்க்குரவும்
கேதகையும் எங்கும் கெழீஇஇப் - போதின்
இளந்தென்றல் வந்தசைப்ப எண்டிசையும் வாசம்
வளந்துன்று வார்பொழிலின் மாடே - கிளர்ந்தெங்கும்
ஆலை ஒலியும் அரிவார் குரல்ஒலியும்
சோலைக் கிளிமிழற்றும் சொல்லொலியும் - ஆலும்
அறுபதங்கள் ஆர்ப்பொலியும் ஆன்றபொலி வெய்தி
உறுதிரைநீர் வேலை ஒலிப்ப - வெறிகமழும்
நந்தா வனத்தியல்பும் நற்றவத்தோர் சார்விடமும்
அந்தமில் சீரார் அழகினால் - முந்திப் (25)

புகழ்வாருந் தன்மையதாய்ப் பூதலத்துள் ஓங்கி
நிகழ்கிடங்கும் சூழ்கிடப்ப நேரே - திகழ
முளைநிரைத்து மூரிச் சிறைவகுத்து மொய்த்த
புளகத்தின் பாம்புரிசூழ் போகி - வளர
இரும்பதணஞ் சேர இருத்திஎழில் நாஞ்சில்
மருங்கனைய அட்டாலை யிட்டுப் - பொருந்தியசீர்த்
தோமரமும் தொல்லைப் பொறிவீசி யந்திரமும்
காமரமும் ஏப்புழையும் கைகலந்து - மீமருவும்
வெங்கதிரோன் தேர்விலங்க மிக்குயர்ந்த மேருப்போன்
றங்கனகத் திஞ்சி அணிபெற்றுப் - பொங்கொளிசேர் (30)

மாளிகையும் மன்னியசீர் மண்டபமும் ஒண்தலத்த
சூளிகையும் துற்றெழுந்த தெற்றிகளும் - வாளொளிய
நாடக சாலையும் நன்பொற் கபோதஞ்சேர்
பீடமைத்த மாடத்தின் பெற்றியும் - கேடில்
உருவு பெறவகுத்த அம்பலமும் ஓங்கு
தெருவும் வகுத்தசெய் குன்றும் - மருவினிய
சித்திரக் காவும் செழும்பொழிலும் வாவிகளும்
நித்திலஞ்சேர் நீடு நிலைக்களமும் - எத்திசையும்
துன்னி எழில்சிறப்பச் சோதி மலர்மடந்தை
மன்னி மகிழ்ந்துறையும் வாய்மைத்தாய்ப் - பொன்னும் (35)

மரகதமும் நித்திலமும் மாமணியும் பேணி
இரவலர்கட் கெப்போதும் ஈந்தும் - கரவாது
கற்பகமும் காருமெனக் கற்றவர்க்கும் நற்றவர்க்கும்
தப்பாக் கொடைவளர்க்குஞ் சாயாத - செப்பத்தால்
பொய்ம்மை கடிந்து புகழ்பரிந்து பூதலத்து
மெய்ம்மை தலைசிறந்து மேதக்கும் - உண்மை
மறைபயில்வார் மன்னு வியாகரணக் கேள்வித்
துறைபயில்வார் தொன்னூல் பயில்வார் - முறைமையால்
ஆகமங்கள் கேட்பார் அருங்கலைநூல் ஆதரித்துப்
போகம் ஒடுங்காப் பொருள்துய்ப்பார் - சோகமின்றி (40)

நீதி நிலைஉணர்வார் நீள்நிலத்துள் ஐம்புலனும்
காதல் விடுதவங்கள் காமுறுவார் - ஆதி
அருங்கலைநூல் ஓதுவார் ஆதரித்து வென்றிக்
கருங்கலிநீங் கக்கனல்வ குப்பார் - ஒருங்கிருந்து
காமநூல் கேட்பார் கலைஞானம் காதலிப்பார்
ஓமநூல் ஓதுவார் உத்தரிப்பார் - பூமன்னும்
நான்முகனே அன்னசீர் நானூற் றுவர்மறையோர்
தாம்மன்னி வாழும் தகைமைத்தாய் - நாமன்னும்
ஆரணங்கும் மற்றை அருந்ததியும் போல்மடவார்
ஏரணங்கு மாடத் தினிதிருந்து - சீரணங்கு (45)

வீணை பயிற்றுவார் யாழ்பயில்வார் மேவியசீர்ப்
பாணம் பயில்வார் பயன்உறுவார் - பேணியசீர்ப்
பூவைக்குப் பாட்டுரைப்பார் பொற்கிளிக்குச் சொற்பயில்வார்
பாவைக்குப் பொன்புனைந்து பண்புறுவார் - ஆய்எங்கும்
மங்கையர்கள் கூட்டமும் மன்னு சிறார்குழுவும்
பொங்குலகம் எல்லாம் பொலிவடையத் - தங்கிய
வேத ஒலியும் விழாவொலியும் மெல்லியலார்
கீத ஒலியும் கிளர்ந்தோங்கும் - மாதரார்
பாவை ஒலியும் பறைஒலியும் பல்சனங்கள்
மேவும் ஒலியும் வியன்நகரம் - காவலர்கள் (50)

பம்பைத் துடிஒலியும் பெளவப் படைஒலியும்
கம்பக் களிற்றொலியும் கைகலந்து - நம்பிய
கார்முழக்கும் மற்றைக் கடல்முழக்கும் போற்கலந்த
சீர்முழக்கம் எங்கும் செவிடுபடப் - பார்விளங்கு
செல்வம் நிறைந்தஊர் சீரில் திகழ்ந்தஊர்
மல்கு மலர்மடந்தை மன்னும்ஊர் - சொல்லினிய
ஞாலத்து மிக்கஊர் நானூற் றுவர்கள்ஊர்
வேலொத்த கண்ணார் விளங்கும்ஊர் - ஆலித்து
மன்னிருகால் வேலை வளர்வெள்ளத் தும்பரொடும்
பன்னிருகால் நீரில் மிதந்தவூர் - மன்னும் (55)

பிரமனூர் வேணுபுரம் பேரொலிநீர் சண்பை
அரன்மன்னு தண்காழி அம்பொற் - சிரபுரம்
பூந்தராய்க் கொச்சைவயம் வெங்குருப் பொங்குபுனல்
வாய்ந்தநல் தோணி புரம்மறையோர் - ஏய்ந்த
புகலி கழுமலம் பூம்புறவம் என்றிப்
பகர்கின்ற பண்புற்ற தாகித் - திகழ்கின்ற
மல்லைச் செழுநகரம் மன்னவும் வல்லமணர்
ஒல்லைக் கழுவில் உலக்கவும் - எல்லையிலா
மாதவத்தோர் வாழவும் வையகத்தோர் உய்யவும்
மேதக்க வானோர் வியப்பவும் - ஆதியாம் (60)

வென்றிக் கலிகெடவும் வேதத் தொலிமிகவும்
ஒன்றிச் சிவனடியார் ஓங்கவும் - துன்றிய
பன்னு தமிழ்ப்பதினா றாயிர நற்பனுவல்
மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் - முன்னிய
சிந்தனையாற் சீரார் கவுணியர்க்கோர் சேயென்ன
வந்தங் கவதரித்த வள்ளலை - அந்தமில்சீர்
ஞானச் சுடர்விளக்கை நற்றவத்தோர் கற்பகத்தை
மான மறையவற்றின் வான்பொருளை - ஆனசீர்த்
தத்துவனை நித்தனைச் சைவத் தவர்அரசை
வித்தகத்தால் ஓங்கு விடலையை - முத்தமிழின் (65)

செஞ்சொற் பொருள்பயந்த சிங்கத்தைத் தெவ்வர்உயிர்
அஞ்சத் திகழ்ந்த அடல்உருமை - எஞ்சாமை
ஆதிச் சிவனருளால் அம்பொன்செய் வட்டிலில்
கோதில் அமிர்தநுகர் குஞ்சரத்தைத் - தீதறுசீர்க்
காலத் தொகுதியும் நான்மறையின் காரணமும்
மூலப் பொருளும் முழுதுணர்ந்த - சீலத்
திருஞான சம்பந்தன் என்றுலகம் சேர்ந்த
ஒருநாமத் தால் உயர்ந்த கோவை - வருபெருநீர்ப்
பொன்னிவள நாடனைப் பூம்புகலி நாயகனை
மன்னர் தொழுதிறைஞ்சும் மாமணியை - முன்னே (70)

நிலவு முருகர்க்கும் நீலநக் கற்கும்
தொலைவில் புகழ்ச்சிறுத்தொண் டற்கும் - குலவிய
தோழமையாய்த் தொல்லைப் பிறப்பறுத்த சுந்தரனை
மாழையொண்கண் மாதர் மதனனைச் - சூழொளிய
கோதைவேல் தென்னன்தன் கூடல் குலநகரில்
வாதில் அமணர் வலிதொலையக் - காதலால்
புண்கெழுவு செம்புனலா றோடப் பொருதவரை
வண்கழுவில் தைத்த மறையோனை - ஒண்கெழுவு
ஞாலத் தினர்அறிய மன்னுநனி பள்ளியது
பாலை தனைநெய்தல் ஆக்கியும் - காலத்து (75)

நீரெதிர்ந்து சென்று நெருப்பிற் குளிர்படைத்தும்
பாரெதிர்ந்த பல்விடங்கள் தீர்த்துமுன் - நேரெழுந்த
யாழை முரித்தும் இருங்கதவம் தான்அடைத்தும்
சூழ்புனலில் ஓடத் தொழில்புரிந்தும் - தாழ்பொழில்சூழ்
கொங்கிற் பனிநோய் பரிசனத்தைத் தீர்ப்பித்தும்
துங்கப் புரிசை தொகுமிழலை - அங்கதனில்
நித்தன் செழுங்காசு கொண்டுநிகழ் நெல்வாயில்
முத்தின் சிவிகை முதற்கொண்டும் - அத்தகுசீர்
மாயிரு ஞாலத்து மன்னா வடுதுறைபுக்
காயிரஞ் செம்பொன் அதுகொண்டும் - மாய்வரிய (80)

மாண்புதிகழ் எம்பெருமான் மன்னுதிரு வோத்தூரில்
ஆண்பனைகள் பெண்பனைகள் ஆக்கியும் - பாண்பரிசில்
கைப்பாணி ஒத்திக்கா ழிக்கோலக் காவிற்பொற்
சப்பாணி கொண்டு தராதலத்துள் - எப்பொழுதும்
நீக்கரிய இன்பத் திராகம்இருக் குக்குறள்
நோக்கரிய பாசுரம்பல் பத்தோடும் - ஆக்கரிய
யாழ்முரி சக்கரமாற் றீரடி முக்காலும்
பாழிமையால் பாரகத்தோர் தாம்உய்ய - ஊழி
உரைப்பமரும் பல்புகழால் ஓங்கஉமை கோனைத்
திருப்பதிகம் பாடவல்ல சேயை – விருப்போடு(85)

நண்ணு புகழ்மறையோர் நாற்பத்தெண் ணாயிரவர்
எண்ணில் முனிவரர் ஈட்டத்துப் - பண்ணமரும்
ஓலக்கத் துள்ளிருப்ப ஒண்கோயில் வாயிலின்கண்
கோலக் கடைகுறுகிக் கும்பிட்டாங் - காலும்
புகலி வளநகருள் பூசுரர் புக்காங்
கிகலில் புகழ்பரவி யேத்திப் - புகலிசேர்
வீதி எழுந்தருள வேண்டுமென விண்ணப்பம்
ஆதரத்தாற் செய்ய அவர்க்கருளி - நீதியால்
கேதகையும் சண்பகமும் நேர்கிடத்திக் கீழ்த்தாழ்ந்த
மாதவியின் போதை மருங்கணைத்துக் - கோதில் (90)

இருவேலி தன்னை இடையிருத்தி ஈண்டு
மருவோடு மல்லிகையை வைத்தாங் - கருகே
கருமுகையைக் கைகலக்க வைத்துக் கழுநீர்ப்
பெருகு பிளவிடையே பெய்து - முருகியலும்
புன்னாகந் தன்னைப் புணர இருவாச்சி
தன்அயலே முல்லை தலையெடுப்ப - மன்னிய
வண்செருந்தி வாய்நெகிழ்ப்ப மெளவல் அலர்படைப்பத்
தண்குருந்தம் மாடே தலையிறக்க - ஒண்கமலத்
தாதடுத்த கண்ணியால் தண்ணறுங் குஞ்சிமேற்
போதடுத்த கோலம் புனைவித்துக் - காதிற் (95)

கனவயிர குண்டலங்கள் சேர்த்திக் கழுத்தின்
இனமணியின் ஆரம் இலகப் - புனைகனகத்
தொத்தடுத்த பூஞ்சுரிகைச் சோதிசேர் தாளிம்பம்
வைத்து மணிக்கண் டிகைபூண்டு - முத்தடுத்த
கேயூரம் தோள்மேற் கிடத்திக் கிளர்பொன்னின்
வாய்மை பெறுநூல் வலந்திகழ - வேயும்
தமனியத்தின் தாழ்வடமும் தண்டரளக் கோப்பும்
சிமைய வரைமார்பிற் சேர்த்தி - அமைவுற்ற
வெண்ணீற்றின் ஒண்களபம் மட்டித்து மேவுதொழில்
ஒண்ணூற் கலிங்கம் உடல்புனைந்து - திண்ணோக்கிற் (100)

காற்றுருமோ குன்றோ கடலோ அடல்உருமோ
கூற்றுருவோ என்னக் கொதித்தெழுந்து - சீற்றத்
தழல்விழித்து நின்றெதிர்ந்து தாலவட்டம் வீசிப்
புழைத்தடக்கை கொண்டெறிந்து பொங்கி - மழை மதத்தாற்
பூத்த கடதடத்துக் போகம் மிகப்பொலிந்த
காத்திரத்த தாகிக் கலித்தெங்கும் - கோத்த
கொடுநிகளம் போக்கிநிமிர் கொண்டெழுந்து கோபித்
திடுவண்டை யிட்டுக் கலித்து - முடுகி
நெடுநிலத்தைத் தான்உழக்கி நின்று நிகர்நீத்
திடிபெயரத் தாளந் திலுப்பி - அடுசினத்தால் (105)

கன்ற முகம்பருகிக் கையெடுத் தாராய்ந்து
வென்றி மருப்புருவ வெய்துயிர்த் - தொன்றிய
கூடம் அரணழித்துக் கோபுரங்க ளைக்குத்தி
நீடு பொழிலை நிகரழித் - தோடிப்
பணப்பா கரைப்பரிந்து குத்திப் பறித்த
நிணப்பாகை நீள்விசும்பின் வீசி - அணைப்பரிய
ஓடைக் கருங்களிற்றை ஒண்பரிக்கா ரர்கள்தாம்
மாடணையக் கொண்டு வருதலுமே - கூடி
நயந்து குரற்கொடுத்து நட்பளித்துச் சென்று
வியந்தணுகி வேட்டம் தணிந்தாங் - குயர்ந்த (110)

உடற்றூய வாசிதனைப் பற்றிமேல் கொண்டாங்
கடற்கூடற் சந்தி யணுகி - அடுத்த
பயில்பலவும் பேசிப் படுபுரசை நீக்கி
அயர்வு கெடஅணைத்துத் தட்டி - உயர்வுதரு
தண்டுபே ரோசையின்கண் தாள்கோத்துச் சீர்ச்சிறுத்
தொண்டர் பிறகணையத் தோன்றுதலும் - எண்டிசையும்
பல்சனமும் மாவும் படையும் புடைகிளர
ஒல்லொலியால் ஓங்கு கடல்கிளர - மல்லல்
பரித்தூரங் கொட்டப் படுபணிலம் ஆர்ப்பக்
கருத்தோ டிசைகவிஞர் பாட - விரித்த (115)

குடைபலவும் சாமரையும் தொங்கல்களும் கூடிப்
புடைபரந்து பொக்கம் படைப்பக் - கடைபடு
வீதி அணுகுதலும் வெள்வளையார் உள்மகிழ்ந்து
காதல் பெருகிக் கலந்தெங்கும் - சோதிசேர்
ஆடரங்கின் மேலும் அணிமா ளிகைகளிலும்
சேடரங்கும் நீள்மறுகும் தெற்றியிலும் - பீடுடைய
பேரிளம் பெண் ஈறாகப் பேதை முதலாக
வாரிளங் கொங்கை மடநல்லார் - சீர்விளங்கப்
பேணும் சிலம்பும் பிறங்கொளிசேர் ஆரமும்
பூணும் புலம்பப் புறப்பட்டுச் - சேண்மறுகில் (120)

காண்டகைய வென்றிக் கருவரைமேல் வெண்மதிபோல்
ஈண்டு குடையின் எழில் நிழற்கீழ்க் - காண்டலுமே
கைதொழுவார் நின்று கலைசரிவார் மால்கொண்டு
மெய்தளர்வார் வெள்வளைகள் போய்வீழ்வார் - வெய்துயிர்த்துப்
பூம்பயலை கொள்வார் புணர்முலைகள் பொன்பயப்பார்
காம்பனைய மென்தோள் கவின்கழிவார் - தாம்பயந்து
வென்றிவேற் சேயென்ன வேனில்வேட் கோவென்ன
அன்றென்ன ஆமென்ன ஐயுற்றுச் - சென்றணுகிக்
காழிக் குலமதலை என்றுதங் கைசோர்ந்து
வாழி வளைசரிய நின்றயர்வார் - பாழிமையால் (125)

உள்ளம் நிலைதளர்ந்த ஒண்ணுதலார் வெல்களிற்றை
மெள்ள நடவென்று வேண்டுவார் - கள்ளலங்கல்
தாராமை அன்றியும் தையல்நல் லார் முகத்தைப்
பாராமை சாலப் பயன் என்பார் - நேராக
என்னையே நோக்கினான் ஏந்திழையீர் இப்பொழுது
நன்மை நமக்குண் டெனநயப்பார் - கைம்மையால்
ஒண்கலையும் நாணும் உடைதுகிலும் தோற்றவர்கள்
வண்கமலத் தார்வலிந்து கோடுமெனப் - பண்பின்
வடிக்கண் மலர்வாளி வார்புருவ வில்மேல்
தொடுத்ததரந் தொண்டை துடிப்பப் - பொடித்தமுலைக் (130)

காசைக் கருங்குழலார் காதற் கவுணியன்பால்
பூசற் கமைந்து புறப்படுவார் - வாசச்
செழுமலர்த்தார் இன்றெனக்கு நல்காதே சீரார்
கழுமலர்த்தார் கோவே கழல்கள் - தொழுவார்கள்
அங்கோல் வளையிழக்கப் போவது நின்னுடைய
செங்கோன்மை யோவென்று செப்புவார் - நங்கைமீர்
இன்றிவன் நல்குமேல் எண்பெருங் குன்றத்தில்
அன்றமணர் கூட்டத்தை ஆசழித்துப் - பொன்ற
உரைகெழுவு செந்தமிழ்ப்பா ஒன்றினால் வென்றி
நிரைகழுமேல் உய்த்தானை நேர்ந்து - விரைமலர்த்தார் (135)

பெற்றிடலாம் என்றிருந்த நம்மிலும் பேதையர்கள்
மற்றுளரோ என்று வகுத்துரைப்பார் - மற்றிவனே
பெண்ணிரக்கம் அன்றே பிறைநுதலீர் மாசுணத்தின்
நண்ணு கடுவிடத்தால் நாட்சென்று - விண்ணுற்ற
ஆருயிரை மீட்டன் றவளை அணிமருகல்
ஊரறிய வைத்த தெனஉரைப்பார் - பேரிடரால்
ஏசுவார் தாம்உற்ற ஏசறவைத் தோழியர்முன்
பேசுவார் நின்றுதம் பீடழிவார் - ஆசையால்
நைவார் நலன்அழிவார் நாணோடு பூண்இழப்பார்
மெய்வாடு வார்வெகுள்வார் வெய்துயிர்ப்பார் - தையலார் (140)

பூந்துகிலைப் பூமாலை என்றணிவார் பூவினைமுன்
சாந்தம் எனமெய்யில் தைவருவார் - வாய்ந்த
கிளியென்று பாவைக்குச் சொற்பயில்வார் பந்தை
ஒளிமே கலையென் றுடுப்பார் - அளிமேவு
பூங்குழலார் மையலாய்க் கைதொழுமுன் போதந்தான்
ஓங்கொலிசேர் வீதி யுலா.
1
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

நம்பியாண்டார் நம்பி அருளியது
பதினோராம் திருமுறை
8. ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
ஒருபோகு கொச்சகக் கலிப்பா
நான்கடித் தாழிசை
1343
அலையார்ந்த கடலுலகத் தருந்திசைதோ றங்கங்கே
நிலையார்ந்த பலபதிகம் நெறிமனிதர்க் கினிதியற்றி
ஈங்கருளி யெம்போல்வார்க் கிடர்கெடுத்தல் காரணமாய்
ஓங்குபுகழ்ச் சண்பையெனும் ஒண்பதியுள் உதித்தனையே.
செஞ்சடைவெண் மதியணிந்த சிவன்எந்தை திருவருளால்
வஞ்சியன நுண்ணிடையாள் மலையரையன் மடப்பாவை
நற்கண்ணி அளவிறந்த ஞானத்தை அமிர்தாக்கிப்
பொற்கிண்ணத் தருள்புரிந்த போனகமுன் நுகர்ந்தனையே.
தோடணிகா தினன்என்றும் தொல்லமரர்க் கெஞ்ஞான்றும்
தேடரிய பராபரனைச் செழுமறையின் அகன்பொருளை
அந்திச்செம் மேனியனை அடையாளம் பலசொல்லி
உந்தைக்குக் காணஅரன் உவனாமென் றுரைத்தனயே.
அராகம்
வளமலி தமிழிசை வடகலை மறைவல
முளரிநன் மலரணி தருதிரு முடியினை.
கடல்படு விடமடை கறைமணி மிடறுடை
அடல்கரி உரியனை அறிவுடை அளவினை.
இரண்டடித் தாழிசை
கரும்பினு மிக் கினியபுகழ்க் கண்ணுதல்விண்ணவன்அடிமேல்
பரம்பவிரும் புவியவர்க்குப் பத்திமையை விளைத்தனையே.
பன்மறையோர் செய்தொழிலும் பரமசிவா கமவிதியும்
நன்மறையின் விதிமுழுதும் ஒழிவின்றி நவின்றனையே.
நாற்சீர் ஓரடி அம்போதரங்கம்
அணிதவத் தவர்களுக் கதிகவித் தகனும்நீ
தணிமனத் தருளுடைத் தவநெறிக் கமிர்தம்நீ
அமணரைக் கழுநுதிக் கணைவுறுத் தவனும்நீ
தமிழ்நலத் தொகையினில் தகுசுவைப் பவனும்நீ
முச்சீர் ஓரடி அம்போதரங்கம்
மறையவர்க் கொருவன் நீ
மருவலர்க் குருமு நீ
நிறைகுணத் தொருவன் நீ
நிகரில்உத் தமனும் நீ
இருசீர் ஓரடி அம்போதரங்கம்
அரியை நீ. எளியை நீ.
அறவன் நீ. துறவன் நீ.
பெரியை நீ. உரியை நீ.
பிள்ளை நீ. வள்ளல் நீ.
தனிச்சொல்
எனவாங்கு
சுரிதகம்
அருந்தமிழ் விரகநிற் பரசுதும் திருந்திய
நிரைச்செழு மாளிகை நிலைதொறும் நிலைதொறும்
உரைச்சதுர் மறையின் ஓங்கிய ஒலிசேர்
சீர்கெழு துழனித் திருமுகம் பொலிவுடைத்
தார்கெழு தண்டலை தண்பணை தழீஇக் (5)

கற்றொகு புரிசைக் காழியர் நாத
நற்றொகு கீர்த்தி ஞானசம் பந்த
நின்பெருங் கருணையை நீதியின்
அன்புடை அடியவர்க் கருளுவோய் எனவே.
1
வெண்பா
1344
எனவே இடர்அகலும் இன்பமே எய்தும்
நனவே அரன்அருளை நாடும் - புனல்மேய
செங்கமலத் தண்தார்த் திருஞான சம்பந்தன்
கொங்கமலத் தண்காழிக் கோ.
2
கட்டளைக் கலித்துறை
1345
கோலப் புலமணிச் சுந்தர மாளிகைக் குந்தளவார்
ஏலப் பொழிலணி சண்பையர் கோனை இருங்கடல்சூழ்
ஞாலத் தணிபுகழ் ஞானசம் பந்தனை நற்றமிழே
போலப் பலபுன் கவிகொண்டு சேவடி போற்றுவனே.
3
எண்சீர்க் கழிநெடில் சந்த விருத்தம்
1346
போற்று வார்இடர் பாற்றிய புனிதன்
    பொழில்சு லாவிய புகலியர் பெருமான்
ஏற்ற வார்புகழ் ஞானசம் பந்தன்
    எம்பி ரான்இருஞ் சுருதியங் கிரிவாய்ச்
சேற்று வார்புனங் காவல் புரிந்தென்
    சிந்தை கொள்வதும் செய்தொழி லானால்
மாற்றம் நீர்எமக் கின்றுரை செய்தால்
    வாசி யோகுற மாதுந லீரே.
4
எழுசீர்க் கழிநெடில் சந்த விருத்தம்
1347
நலமலி தரும்புவனி நிறைசெய்புகழ் இன்பம்நனி
    பனிமதி அணைந்த பொழில்சூழ்
பொலமதில் இரும்புகலி அதிபதி விதம்பெருகு
    புனிதகுணன் எந்தம் இறைவன்
பலமலி தருந்தமிழின் வடகலை விடங்கன்மிகு
    பரசமய வென்றி அரிதன்
சலமலி தருங்கமல சரண்நினைவன் என்றனது
    தகுவினைகள் பொன்றும் வகையே.
5
பன்னிரு சீர்க் கழிநெடில் சந்த விருத்தம்
1348
வகைதகு முத்தமி ழாகரன் மறைபயில் திப்பிய வாசகன்
    வலகலை வித்தகன் வானவில் மதியணை பொற்குவை மாளிகை
திகைதிகை மட்டலர் வார்பொழில் திகழ்புக லிக்கர சாகிய
    திருவளர் விப்ரசி காமணி செழுமல யத்தமிழ்க் கேசரி
மிகமத வெற்றிகொள் வாரண மிடைவரு டைக்குலம் யாளிகள்
    விரவிரு ளிற்றனி நீணெறி வினைதுயர் மொய்த்துள வேமணி
நகையெழி லிற்குற மாதுன தருமை நினைக்கிலள் நீயிவள்
    நசையின் முழுப்பழி யாதல்முன் நணுகலி னிக்கிரி வாணனே.
6
1349
வாணில வும்புன லும்பயில் செஞ்சடை வண்கரு ணாகரனை
    மலைமா துமையொடு மிவனா வானென முன்னாளுரை செய்தோன்
சேணில வும்புகழ் மாளிகை நீடிய தென்புக லிக்கரசைத்
    திருவா ளனையெழி லருகா சனிதனை மருவா தவர்கிளைபோல்
நாணில வும்பழி யோகரு தாதய லானொரு காளையுடன்
    நசைதீர் நிலைகொலை புரிவே டுவர்பயில் தருகா னதர்வெயிலிற்
கேணில வுங்கிளி பாவையொ டாயமும் யாயெனை யும்மொழியக்
    கிறியா லெனதொரு மகள்போ யுறுதுயர் கெடுவேன் அறிகிலனே.
7
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1350
அறிவாகி இன்பஞ்செய் தமிழ்வாதில் வென்றந்த
    அமணான வன்குண்டர் கழுவேற முன்கண்ட
செறிமாட வண்சண்பை நகராளி யென்தந்தை
    திருஞான சம்பந்தன் அணிநீடு திண்குன்றில்
நெறியால மண்டுன்றி முனைநாள்சி னங்கொண்டு
    நிறைவார் புனந்தின்று மகள்மேல் வருந்துங்க
வெறியார் மதந்தங்கு கதவா ரணங்கொன்ற
    வெகுளாத நஞ்சிந்தை விறலான் உளன்பண்டே.
8
பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1351
பண்டமுது செய்ததுமை நங்கையருள் மேவுசிவ ஞானம்
    பைந்தரள நன்சிவிகை செம்பொனணி நீடுகிற தாளம்
கொண்டதரன் உம்பர்பரன் எங்கள்பெரு மானருள் படைத்துக்
    கொடுத்ததமி ழைத்தவகு லத்தவர்க ளுக்குலகில் இன்பம்
கண்டதரு கந்தர்குலம் ஒன்றிமுழு துங்கழுவில் ஏறக்
    கறுத்தது வினைப்பயன் மனத்திலிறை காதலது வன்றி
விண்டதுவும் வஞ்சகரை மஞ்சணவு கின்றமணி மாட
    வேணுபுர நாதன்மிகு வேதியர்ச் சிகாமணி பிரானே.
9
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1352
பிரானை மெய்த்திரு ஞானசம்
    பந்தனை மறையவர் பெருமானைக்
குராம லர்ப்பொழிற் கொச்சையர்
    நாதனைக் குரைகழ லிணைவாழ்த்தித்
தராத லத்தினில் அவனருள்
    நினைவொடு தளர்வுறு தமியேனுக்
கிராவி னைக்கொடு வந்ததிவ்
    வந்திமற் றினிவிடி வறியேனே.
10
பதினான்கு சீர்க் கழிநெடில் சந்த விருத்தம்
1353
ஏனமு கத்தவ புத்தரை இந்திர சித்து மணம்புணர் வுற்றான்
    ஈழவ னார்சொரி தொட்டி யினங்களை வெட்டி யிசித்தனர் பட்டர்
தானம் இரக்கிற சீதை மடுப்பது சாதி குடத்தொடு கண்டீர்
    சக்கர வர்த்திகள் சிக்கர மட்டுவர் தத்துவ மிப்பரி சுண்டே
ஆன புகழ்ப்பயில் விப்ர சிகாமணி அத்தகு மைப்புரை யுங்கார்
    ஆர்பொழில் நீடிய சண்பையர் காவலன் வண்களி யேன்எளி யேனோ
சோனக னுக்குமெ னக்கு மெனத்தரை அம்மனை சூலது கொண்டாள்
    தும்புரு வாலியை வென்று நிலத்திடை நின்று துலுக்குகி றாரே.
11
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1354
ஆர்மலி புகலி நாதன்
    அருளென இரவில் வந்தென்
வார்முலை பயலை தீர
    மணந்தவர் தணந்து போன
தேரதர் அழியல் உம்மைச்
    செய்பிழை எம்ம தில்லை
கார்திரை புரள மோதிக்
    கரைபொருங் கடலி னீரே.
12
சந்த கலி விருத்தம்
1355
கடல்மேவு புவியேறு கவிநீரர் பெருமான்றன்
தடமாடு மிகுகாழி தகுபேதை அருளாமல்
திடமாகில் அணிநீறு செழுமேனி முழுதாடி
மடலேறி எழில்வீதி வருகாதல் ஒழியேனே.
13
எண்சீர்க் கழிநெடில் சந்த விருத்தம்
1356
ஒழியா தின்புறு பொழில்சூழ் சண்பைமன்
    உயர்பார் துன்றிய தகுஞா னன்புகழ்
எழிலா ருங்கவு ணியர்தீபன்திகழ்
    இணையார் செங்கரன் நிகழ்வான் விண்குயின்
பொழியா நின்றன துளிதார் கொன்றைகள்
    புலமே துன்றின கலைமான் ஒன்றின
பழிமேல் கொண்டது நுமர்தேர் அன்பொடும்
    அருகே வந்தது அதுகாண் மங்கையே.
14
அறுசீர்க் கழிநெடில் சந்த விருத்தம்
1357
மங்கை யிடத்தர னைக்கவி
    நீரெதிர் ஓட மதித்தருள்செய்
தங்கு புகழ்ச்சதுர் மாமறை
    நாவளர் சைவசி காமணிதன்
துங்க மதிற்பிர மாபுரம்
    மேவிய சூழ்பொழில் நின்றொளிர்மென்
கொங்கை யுடைக்கொடி ஏரிடை
    யாள்குடி கொண்டனள் எம்மனமே.
15
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1358
மனங்கொண்டு நிறைகொண்டு கலையுங் கொண்டு
    மணிநிறமும் இவள்செங்கை வளையுங் கொண்ட
தனங்கொண்ட பெருஞ்செல்வம் திகழும் கீர்த்திச்
    சண்பையர்கோன் திருஞான சம்பந் தற்கு
நனங்கொண்டு மெய்கொண்டு பயலை கொண்டே
    நன்னுதலாள் அயர்கின்றாள் நடுவே நின்றும்
இனங்கொண்டு நகைகொண்டு மடவீர் வாளா
    என்செயநீர் அலர்தூற்றி எழுகின் றீரே.
16
சம்பிரதம்
1359
எழுகுல வெற்பிவை மிடறில் அடக்குவன்
    எறிகட லிற்புனல் குளறிவ யிற்றினில்
முழுதும் ஒளித்திர வியையி நிலத்திடை
    முடுகுவன் இப்பொழு திவையல விச்சைகள்
கழுமல நற்பதி அதிப தமிழ்க்கடல்
    கவுணிய நற்குல திலகன் இணைக்கழல்
தொழுது வழுத்திய பிறரொரு வர்க்குறு
    துயர்வரு விப்பனி தரியதோர் விச்சையே.
17
எழுசீர்க் கழிநெடில் சந்த விருத்தம்
1360
சயமி குத்தரு கரைமு ருக்கிய
    தமிழ்ப யிற்றிய நாவன்
வியலி யற்றிரு மருக லிற்கொடு
    விடம ழித்தருள் போதன்
கயலு டைப்புனல் வயல்வ ளத்தகு
    கழும லப்பதி நாதன்
இயலு டைக்கழல் தொழநி னைப்பவ
    ரிருவி னைத்துயர் போமே.
18
எண்சீர்க் கழிநெடில் சந்த விருத்தம்
1361
மேதகுந் திகழ்பூக நாகசண் பகசூத
    வேரிவண் டறைசோலை ஆலைதுன் றியகாழி
நாதன்அந் தணர்கோனென் ஆனைவண் புகழாளி
    ஞானசுந் தரன்மேவு தார்நினைந் தயர்வேனை
நீதியன்றன பேசும் யாயுமிந் துவும்வாசம்
    நீடுதென் றலும்வீணை ஓசையும் கரைசேர
மோதுதெண் திரைசேவல் சேரும்அன் றிலும்வேயும்
    மூடுதண் பனிவாடை கூடிவன் பகையாமே.
19
1362
வன்பகை யாமக் குண்டரை வென்றோய்
    மாமலர் வாளிப் பொருமத வேளைத்
தன்பகை யாகச் சிந்தையுள் நையும்
    தையலை உய்யக் கொண்டருள் செய்யாய்
நின்புகழ் பாடிக் கண்பனி சோரா
    நின்றெழில் ஞானா என்றகம் நெக்கிட்
டன்பக லாமெய்ச் சிந்தையர் இன்பா
    அம்பொழில் மாடச் சண்பையர் கோவே.
20
மறம் - எண்சீர்க் கழிநெடில் சந்த விருத்தம்
1363
கோவின்திரு முகமீதொடு வருதூதுவன் ஈர
    குளிர்பைம்பொழில் வளநாடெழில் நிதியம்பரி சம்மீ
மாவீரியர் இவர்தங்கையென் மகுடன்திறம் அமண
    மறவெங்குல மறிகின்றிலன் பழியச்சத வரசன்
பாவேறிய மதுரத்தமிழ் விரகன்புக லியர்மன்
    பயில்வண்புக ழருகாசனி பணியன்றெனின் நமர்காள்
தூவேரியை மடுமின்துடி யடிமின்படை யெழுமின்
    தொகுசேனையும் அவனும்பட மலையும்பரி சினியே.
21
எழுசீர்க் கழிநெடில் சந்த விருத்தம்
1364
இனியின் றொழிமினிவ் வெறியும் மறிபடு
    தொழிலும் மிடுகுர வையுமெல்லாம்
நனிசிந் தையி னிவள் மிகவன் புறுவதொர்
    நசையுண் டதுநரை முதுபெண்டீர்
புனிதன் புகலியர் அதிபன் புனைதமிழ்
    விரகன் புயமுறும் அரவிந்தம்
பனிமென் குழலியை அணிமின் துயரொடு
    மயலுங் கெடுவது சரதம்மே.
22
எண்சீர்க் கழிநெடில் சந்த விருத்தம்
1365
சரத மணமலி பரிசம் வருவன
    தளர்வில் புகலியர் அதிபன் நதிதரு
வரதன் அணிதிகழ் விரகன் மிகுபுகழ்
    மருவு சுருதிநன் மலையின் அமர்தரு
விரத முடையைநின் இடையின் அவள்மனம்
    விரைசெய் குழலியை அணைவ தரிதென
இரதம் அழிதர வருதல் முனம்இனி
    எளிய தொருவகை கருது மலையனே.
23
1366
அயன்நெடிய மாலும்அவ ரறிவரிய தாணுவரன்
    அருளினொடு நீடவனி இடர்முழுது போயகல
வயலணிதென் வீழிமிழ லையின்நிலவு காசின்மலி
    மழைபொழியு மானகுண மதுரன்மதி தோய்கனக
செயநிலவு மாடமதில் புடைதழுவு வாசமலி
    செறிபொழில்சு லாவிவளர் சிரபுரசு ரேசன்முதிர்
பயன்நிலவு ஞானதமிழ் விரகன்மறை ஞானமுணர்
    பரமகுரு நாதன்மிகு பரசமய கோளரியே.
24
1367
அரியாருங் கிரிநெறிஎங் ஙனம்நீர் வந்தீர்
    அழகிதினிப் பயமில்லை அந்திக் கப்பால்
தெரியாபுன் சிறுநெறிகள் எந்தம் வாழ்விச்
    சிறுகுடியின் றிரவிங்கே சிரமந் தீர்ந்திச்
சுரியார்மென் குழலியொடும் விடியச் சென்று
    தொகுபுகழ்சேர் திருஞான சம்பந் தன்றன்
வரியாரும் பொழிலுமெழில் மதிலும் தோற்றும்
    வயற்புகலிப் பதியினிது மருவ லாமே.
25
ஈற்றடி மிக்கு வந்த நான்கடிக் கலித்தாழிசை
1368
ஆமாண்பொன் கூட்டகத்த அஞ்சொலிளம் பைங்கிளியே
பாமாலை யாழ்முரியப் பாணழியப் பண்டருள்செய்
மாமான சுந்தரன்வண் சம்பந்த மாமுனியெம்
கோமான்தன் புகழொருகால் இன்புறநீ கூறாயே
    கொச்சையர்கோன் தன்புகழ்யான் இன்புறநீ கூறாயே.
26
எழுசீர்க் கழிநெடில் சந்த விருத்தம்
1369
கூற தாகமெய் யடிமை தான்எனை
    உடைய கொச்சையர் அதிபதி
வீற தார்தமிழ் விரகன் மேதகு
    புகழி னான்இவன் மிகுவனச்
சேற தார்தரு திரள்க ளைக்கன
    செழுமு லைக்குரி யவர்சினத்
தேறு தானிது தழுவி னாரென
    இடிகொள் மாமுர சதிருமே.
27
அறுசீர்க் கழிநெடில் சந்த விருத்தம்
1370
சதுரன் புகலியர் அதிபன்கூர்
    தவசுந் தரகவு ணியர்தஞ்சீர்
முதல்வன் புகலியர் அதிபன்தாள்
    முறைவந் தடையலர் நகரம்போல்
எதிர்வந்தனர்விறல் கெடவெம்போர்
    எரிவெங் கணைசொரி புரிமின்கார்
அதிர்கின் றனஇது பருவஞ்சே
    ரலர்தம் பதிமதில் இடிமின்னே.
28
எண்சீர்க் கழிநெடில் சந்த விருத்தம்
1371
மின்னு மாகத் தெழிலி யுஞ்சேர்
    மிகுபொன் மாடப் புகலி நாதன்
துன்னு ஞானத் தெம்பி ரான்மெய்த்
    தொகைசெய் பாடற் பதிகம் அன்னாள்
பொன்னு மாநல் தரள முந்தன்
    பொருக யற்கண் தனம்நி றைந்தாள்
இன்னும் ஏகிப் பொருள்ப டைப்பான்
    எங்ஙனே நான் எண்ணு மாறே.
29
பன்னிருசீர்க் கழிநெடில் சந்த விருத்தம்
1372
மாறி லாத பொடிநீ றேறு கோல வடிவும்
    வம்பு பம்பு குழலும் துங்க கொங்கை இணையும்
ஊறி யேறு பதிகத் தோசை நேச நுகர்வும்
    ஒத்து கித்து நடையும் சித்த பத்தி மிகையும்
வீற தேறும் வயல்சூழ் காழி ஞான பெருமான்
    வென்றி துன்று கழலின் ஒன்றி நின்ற பணியும்
தேறல் போலும் மொழியும் சேல்கள் போலும் விழியும்
    சிந்தை கொண்ட பரிசும் நன்றி மங்கை தவமே.
30
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1373
கைதவத்தால் என்னிடைக்கு நீவந்த
    தறியேனோ கலதிப் பாணா
மெய்தவத்தார் உயிரனைய மிகுசைவ
    சிகாமணியை வேணுக் கோனைச்
செய்தவத்தால் விதிவாய்ந்த செழுமுலையார்
    அவனுடைய செம்பொன் திண்டோள்
எய்தவத்தால் விளிவெனக்கென் யாதுக்கு
    நீபலபொய் இசைக்கின் றாயே.
31
மதங்கியார்
எண்சீர்க் கழிநெடில் சந்த விருத்தம்
1374
இசையை முகந்தெழு மிடறுமி திங்கிவன்
    இடுகர ணங்களின் இயல்பும் வளம்பொலி
திசைதிசை துன்றிய பொழில்சுல வுந்திகழ்
    சிரிபுர மன்றகு தமிழ்விர கன்பல
நசைமிகு வண்புகழ் பயிலு மதங்கிதன்
    நளிர்முலை செங்கயல் விழிநகை கண்டபின்
வசைதகு மென்குல மவைமுழு துங்கொள
    மதிவளர் சிந்தனை மயல்வரு கின்றதே.
32
1375
வருகின் றனன்என் றனதுள் ளமும்நின்
    வசமே நிறுவிக் குறைகொண் டுதணித்
தருகும் புனல்வெஞ் சுரம்யான் அமரும்
    மதுநீ இறையுன் னினையா தெனின்முன்
கருகும் புயல்சேர் மதில்வண் புகலிக்
    கவிஞன் பயில்செந் தமிழா கரன்மெய்ப்
பெருகுந் திருவார் அருள்பே ணலர்போற்
    பிழைசெய் தனைவந் ததர்பெண் கொடியே.
33
1376
கொடிநீடு விடையுடைய பெருமானை அடிபரவு
    குணமேதை கவுணியர்கள் குலதீப சுபசரிதன்
அடியேன திடர்முழுதும் அறவீசு தமிழ்விரகன்
    அணியான புகலிநகர் அணையான கனைகடலின்
முடிநீடு பெருவலைகொ டலையூடு புகுவன்நுமர்
    முறையேவு பணிபுரிவன் அணிதோணி புனைவனவை
படியாரும் நிகரரிய வரியாரும் மதர்நயனி
    பணைவார்மென் முலைநுளையர் மடமாதுன் அருள்பெறினே.
34
1377
பெறுபயன் மிகப்புவியுள் அருளுவன பிற்றைமுறை
    பெருநெறி அளிப்பனபல் பிறவியை ஒழிச்சுவன
உறுதுயர் அழிப்பனமுன் உமைதிரு வருட்பெருக
    உடையன நதிப்புனலின் எதிர்பஃறி உய்த்தனபுன்
நறுமுறு குறைச்சமணை நிரைகழு நிறுத்தியன
    நனிகத வடைத்தனது னருவிடம் அகற்றியன
துறுபொழில் மதிற்புறவ முதுபதிமன் ஒப்பரிய
    தொழில்பல மிகுத்ததமிழ் விரகன கவித்தொகையே.
35
பன்னிருசீர்க் கழிநெடில் சந்த விருத்தம்
1378
தொகுவார் பொழில்சுற் றியவான் மதிதோ யுமதிற் கனமார்
தொலையா ததிருப் பொழில்மா ளிகைமா டநெருக் கியசீர்
மிருகா ழிமன்முத் தமிழா கரன்மே தகுபொற் புனைதார்
விரையார் கமலக் கழலே துணையா கநினைப் பவர்தாம்
மகரா கரநித் திலநீர் நிலையார் புவியுத் தமராய்
வரலா றுபிழைப் பினினூ ழியிலக்................ கிதமா
தகுவாழ் வுநிலைத் தெழில்சே ரறமா னபயிற் றுவர்மா
சதுரால் வினைசெற் றதன்மே லணுகார் பிறவிக் கடலே.
36
பாணாற்றுப்படை
நேரிசை ஆசிரியப்பா
1379
கருமங் கேண்மதி கருமங் கேண்மதி
துருமதிப் பாண கருமங் கேண்மதி
நிரம்பிய பாடல் நின்கண் ணோடும்
அரும்பசி நலிய அலக்கணுற் றிளைத்துக்
காந்திய உதரக் கனல்தழைத் தெழுதலின் (5)

தேய்ந்துடல் வற்றிச் சின்னரம் பெழுந்தே
இறுகுபு சுள்ளி இயற்றிய குரம்பை
உறுசெறித் தனைய உருவுகொண் டுள்வளைஇ
இன்னிசை நல்லி யாழ்சுமந் தன்னம்
மன்னிய வளநகர் மனைக்கடை தோறும் (10)

சென்றுழிச் சென்றுழிச் சில்பலி பெறாது
நின்றுழி நிலாவு வன்றுயர் போயொழிந்
தின்புற் றிருநிதி எய்தும் அதுநுன
துள்ளத் துள்ள தாயின் மதுமலர்
வண்டறை சோலை வளவயல் அகவ (15)

ஒண்திறற் கோண்மீன் உலாவு குண்டகம்
உயர்தரு வரையில் இயல்தரு பதணத்துக்
கடுநுதிக் கழுக்கடை மிடைதரு வேலிக்
கனகப் பருமுரட் கணையக் கபாட
விலையக் கோபுர விளங்கெழில் வாயில் (20)

நெகிழ்ச்சியில் வகுத்துத் திகழ்ச்சியில் ஓங்கும்
மஞ்சணை இஞ்சி வண்கொடி மிடைந்த
செஞ்சுடர்க் கனகத் திகழ்சிலம் பனைய
மாளிகை ஓளிச் சூளிகை வளாகத்
தணிவுடைப் பலபட மணிதுடைத் தழுத்திய (25)

நல்லொளி பரந்து நயந்திகழ் இந்திர
வில்லொளி பலபல விசும்பிடைக் காட்ட
மன்னிய செல்வத்துத் துன்னிய பெருமைச்
செம்மலர் மாது சேர்ந்திறை பிரியாக்
கழுமல நாதன் கவுணியர் குலபதி (30)

தண்டமிழ் விரகன் சைவ சிகாமணி
பண்டிதர் இன்பன் பரசமய கோளரி
என்புனை தமிழ்கொண் டிரங்கிஎன் னுள்ளத்
தன்பினை அருளிய ஆண்டகை தன்புகழ்
குறைவறுத் துள்கி நிறைகடை குறுகி (35)

நாப்பொலி நல்லிசை பாட
மாப்பெருஞ் செல்வம் மன்னுதி நீயே.
37
வஞ்சித் துறை
1380
நீதியின் நிறைபுகழ் - மேதகு புகலிமன்
மாதமிழ் விரகனை - ஓதுவ துறுதியே.
38
எண்சீர்க் கழிநெடில் சந்த விருத்தம்
1381
உறுதி முலைதாழ எனையி கழுநீதி
    உனது மனமார முழுவ துமதாக
அறுதி பெறுமாதர் பெயல்த ருதறானும்
    அழகி தினியானுன் அருள்பு னைவதாகப்
பெறுதி இவைநீயென் அடிப ணிதல்மேவு
    பெருமை கெடநீடு படிறொ ழிபொன்மாட
நறைக மழுவாச வளர்பொ ழில்சுலாவும்
    நனிபு கலிநாத தமிழ்வி ரகநீயே.
39
ஆசிரியத் துறை
1382
நீமதித் துன்னி நினையேல் மடநெஞ்சமே
காமதிக் கார்பொழிற் காழி
நாமதிக் கும்புகழ் ஞானசம் பந்தனொடு
பூமதிக் குங்கழல் போற்றே.
40
கட்டளைக் கலிப்பா
1383
போற்றி செய்தரன் பொற்கழல் பூண்டதே
    புந்தி யானுந்தம் பொற்கழல் பூண்டதே
மாற்றி யிட்டது வல்விட வாதையே
    மன்னு குண்டரை வென்றது வாதையே
ஆற்றெ திர்ப்புனல் உற்றதந் தோணியே
    ஆன தன்பதி யாவதந் தோணியே
நாற்றி சைக்கவி ஞானசம் பந்தனே
    நல்ல நாமமும் ஞானசம் பந்தனே.
41
கைக்கிளை மருட்பா
1384
அம்புந்து கண்ணிமைக்கும் ஆன நுதல்வியர்க்கும்
வம்புந்து கோதை மலர்வாடும் - சம்பந்தன்
காமரு கழுமலம் அனையாள்
ஆமிவள் அணங்கலள் அடிநிலத் தனவே.
42
பன்னிருசீர்க் கழிநெடில் சந்த விருத்தம்
1385
தனமுந் துகிலுஞ் சாலிக் குவையுங் கோலக் கனமாடச்
    சண்பைத் திகழ்மா மறையோர் அதிபன் தவமெய்க் குலதீபன்
கனவண் கொடைநீ டருகா சனிதன் கமலக் கழல்பாடிக்
    கண்டார் நிறையக் கொள்ளப் பசியைக் கருதா தெம்பாண
புனைதண் டமிழின் இசையார் புகலிக் கரசைப் புகழ்பாடிப்
    புலையச் சேரிக் காளை புகுந்தால் என்சொற் புதிதாக்கிச்
சினவெங் கதமாக் களிறொன் றிந்தச் சேரிக் கொடுவந்தார்
    சேரிக் குடிலும் இழந்தார் இதனைச் செய்வ தறியாரே.
43
இன்னிசை வெண்பா
1386
யாரேஎம் போல அருளுடையார் இன்கமலத்
தாரேயுஞ் சென்னித் தமிழ்விரகன் - சீரேயும்
கொச்சை வயன்தன் குரைகழற்கே மெச்சி
அடிமைசெயப் பெற்றேன் அறிந்து.
44
பதின்சீர்க் கழிநெடில் சந்த விருத்தம்
1387
அறிதரு நுண்பொருள் சேர்பதி கம்மரன் கழல்மேல்
    அணிதரு சுந்தர மார்தமிழ் விரகன் பிறைதோய்
செறிதரு பைம்பொழில் மாளிகை கலவுந் திகழ்சீர்த்
    திருவளர் சண்பையில் மாடலை கடலொண் கழிசேர்
எறிதிரை வந்தெழு மீனிரை நுகர்கின் றிலைபோய்
    இனமும் அடைந்திலை கூரிட ரோடிருந் தனையால்
உறுதுயர் சிந்தையி னூடுத வினரெந் தமர்போல்
    உமரும் அகன்றன ரோஇது உரைவண் குருகே.
45
கலித்துறை
1388
குருகணி மணிமுன்கைக் கொடியுநல் விறலவனும்
அருகணை குவரப்பால் அரிதினி வழிமீண்மின்
தருகெழு முகில்வண்கைத் தகுதமிழ் விரகன்தன்
கருகெழு பொழில்மாடக் கழுமல வளநாடே.
46
கலி விருத்தம்
1389
நாடே றும்புகழ் ஞானசம் பந்தன்வண்
சேடே றுங்கொச்சை நேர்வளஞ் செய்துனை
மாடே றுந்தையல் வாட மலர்ந்தனை
கேடே றுங்கொடி யாய்கொல்லை முல்லையே.
47
எண்சீர்க் கழிநெடில் சந்த விருத்தம்
1390
முல்லை நகையுமைதன் மன்னு திருவருளை
    முந்தியுறுபெரிய செந்தண் முனிவன்மிகு
நல்ல பொழில்சுலவு தொல்லை யணிபுகலி
    நாதன் மறைமுதல்வன் வேத மலையதனில்
வில்லை இலர்கணையும் இல்லை பகழியுறு
    வேழம் இரலைகலை கேழல் வினவுறுவர்
சொல்லை யிலர்விரக ரல்லர் தழைகொணர்வர்
    தோழி இவரொருவர் ஆவ அழிதர்வரே.
48
வஞ்சித் துறை
1391
வழிதரு பிறவியின்உறு
தொழில்அமர் துயர்கெடுமிகு
பொழிலணி தருபுகலிமன்
எழிலிணை அடிஇசைமினே.
49
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

நம்பியாண்டார் நம்பி அருளியது
பதினோராம் திருமுறை
9. ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை
கொச்சக ஒருபோகு
1392
பூவார் திருநுதல்மேல் பொற்சுட்டி இட்டொளிரக்
கோவாக் குதலை சிலம்புரற்ற - ஓவா
தழுவான் பசித்தானென் றாங்கிறைவான் காட்டத்
தொழுவான் துயர்தீர்க்குந் தோகை - வழுவாமே
முப்பத் திரண்டறமுஞ் செய்தாள் முதிராத (5)

செப்பொத்த கொங்கைத் திருநுதலி - அப்பன்
அருளாலே ஊட்டுதலும் அப்பொழுதே ஞானத்
திரளாகி முன்னின்ற செம்மல் - இருள்தீர்ந்த
காழி முதல்வன் கவுணியர்தம் போரேறு
ஊழி முதல்வன் உவனென்று காட்டவலான் (10)

வீழி மிழலைப் படிக்காசு கொண்டபிரான்
பாழி அமணைக் கழுவேற்றி னான்பாணர்
யாழை முரித்தான் எரிவாய் இடும்பதிகம்
ஆழி உலகத் தழியாமற் காட்டினான்
ஏழிசை வித்தகன்வந் தேனோரும் வானோரும் (15)

தாழுஞ் சரணச் சதங்கைப் பருவத்தே
பாலையும் நெய்தலும் பாடவலான் - சோலைத்
திருவா வடுதுறையிற் செம்பொற் கிழியொன்
றருளாலே பெற்றருளும் ஐயன் - தெருளாத
தென்னவன்நா டெல்லாம் திருநீறு பாலித்த . (20)

மன்னன் மருகல்விடம் தீர்த்தபிரான் பின்னைத்தென்
கோலக்கா வில்தாளம் பெற்றிக் குவலயத்தில்
மாலக்கா லத்தே... ... மாற்றினான் - ஞாலத்து
முத்தின் சிவிகை அரன்கொடுப்ப முன்னின்று
தித்தித்த பாடல் செவிக்களித்தான் -நித்திலங்கள் (25)

மாடத் தொளிரும் மறைக்காட் டிறைக்கதவைப்
பாடி அடைப்பித்த பண்புடையான் - நீடும்
திருவோத்தூர் ஆண்பனையைப் பெண்பனையா கென்னும்
பெருவார்த்தை தானுடைய பிள்ளை - மருவினிய
கொள்ளம்பூ தூர்க்குழகன் நாவா யதுகொடுப்ப (30)

உள்ளமே கோலாக ஊன்றினான் - வள்ளல்
மழவன் சிறுமதலை வான்பெருநோய் தீர்த்த
குழகன் குலமறையோர் கோமான் - நிலவிய
வைகையாற் றேடிட்டு வானீர் எதிரோட்டும்
செய்கையால் மிக்க செயலுடையான் - வெய்யவிடம் (35)

மேவி இறந்தஅயில் வேற்கண் மடமகளை
வாவென் றழைப்பித்திம் மண்ணுலகில் வாழ்வித்த
சீர்நின்ற செம்மைச் செயலுடையான் நேர்வந்த
புத்தன் தலையைப் புவிமேற் புரள்வித்த
வித்தகப் பாடல் விளம்பினான் - மொய்த்தொளிசேர் . (40)

கொச்சைச் சதுரன்றன் கோமானைத் தான்செய்த
பச்சைப் பதிகத் துடன்பதினா றாயிரம்பா
வித்துப் பொருளை விளைக்க வலபெருமான்
முத்திப் பகவ முதல்வன் திருவடியை
அத்திக்கும் பத்தரெதிர் ஆணைநம தென்னவலான் (45)

கத்தித் திரிபிறவிச் சாகரத்துள் ஆழாமே
பத்தித் தனித்தெப்பம் பார்வாழத் தந்தபிரான்
பத்திச் சிவமென்று பாண்டிமா தேவியொடும்
கொற்றக் கதிர்வேல் குலச்சிறையுங் கொண்டாடும்
அற்றைப் பொழுதத் தமணரிடு வெந்தீயைப் (50)

பற்றிச் சுடுகபோய்ப் பாண்டியனை என்னவல்லான்
வர்த்தமா னீசர் கழல்வணங்கி வாழ்முருகன்
பத்தியை ஈசன் பதிகத்தே காட்டினான்
அத்தன் திருநீல நக்கற்கும் அன்புடையான்
துத்த மொழிக்குதலைத் தூயவாய் நன்னுதலி (55)

நித்திலப் பூண்முலைக்கும் நீண்டதடங் கண்ணினுக்கும்
கொத்தார் கருங்குழற்கும் கோலச்செங் கைம்மலர்க்கும்
அத்தா மரையடிக்கும் அம்மென் குறங்கினுக்கும்
சித்திரப்பொற் காஞ்சி செறிந்தபேர் அல்குலுக்கும்
முத்தமிழ்நூல் எல்லாம் முழுதுணர்ந்த பிள்ளையார்க் (60)

கொத்த மணமிதுவென் றோதித் தமர்கள்எல்லாம்
சித்தங் களிப்பத் திருமணஞ்செய் காவணத்தே
அற்றைப் பொழுதத்துக் கண்டுட னேநிற்கப்
பெற்றவர்க ளோடும் பெருமணம்போய்ப் புக்குத்தன்
அத்தன் அடியே அடைந்தான் அழகிதே. (65)
1
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

நம்பியாண்டார் நம்பி அருளியது
பதினோராம் திருமுறை
10. திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை
1393
புலனோ டாடித் திரிமனத்தவர்
    பொறிசெய் காமத் துரிசடக்கிய
    புனித நேசத் தொடுத மக்கையர்
    புணர்வி னாலுற் றுரைசெ யக்குடர்
சுலவு சூலைப் பிணிகெ டுத்தொளிர்
    சுடுவெ ணீறிட் டமணகற்றிய
    துணிவி னான்முப் புரமெரித்தவர்
    சுழலி லேபட் டிடுத வத்தினர்
உலகின் மாயப் பிறவி யைத்தரும்
    உணர்வி லாஅப் பெரும யக்கினை
    ஒழிய வாய்மைக் கவிதை யிற்பல
    உபரி யாகப் பொருள்ப ரப்பிய
அலகில் ஞானக் கடலி டைப்படும்
    அமிர்த யோகச் சிவவொ ளிப்புக
    அடிய ரேமுக் கருளி னைச்செயும்
    அரைய தேவத் திருவ டிக்களே.
1
1394
திருநாவுக் கரசடி யவர்நாடற் கதிநிதி
    தெளிதேனொத் தினியசொல் மடவாருர்ப் பசிமுதல்
வருவானத் தரிவையர் நடமாடிச் சிலசில
    வசியாகச் சொலுமவை துகளாகக் கருதிமெய்
உருஞானத் திரள்மன முருகாநெக் கழுதுகண்
    உழவாரப் படைகையில் உடையான்வைத் தனதமிழ்
குருவாகக் கொடுசிவ னடிசூடத் திரிபவர்
    குறுகார்புக் கிடர்படு குடர்யோனிக் குழியிலே.
2
1395
குழிந்து சுழிபெறுநா பியின்கண் மயிர்நிரையார்
    குரும்பை முலையிடையே செலுந்தகை நன்மடவார்
அழிந்த பொசியதிலே கிடந்தி ரவுபகல்நீ
    அளைந்த யருமதுநீ அறிந்திலை கொல்மனமே
கழிந்த கழிகிடுநாள் இணங்கி தயநெகவே
    கசிந்தி தயமெழுநூ றரும்ப திகநிதியே
பொழிந்த ருளுதிருநா வினெங்க ளரசினையே
    புரிந்து நினையிதுவே மருந்து பிறிதிலையே.
3
1396
இலைமா டென்றிடர் பரியார் இந்திர
    னேஒத் துறுகுறை வற்றாலும்
நிலையா திச்செல்வ மெனவே கருதுவர்
    நீள்சன் மக்கடல் இடையிற்புக்
கலையார் சென்றரன் நெறியா குங்கரை
    அண்ணப் பெறுவர்கள் வண்ணத்திண்
சிலைமா டந்திகழ் புகழா மூருறை
    திருநா வுக்கர சென்போரே.
4
1397
என்பட்டிக் கட்டிய இந்தப்பைக் குரம்பையை
    இங்கிட்டுச் சுட்டபின் எங்குத்தைக் குச்செலும்
முன்பிட்டுச் சுட்டிவ ருந்திக்கெத் திக்கென
    மொய்ம்புற்றுக் கற்றறி வின்றிக்கெட் டுச்சில
வன்பட்டிப் பிட்டர்கள் துன்புற்றுப் புத்தியை
    வஞ்சித்துக் கத்திவி ழுந்தெச்சுத் தட்டுவர்
அன்பர்க்குப் பற்றிலர் சென்றர்ச்சிக் கிற்றிலர்
    அந்தக்குக் கிக்கிரை சிந்தித்தப் பித்தரே
5
1398
பித்தரசு பதையாத கொத்தைநிலை உளதேவு
    பெட்டியுரை செய்துசோறு சுட்டியுழல் சமண்வாயர்
கைத்தரசு பதையாத சித்தமொடு சிவபூசை
    கற்றமதி யினனோசை இத்தரசு புகழ்ஞாலம்
முத்திபெறு திருவாள னெற்றுணையின் மிதவாமல்
    கற்றுணையில் வருமாதி ................
பத்தரசு வசைதீர வைத்தகன தமிழ்மாலை
    பற்பலவு மவையோத நற்பதிக நிதிதானே.
6
1399
பதிகமே ழெழுநூறு பகருமா கவியோகி
    பரசுநா வரசான பரமகா ரணவீசன்
அதிகைமா நகர்மேவி அருளினால் அமண்மூடர்
    அவர்செய்வா தைகள்தீரும் அனகன்வார் கழல்சூடின்
நிதியரா குவர்சீர்மை உடையரா குவர்வாய்மை
    நெறியரா குவர்பாவம் வெறியரா குவர்சால
மதியரா குவர்ஈசன் அடியரா குவர்வானம்
    உடையரா குவர்பாரில் மனிதரா னவர்தாமே.
7
திருவடி வகுப்பு
1400
தாமரைநகும் அகவிதழ் தகுவன
    சாய்பெறுசிறு தளிரினை அனையன
    சார்தருமடி யவரிடர் தடிவன
    தாயினும் நல கருணையை உடையன
தூமதியினை ஒருபது கொடுசெய்த
    சோதியின்மிகு கதிரினை யுடையன
    தூயனதவ முனிவர்கள் தொழுவன
    தோமறுகுண நிலையின தலையின
ஓமரசினை மறைகளின் முடிவுகள்
    ஓலிடுபரி சொடுதொடர் வரியன
    ஓவறுமுணர் வொடுசிவ வொளியன
    ஊறியகசி வொடுகவி செய்தபுகழ்
ஆமரசுயர் அகநெகு மவருள
    னாரரசதி கையினர னருளுவ
    னாமரசுகொ ளரசெனை வழிமுழு
    தாளரசுதன் அடியிணை மலர்களே.
8
1401
அடிநாயைச் சிவிகைத் தவிசேறித் திரிவித்
    தறியாவப் பசுதைச் சிறியோரிற் செறியுங்
கொடியேனுக் கருளைத் திருநாவுக் கரசைக்
    குணமேருத் தனைவிட் டெனையாமொட் டகல்விற்
பிடியாராப் பெறுதற் கரிதாகச் சொலும்அப்
    பிணநூலைப் பெருகப் பொருளாகக் கருதும்
செடிகாயத் துறிகைச் சமண்மூடர்க் கிழவுற்
    றதுதேவர்க் கரிதச் சிவலோகக் கதியே.
9
1402
சிவசம் பத்திடைத் தவஞ்செய்து
    திரியும் பத்தியிற் சிறந்தவர்
    திலகன் கற்றசிட் டன்வெந்தொளிர்
    திகழும் பைம்பொடித் தவண்டணி
கவசம் புக்குவைத் தரன்கழல்
    கருதுஞ் சித்தனிற் கவன்றிய
    கரணங் கட்டுதற் கடுத்துள
    களகம் புக்கநற் கவந்தியன்
அவசம் புத்தியிற் கசிந்துகொ
    டழுகண் டத்துவைத் தளித்தனன்
    அனகன் குற்றமற் றபண்டிதன்
    அரசெங் கட்கொர்பற் றுவந்தறு
பவசங் கைப்பதைப் பரஞ்சுடர்
    படிறின் றித்தனைத் தொடர்ந்தவர்
    பசுபந் தத்தினைப் பரிந்தடு
    பரிசொன் றப்பணிக் குநன்றுமே.
10
1403
நன்று மாதர நாவினுக் கரைசடி
    நளினம் வைத்துயின் அல்லால்
ஒன்று மாவது கண்டிலம் உபாயமற்
    றுள்ளன வேண்டோமால்
என்றும் ஆதியும் அந்தமும் இல்லதோர்
    இகபரத் திடைப்பட்டுப்
பொன்று வார்புகுஞ் சூழலிற் புகேம்புகிற்
    பொறியிலைம் புலனோடே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com